«

»

பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர்

CV-Vigneshwaran-yaalaruvi
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடந்து முடிந்த வடமாகாண விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, இங்கே வீற்றிருக்கும் கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, திணைக்களத் தலைவர்களே, விளையாட்டுப் பகுதியின் பயிற்றுவிப்பாளர்களே, மத்தியஸ்தர்களே, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையேயான தடகளப் போட்டிகள் மாகாண ரீதியில் நேற்றும் இன்றும் நடைபெற்று நிறைவடைய உள்ள இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
இன்றைய வெற்றியாளர்களுக்குப் பாராட்டுக்கள்! இன்றைய தோல்வியாளருக்கும் எனது பாராட்டுக்கள்! அதாவது நீங்கள் பதக்கமோ பரிசோ பெற்றால் என்ன பெறவில்லையாயினும் நீங்கள் யாவருமே வெற்றியாளர்களே. ஒலிம்பிக்ஸ் சம்பந்தமாக ஒரு கூற்று உண்டு. பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல என்பதே அது. தொடர்ந்து விளையாட்டுக்களில்,தடகளப்போட்டிகளில் ஈடுபட்டு வருவது உங்கள் உடல்களைச் சீரான நிலையில் வைத்திருப்பன. உள்ளத்தை மகிழ் நிலையில் வைத்திருப்பன. அறிவைக் கூர்மையாக்கி வைத்திருப்பன.
விளையாட்டுக்களில் முக்கியமாக இணைந்தாடும் விளையாட்டுக்கள் அவற்றை விளையாடும் மாணவரிடையே பரஸ்பரம் மதிப்பையும் மாண்பையும் ஏற்படுத்துகின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். ஆகவே நாங்கள் மற்றவர்களுடன் உறவு கொண்டிருப்பது எமக்கு அவசியம். அந்தவகையில் சேர்ந்து, இணைந்து செயல்களில் ஈடுபடுவது மகிழ்வையும் மன நிறைவையும் தர வல்லன.
ஆகவே விளையாட்டுக்களில் வெற்றி தோல்வியன்று முக்கியம். ஆனால் சேர்ந்து விளையாட்டுக்களில், தடக்களப் போட்டிகளில் பங்குபற்றுவதுதான் முக்கியம் அதுதான் மன நிறைவைத்தரும்.
வடபகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் விளையாட்டு தடகளப் போட்டி நிகழ்வுகளில் கூடிய திறமைகளை காட்டக்கூடியவர்களாக உடல்வலுவையும் மனவலுவையும் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் சில காலங்கள் ஏற்பட்ட தடைகள்,தடங்கல்கள் காரணமாக ஒரு சிறு பின்னடைவு நிலை காணப்பட்ட போதும் தற்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன என்றே நம்புகின்றேன்.
இன்றைய விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு தடகள போட்டிகளில் பங்குபற்றி வெற்றிவாகை சூடிய போட்டியாளர்கள் தமக்குரிய பரிசில்களை பெறுவதற்காக இங்கே கூடியிருக்கின்றார்கள். அதே போன்று வெற்றி வாய்ப்பை மிகக் குறுகிய விநாடித்துளிகளில் நழுவவிட்டவர்களும் சற்று சோர்வடைந்த நிலையில் வீற்றிருக்கின்றீர்கள். இவ்வாறான இருசாராருக்கும் அறிவுரை ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் கூறலாம் என எண்ணுகின்றேன்.
இங்கு அமர்ந்திருக்கின்ற அனைத்துப் போட்டியாளர்களும் வெற்றியாளர்களே, ஏனெனில் மாகாண மட்டத்தில் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நீங்கள் பல்வேறு மட்டங்களில் அதாவது பிரதேச மட்டம், மாவட்ட மட்டம்,ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்த போட்டியாளர்களே இன்றைய மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்கள். எனவே நீங்கள் அனைவரும் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளீர்கள். எனவேதான் நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களே எனக் குறிப்பிட்டேன். மேலும் இன்றைய போட்டி நிகழ்வின் போது வெற்றி பெற்ற வீரர்கள் போட்டி நடைபெற்ற அத்தருணத்தில் உடல் ஆரோக்கியம்,மன வலிமை ஆகியன சீராக அமைந்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
அதே போன்று வெற்றியை நழுவவிட்டவர்கள் அக் கணத்தில் உடலின் சோர்வு அல்லது முறையான பயிற்சியின்மை இயல்பாகவே ஏற்படக்கூடிய மனப்பயம் ஆகிய காரணங்களினால் வெற்றி வாய்ப்புக்களைத் தவறவிட்டிருக்கலாம். நீங்கள் அனைவரும் உங்கள் திறன்களை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்வதற்கு எவ்வகையான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். என்னென்ன விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற பல விடயங்களை இவ் ஆண்டில் நடைபெற்ற போட்டிகளினூடாக தெரிந்து வைத்திருப்பீர்கள். எனவே வெற்றி வாகை சூடியவர்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சிக் களிப்பில் வாளாதிருந்துவிடாது தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு உங்கள் வெற்றி இலக்குகளை உங்களுடையதாகவே தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபடல் வேண்டும்.
அதே போன்று வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கு ஏற்ற வகையில் கடுமையான தொடர் பயிற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும். விளையாட்டு நிகழ்வுகள் வெறுமனே உடலுக்கு வலுகூட்டுவது மட்டுமாக இருக்கமுடியாது.
சிறந்த விளையாட்டு வீரர்கள் தமது பிரத்தியேக வாழ்விலும் சிறப்பான பழக்கங்களைக் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். அவர்கள் வன்மையான குணம் படைத்தவர்களாக அல்லாமல் எல்லா விடயங்களையும் மென்மையாக கையாளக்கூடிய பக்குவத்தை கொண்டிருப்பார்கள். அத்துடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு, நட்புரிமையுடன் பழகும் தன்மை,நண்பர்களையும் தட்டிக் கொடுத்து மேல்நிலைக்கு கொண்டுவர முயலுகின்ற பல நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும் இருப்பதற்கு இவ் விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவும்.
இதனால்த்தான் ஒரு நல்ல பண்பட்ட சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் இவ்வாறு பல சிறப்பான நிகழ்வுகளை பெருந்தொகை நிதிச் செலவீனங்களுடன் முன்னெடுத்து வருகின்றது. பங்கு பற்றல் என்பது உண்மையான ஒரு விளையாட்டு வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சமாக கொள்ளப்படலாம். வெற்றி தோல்விக்கு அப்பால் பங்குபற்றல் என்ற நிலைப்பாடு முக்கியமானதாகும். முடிந்த மட்டும் முயற்சி செய்பவன் இறுதியில் வெற்றியாளனாவான்.
எமது விளையாட்டு வீர வீராங்கனைகள் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக பல சாதனைகளை தேசிய மட்டத்தில் புரிந்துவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதே போன்று ஏனைய தடகள விளையாட்டு நிகழ்வுகளிலும் மிகக் கூடிய பயிற்சிகளை முறையான பயிற்சியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு குறுந்தூர ஓட்டமாக இருந்தால் என்ன, நீண்டதூர ஓட்டமாக இருந்தால் என்ன, உயரம் பாய்தல், நீளம் பாய்தல்,குண்டு போடுதல்,தட்டெறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு கடுமையான பயிற்சிகளின் மூலம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை குவிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் அனைவரும் இன்றிலிருந்தே பாடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் இந்த வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்காக அல்லும் பகலும் சம்பளத்துடன் கூடிய அல்லது சம்பளமற்ற நிலையில் கூட பயிற்சிகளை வழங்கி இவர்களின் தரங்களை மேலுயர்த்துவதற்காக பாடுபடுகின்ற அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கும் எனதுமனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியார்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12089

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.