«

»

ஆவா குழு உருவாக்கமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புத்துயிரும்.

aava
அயோக்கியத்தனமான அரசியல் தமிழர் மீது மீண்டும் பாச்சப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாம்ராஜ்யம் புலிகள் தடை தொடரும் என அறிவித்தது.
இதன் பின்னணியில் தான் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஆவா குறுப் புத்துயிராக்கமும் பயங்கரவாத தடைச்சட்ட மும் மிக அழகாக இராணுவ புலனாய்வு நிகழ்ச்சி நிரல்களுடன் கருக்கட்டியுள்ளது.
ஆவா குழுவுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கும் ஏன் முடிச்சு போடப்பட்டது?
ஆவா குழுவுக்கு ஏன் பயங்கரவாத முலாம் பூசப்பட்டது?
இதன் சதித்திட்டங்கள் என்ன?
உந்தும் சக்திகள் யார்?
நல்லாட்சியின் கபட நோக்கம் என்ன?
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும் யாழில் நடக்கும் சமூக விரோத செயற்பாட்டிற்கும் ஏன் முடிச்சுப் போடப்படுகின்றது.பயங்கரவாத தடைச்சட்டம் புலிகள் இயக்கத்திற்கான சிறப்புச் சட்டம்
தமிழர் மீதான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை திணிப்பதற்கு அல்லது நல்லாட்சி அரசாங்கம் காலத்தை கடத்துவதற்கு மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலை தூக்கிவிட்டது என்ற தோற்றப்பாட்டினை உருவாக்கி ரணில் நல்லாட்சி அரசு தனது ஆட்சிக்காலத்தை கடத்துவதற்கு திட்டம் தீட்டி ஒரு நாடகம் ஆவா குழுவின் பெயரால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆவா குறுப் நாடகத்திற்கான திரைக்கதை வசனம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. சட்ட நடவடிக்கை மற்றும் தீர்ப்புகளும் ஏக்கனேவே வரையப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து புலிகள் நிதி அனுப்புவதாகவும், முன்னாள் புலிகள் அதனை பயன்படுத்தி ஆவா குறுப் என்ற பெயரில் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாகவும், மீண்டும் புலிகள் பயங்கரவாத கலாச்சாரத்தை உருவாக்குவதாகவும் திட்டம் வரையப்பட்டுள்ளது.
எனவே வடக்கில் இராணுவம், பொலிஸ், அதிரடிப்படை நிலை நிறுத்தப்படும். இதற்கான தடயங்களை உருவாக்கும் முயற்சியில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயாவினதும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாவினதும் வாய் பூட்டப்பட்டு அல்லது அவர்கள் பாதுகாக்கப்படும் நிகழ்ச்சி நிரல் தான் ஆவா குறுப்.
ஆவா குறுப் விவகாரத்தை கையில் எடுத்த T.I.D பயங்கரவாத விசாரணைப் பிரிவு.
புலிகள் வெளிநாட்டில் இருந்து நிதி அனுப்பினார்களா? சந்தேக நபர்கள் முன்னால் போராளிகளா? என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் விசாரணை வியூகம் அமைந்துள்ளது.
யாழ் குடா நாட்டில் முன்னால் போராளிகள் மீது குறிவைக்கப்படுகின்றது. T.I.D யும் அதிரடிப்படையும் இணைந்து யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைப்புக்களையும் கைதுகளையும் நடாத்துகின்றனர்.
கோப்பாய் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எனவும், இவர்கள் வெளிநாடு ஒன்றில் இருந்தே ஆவா குழு இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை உறுதி செய்யும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெருவித்தார்.
வெளிநாட்டிலிருந்து எந்த நரிக்கூட்டம் ஆவா குழுவுக்கு பணம் வழங்குகின்றது. என்பதனை கண்டறிய T.I.D யாழ்ப்பாணத்தில் சிவில் உடையில் களம் இறக்கப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்கையில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தயார்படுத்தப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளைக் கொண்டும் ஆவா குறுப் இயக்கப்படுவதாகவும் T.I.D தகவல் உண்டு.
இது முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் புலனாய்வு வலைப்பின்னலின் சதி நடவடிக்கை என்ற தோரணையிலும் பொலிஸ் தரப்பின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆவா குழு சமூக விரோத குழு அல்ல.
இது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு குழு
அது அரச பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து இயங்கும் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப்படுகின்றது.
ஆவா குழு என்பது புலிப் பூச்சாண்டி காட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு குழு யாழ்ப்பாணத்தை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருப்பதற்காக அரச தரப்பால் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு ஆகும்.
ஆவா குழு விசாரணை என்பது யாழ் மாவட்டத்தில் வைத்து விசாரிக்கப்பட வேண்டிய விசாரணை. யாழ் மாவட்ட பொலிசாரும் யாழ் மாவட்ட நீதிமன்றமும் யாழ் மாவட்ட குற்றப்புலனாய்வு திணைக்கழகமும் தேவை ஏற்பட்டால் யாழ் மாவட்ட T.I.D யும் உண்மையில் செய்ய வேண்டிய பணி.
ஆனால் இதன் உண்மைத்தன்மையை மூடி மறைப்பதற்காகவும் அரச சதிச் செயல் வெளித்தெரியாமல் இருப்பதற்காகவும் ஆவா குழுக் கைதிகள் கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றனர். கொழும்பில் வைத்து கைது செய்யப்படுவதாக நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் பிரதான சந்தேக நபர் எனப்படும் ஆவா குழு தலைவர் சக்திவேல் நாதன், நிசாந்தன் அல்லது நிசா விக்டர் கொழும்பில் கைது செய்யப்பட்டதும் இவர்களுடன் தொடர்புபட்டவர்களை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் விசாரிக்கப்படுவார்கள் என கூறப்படுவதும் வேடிக்கையாகவே உள்ளது.
அதியுயர் விசாரணை என்றால் அது T.I.D மட்டத்தில் நடைபெறும் அனால் இது IG மட்டத்தில் நடைபெறுவது வேடிக்கை ஆக உள்ளதுபுலிகளின் மூத்த தளபதிகள் கைது செய்யப்பட்டபோது கூட பொலிஸ் மா அதிபர் பதவியில் இருப்பவர்கள் புலித் தளபதிகளை அவர்களின் சந்தோசத்திற்காக பார்வையிட்டு சிங்களவர்களின் உயரிய பண்பாட்டின்படி நட்பு ரீதியாக கலந்துரையாடிவிட்டுச் செல்வது தான் மரபும், சம்பிரதாயமும்.
ஆனால் சிறு மழைக்கு முளைக்கும் ஆவா குழு காவாளிகளை பொலிஸ் மா அதிபரே நேரடியாக விசாரணை செய்வார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சினுங்குவதன் பின்னணி எதோ ஒன்றை மறைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொலிஸ் திணைக்களம் முயற்சிக்கின்றது என்றே கூறப்படுகின்றது.
ஆவா குழு விசாரணைகள் T.I.Dயின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் நீதிமன்றத்திற்கு விசாரணை கொண்டுசெல்லத் தேவையில்லை. 18 மாதம் தேவைப்பட்டால் 21 மாதம் நீதி மன்றம் கொண்டு செல்லாமல் கொழும்பு 6ம் மாடியிலும் பூசாவிலும் வைத்து பொலிசாரே விசாரணை செய்யலாம்.
குற்றத்தின் உண்மைத்தன்மையும், பின்புலமும் வெளியுலகத்திற்கு மறைக்கப்பட்டு அரசாங்கள் எதை சொல்ல விரும்புகின்றதோ அதை பொலிஸ்தரப்பு சொல்லும். அதுவே ஊடகங்களுக்கு செய்தியாக வரும். விரும்பியதை மறைக்கலாம்விரும்பியதை செல்லலாம்.
T.I.D விசாரணை பீடத்திற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் செல்வது இல்லை.
புலிகளின் பெயரால் ஆவா குழு உருமாற்றப்பட்டு, ஊடக அறிக்கையாக்கப்பட்டு, பொலிசாரின் கண்டுபிடிப்பாக்கப்பட்டு உலகத்தின் முன் புலிகள் புத்துயிர் பெற்றுவிட்டார்கள், என்ற அறிக்கை வரும்.
அவர்களை அடக்க வேண்டும், அளிக்க வேண்டும் என்ற பாணியில் தமிழர்களை அடக்கவும், அழிக்கவும் சிங்கள அரசுகள் புத்தி சாதுரியமாக சதித் திட்டங்களை தீட்டி காய்களை நகர்த்துகின்றார்கள்.காய்களை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி நகர்த்துகின்றார்கள் என்பதை தமிழ் அரசியல் வாதிகளால் புரிந்து கொள்வதற்கு கூட அரசியல் சாணக்கியம் அற்றவர்களாக உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் புலிகள் மீதான தடை நீக்க அறிவிப்பின் எதிரொலி தான் ஆவா குழு உருவாக்கமும் அதன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் ஏவப்பட்டிருப்பதும்.
ரணில் ஐயாவின் குள்ளநரி விளையாட்டினை தமிழர்களாகிய நாம் பார்த்துக்கொண்டிருப்போம்
ரசித்துக்கொண்டிருப்போம், சிரித்துக்கொண்டிருப்போம்,
எங்களால் என்ன செய்ய முடியும்?
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாம்ராஜ்யம் புலிகள் தடை தொடரும் என அறிவித்தது.
இதன் பின்னணியில் தான் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஆவா குறுப் புத்துயிராக்கமும் பயங்கரவாத தடைச்சட்டமும் மிக அழகாக இராணுவ புலனாய்வு நிகழ்ச்சி நிரல்களுடன் கருக்கட்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை பின் தள்ளுவதற்காண ஒரு சதி திட்டம் ஆவா குழு உருவாக்கமும் அதன் மீது பயங்கரவாத தடைச் சட்டமும் ஆகும்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10373

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.