«

»

நாடு மீண்டும் பின் நோக்கி செல்ல நேரிடும்! – இரா.சம்பந்தன்

sam
சிங்கள தலைவர்கள் சிலர் கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் நாடு மீண்டும் பின் நோக்கி செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மக் தோன்பெரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழு, இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “ நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நாட்டை முன்னேற்றுவதற்கு, சிறிலங்கா அதிபரும், பிரதமரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது முக்கியம்.
பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் ஒரு அரசியல்யாப்பின் தேவையையும் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பது தான் பிரச்சினையாகும்.
சில சிங்கள தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியாயமாக- சமத்துவமாக நோக்குவதனை விடுத்து, கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இவ்வாறே தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்னோக்கி செல்ல நேரிடும்.
சிறிலங்கா அதிபரும் பிரதமரும் இதய சுத்தியுடன் சிங்கள மக்களிடம் சென்று புதிய அரசியல்யாப்பிற்கான தேவையினை எடுத்துக் கூற வேண்டும்.
1988 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் சிறிலங்கா அதிபரும் ம் இது தொடர்பில் முயற்சிகளை எடுத்து வந்துள்ளமையினால், இந்த கருமங்களை விளங்கிக் கொள்வதில் சிங்கள மக்களுக்கு சிரமம் இருக்காது.
நாம் பிளவுபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே ஒரு தீர்வினை எதிரிபார்க்கிறோம். அதிகாராப் பகிர்வானது அனைத்துலக உடன்படிக்கைகளான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாசார உரிமைகள் தொடர்பான அனைத்துலகப உடன்படிக்கை, அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.
புதிய அரசியல்யாப்பானது நாட்டில் நிலவும் பாரிய கடன் சுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொள்ள வழிவகுக்கும். எனவே இந்த முயற்சியை நாம் கைவிட்டு விட முடியாது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தரமான தீர்வை புதிய அரசியல்யாப்பினூடாகவே அடைய முடியும். புதிய அரசியல் வரைவானது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படுகின்ற போது, அது கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் மக்களினால் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எமது கட்சிக்கு இருக்கிறது.
குறிப்பிட்ட காலஎல்லைக்குள் கருமங்கள் இடம்பெறாமல் போகின்ற பட்சத்தில், நாமும் தமிழ் மக்களும் எமது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவோம்.
சிறிலங்கா அரசாங்கமானது 2015ல் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மார்ச் 2019இற்குள் முழுமையாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. அவர்கள் அப்படி நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்கான கருமங்கள் துரித கதியில் இடம்பெற வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அனைத்துலக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் கடைப்பிடிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதனை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துலக சமூகம் சிறிலங்கா தொடர்பில் வெறும் பார்வையாளராக மாத்திரம் இருக்க முடியாது. சிறிலங்கா அரசு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாது போகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மீள நிகழாமையை உறுதி செய்வதிலும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.” என்றும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12122

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.