«

»

விக்கியின் செயற்பாட்டினால் தென்னிலங்கையில் குழப்பம்

Vigneshwaran
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை படையினர் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தவாறான எண்ணப்பாடுகளையும் விதைத்திருக்கின்றது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் பிரச்னையாக உள்ளது. முதலமைச்சர் ஆழ¬மாக சிந்திக்கவேண்டும் இல்லாவிடின் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரி்த்துள்ளார்.
வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
எங்களுடைய நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தி செல்ல முடியாமல் பல மாவட்டங்கள் இருக்கின்றன. எங்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது எமக்கென்று ஒரு இலக்கு இருந்தது. அந்த இலக்கானது பொருளாதார ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தில் எல்லோரும் மதிக்கப்பட வேண்டும் என்ற இலக்ககவே அதுவாக இருந்தது. ஆனால் எமது அரசியல் தலைவர்களுக்கு இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாமல் போனது.
இதன் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் தென்பகுதியில் பெரும் பகுதி பொருளாதார வளத்தை சுவீகரித்து சுப போகமாக வாழ்ந்த ஒருபகுதியினருக்கும் ஏனையவர்களிற்கும் இடையில் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. எமது அரசியல் வரலாற்றை மீட்டு பார்க்கின்ற போது 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி, அதன்பின் 88மற்றும் 89 இல் ஏற்பட்ட ஜே.வி.பி.யின் கிளர்ச்சி என்பவற்றிற்கு நாம் முகம் கொடுத்திருந்தோம்.
இது போலவே வட புலத்திலும் பொருளாதார ஏற்றத்தாழ்வே இருந்தது. இதன் காரணமாக சுகபோகம் அனுபவித்தவர்களிற்கும் ஏழை மக்களிற்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவையில்லை.
கடந்த காலங்களில் பிரபாகரன் தலைமையில் பல கிளர்ச்சிகள் இடம்பெற்றன. அந்த கிளர்ச்சிகளை தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாக நான் கூற விரும்பவில்லை.
அது வடபுலத்திலே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும் அல்லது அரசியல் தலைமையினருக்கும் சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அல்லது பாரபட்சத்தை நீக்குவதற்காக இடம்பெற்றதாகவே நான் கருதகிறேன். இந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக வடபுலத்தில் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அவை அவ்வப்போது பெருவாரியாக எழாமல் நீக்கப்பட்டிருந்தன.
அந்த கிளர்ச்சிகள் ஒரு இனவதாக கிளர்ச்சியாக தோற்றம் பெற காரணம் அப்போது இருந்த அரசியல் தலைமை.யேயாகும். அப்போது தலைமை வகித்த அமிர்தலிங்கத்தின் கருத்துக்களை ஒட்டியே அவை ஒரு இன ரீதியான பிரச்சனையாக பருணமிக்க காரணமாய் இருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பாக பார்க்கின்ற போது அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் தங்களது சமூகத்திற்கு பொறுப்பு கூறுவதோடு தங்களது சமூகத்தின் சுபீட்சத்திற்கு வழிசமைப்பதை விடுத்து பயங்கரவாத தலைவரான பிரபாகரனிடம் இதன் தலையெழுத்தை மாற்றுவதற்கான பொறுப்பை வழங்கியிருந்ததன் ஊடாக கடந்த 30 வருட காலமாக நாங்கள் பெருவாரியான இழபபுக்களை சந்திக்க நேர்ந்தது.

அமிர்தலிங்கத்தின் ஆசீர்வாதத்தோடு துப்பாக்கியை கையில் எடுத்த பிராபகரன் பேராபத்து மிக்க தலைமைத்துவத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் இருந்த பல அரசியல்வாதிகளினுடைய உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக பல அழிவுகளை நாம் சந்தித்திருந்தோம். அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் தாம் அடைய வேண்டிய இலக்குகளை தவற விட்டிருந்தார்கள்.
நாட்டில் சமாதானம் நிலவுகின்ற காலப்பகுதியில் தாய், தந்தை இறந்தால் பிள்ளைகள் அவர்களது உடல்களை மயானத்திற்கு எடுத்துச்சென்றிருந்தார்கள். ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தாய், தந்தையர் தங்களது பிள்ளைகளினதும் குழந்தைகளினதும் உடல்களை மயானங்களிற்கு எடுத்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது. இவ்வாறான நிலைமையின் தாக்கம் தற்போதும் காணப்பட்டு கொண்டிருக்கின்றமையால் இந் நிலைமையை நாம் 24 மணி நேரத்திற்குள் மாற்றியமைக்க முடியாது.
யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு 09 வருடம் கடந்திருக்கின்ற நிலையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் பல்வேறுபட்ட பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரச நிர்வாகிகளாகவோ அரச பிரமுகர்களாகவோ இராணுவ தரப்பினராகவோ பாதுகாப்பு தரப்பினராகவோ இருக்கலாம். அனைவரிடமும் கொடுக்கப்பட்ட பொறுப்பு சமாதானம், சகவாழ்வு, சுபீட்சம் என்பதை கட்டியெழுப்புவதாகும்.
சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திய யுத்தமாக இருந்தால் அதில் இருந்து விமோசனம் பெற வேன்டுமாயின் எங்களுடைய சமூக ஒற்றுமை மேம்படுத்தப்பட வேண்டும். மற்றும் பொருளாதார சமப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாங்கள் சமாதானத்தையும் சக வாழ்வையும் ஏற்படுத்துகின்ற நிலைமையில் ஊடகங்கள் அரசியல் பிளவுகளை ஏற்படுத்துகின்ற கருத்துக்களை தாங்கி வருகின்றன.
கொழும்பில் மாத்திரம் அதிகாரங்கள் இருக்க கூடாது என்பதற்காகவே நாங்கள் மாகாணசபைகளை உருவாக்கியிருந்தோம். ஆனால் இன்று மாகாண சபையில் இருக்கின்றவர்கள் இந்த இலக்குகளை அடையும் நோக்கோடு இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியான விடயம். கடந்த யுத்தத்தினால் பல இன்னல்களை சந்தித்த மாகாணமாக இந்த வடமாகாணம் உள்ளது. ஆனால் இந்த மக்களின் வாழ்வாதராத்தை உயர்த்துவதற்கும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை தெளிவாக காண முடியாதுள்ளது. தமது பதவிகளை தக்கவைப்பதற்காக மற்றவர்களைகுறை கூறிக்கொண்டு அதற்கான வழிவகைகளை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர இந்த மக்களின் சுபீட்சத்திற்காகவும் சமூக மேம்பாட்டிற்காகவும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இன்று வடபுலத்தில் உள்ள இளைஞர், யுவதிகளினுடைய வாழ்வு பாரிய கேள்விக்குறியாக மாறியுள்ளதோடு போதைபொருள் மற்றும் சிகரெட்டிற்கு ஆட்கொள்ளப்பட்டவர்களாக காணுகின்றோம்.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் ஒரு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதை தமிழ் மக்கள் தினம் என்று செய்திருந்தார்கள். இதனால் தென்னிலங்கையில் உள்ள மக்கள் விசனத்துக்கு ஆளாகியுள்ளதோடு குழப்ப நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை இராணுத்தினருக்கோ பாதுகாப்பு படையினருக்கோ சிங்கள மக்களுக்கோ பல தவறான எண்ணப்பாடுகளை விதைக்கின்ற செயலாகவே அமைந்திருக்கின்றது என்பதனை நாம் காண்கின்றோம்.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலிக்கடாக்களாக வைத்துக்கொண்டு பிரபாகரன் யுத்தத்தை நடாத்தியிருந்தார்.
ஒருகாலத்தில் வடபுலத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லீம் மக்கள் 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டார்கள்.இன்றைய நிலையில் இப்பிரதேசத்திலே வாழ்ந்து வரும் தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு முப்படையினரே காரணம் என்பதை யாவரும் அறிவர்.
இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் பிரச்னையாக உள்ளது. இராணுவத்தை பொறுத்தமட்டில் அந்த பிரதேச மக்களோடு நல்லுணர்வை பேணுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கி வருகிறார்கள். இறுதி போரில் கூட 3 இலட்சம் மக்களை முப்படையினர் பாதுகாப்பாக மீட்டிருந்தனர் அதனாலே இன்று சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் அந்த காலகட்டத்தில் தென்பகுதியில் இருந்த விக்கினேஸ்வரன் அங்கிருந்தவர்களுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருந்தார். யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து கூட வைக்கவில்லை. அப்பாவி மக்களுக்காக ஒரு வசனம் கூட பேசவில்லை.எனவே முதலமைச்சர் அவர்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும் அல்லாது விடில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் பிரபாகரன் பிறந்த தினத்தை இங்கு கொண்டாடினால் சிங்கள மக்கள் அவரின் மரண தினத்தை தென்பகுதியில் கொண்டாடும் நிலையும் இருக்கிறது. பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினால் தென்பகுதியில். விஜயவீரவின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் அந்த மக்களும் அனுஸ்டிக்கவேண்டும் அல்லவா. அவ்வாறு இருக்கும் போது நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டமைப்பது.
வடக்கிற்கு மாகாணசபை மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். ஆனால் எதையுமே செய்யாத நிலைமை எதிர்காலத்தில் அந்த மக்கள் இன்னும் பல பிரச்னைகளிற்கு முகம்கொடுக்கும் நிலமையையே ஏற்படுத்தும் என்று கூறினார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12038

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.