«

»

பிணைமுறி அறிக்கை சரியா, தவறா? குழப்பும் ரவி!

ravi
பிணைமுறி விவகாரம் குறித்து ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கையளித்திருக்கும் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அறிக்கையில், வங்கிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார்
ஐ.தே.க. வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று கொழும்பு ப்ளூமெண்டோல் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“குடும்பம் என்று ஒன்று இருந்தால் அங்கே குழப்பம் என்ற ஒன்றும் இருக்கும் என்பார்கள். இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை மிகுந்த சிரமத்தின் மத்தியில் நடத்திச் செல்கின்றன.
“இப்போது, தனி யானை (ஐ.தே.க. பற்றி மட்டும்) பற்றிப் பேசும்போது சிலருக்கு வலிப்பு வருகிறது. அதன் வெளிப்பாடாக, வரலாற்றைச் சிதைத்து யானையை அச்சுறுத்த எண்ணுகிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. ஒருபோதும் அச்சத்துடன் ஆட்சி நடத்தாது. இவ்வாறு எங்களைக் கோபப்படுத்த முயலும், மக்களை ஏமாற்ற முயலும் யுகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவே நாம் முயற்சிக்கிறோம்.
“இந்த ஆட்சியின் வரப்பிரசாதங்கள் அனைத்தும் எமது கூட்டணிக் கட்சிக்கு மட்டுமே செல்கிறது. ஒரு பக்கம் நாம் உழைக்க, மறு பக்கம் அவர்கள் அனுபவிக்கிறார்கள். இதற்கு மத்தியில் எமது கட்சியை அச்சுறுத்தவும் முயற்சிக்கிறார்கள்.
“எம்மோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சி பிரதான தேர்தலில் எங்களுடன் கைகோர்த்துக்கொள்கிறது; ஏனைய தேர்தல்களில் தனியே போட்டியிடுகிறது. இவ்வாறான கடும்போக்குக் கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கூட்டத்தின் பின், பிணைமுறி குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
கேள்வி: உங்கள் வீட்டுக்கு அர்ஜுன் அலோஷியஸ் வாடகை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறாரே?
ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலப்பிரதியை எமக்குத் தருமாறு கேட்டிருக்கிறோம். இதுவரை அது நம் கைகளுக்குக் கிடைக்கவில்லை. அது கிடைத்த பின் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால் ஆணைக்குழு அறிக்கையில் பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி: விலைமனுக் கோரலில் குறைவான மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகளிடம் நீங்கள் ஏன் கூறினீர்கள்?
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், எமக்கும் வங்கிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்?
கேள்வி: இவ்விவகாரத்தில் உங்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டதும் நீங்கள் பதவி விலகிவிட்டீர்கள். இப்போது பிரதமருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் பிரதமரும் பதவி விலகுவாரா?
அதற்காகத்தான் இம்மாதிரியான சூழ்ச்சி வேலைகளைச் செய்கிறார்கள். பிரதமர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை. நானும் ஒரு தவறும் செய்யவில்லை. தனிப்பட்ட தேவைகளுக்காக எம்மை இலக்கு வைத்துத் தாக்குகிறார்கள். ஆனால் அதற்கு நாம் பயப்படப் போவதில்லை.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11045

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.