«

»

மின்னுயர்த்திக்கு 40 லட்சம் ஒதுக்கும் உறுப்பினர்கள் எதிர்க்கும் மாற்றுதிறனாளி உறுப்பினர்

vali
வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் தேவையற்ற ஆடம்பர செலவு திட்டமொன்றை மாற்றுத்திறனாளியான உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஒரேயொரு மாடிக்கட்டிடத்திற்கு 40 இலட்சம் ரூபா செலவில் லிப்ட் அமைக்கும் “மக்கள் பணி“யில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றியதையே, குறித்த மாற்றுதிறனாளியான உறுப்பினர் சி. இதயகுமாரன் எதிர்த்துள்ளார்.
மக்களுக்கான அத்தியாவசிய அபிவிருத்திக்கான நிதி, ஆளணி என்பன பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், 40 லட்சம் ரூபா பணத்தில் லிப்ட் அமைக்கும் அநாவசியப் பணியில் மக்களின் பணத்தை வீணாக்கும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படும் அநாவசியப் பணியை நிறுத்துமாறும், அவர் முதலமைச்சருக்கு அவசர மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
இது குறித்து அவர் முதலமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் கையளித்த மனுவில்,
“வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஒரேயொரு மாடியை கொண்ட கட்டடத்துக்கு மின் உயர்த்தி பொருத்துவதற்கு மே மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற கூட்ட அமர்வில் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் சம்மதத்துடன், சபையின் பேரில் நிலையான வைப்பில் உள்ள நாற்பது இலட்சம் ரூபா பணத்தினைச் செலவழிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு செலவு செய்யப்படுகின்ற 40 லட்சம் ரூபா பணத்தினையும், தற்பொழுது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சங்கானைச்சந்தை கடைத்தொகுதியை ஏலத்தில் விடும் போது கிடைக்கபெறும் முற்பணதிலிருந்து பெற்று, மீளவைப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி விடயம் தொடர்பாக நான் எனது நியாயபூர்வமான கருத்தையும் எதிர்ப்பையும் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்ட அமர்விலும் 15 ஆம் திகதி அடுத்த கூட்ட அமர்விலும் தெரிவித்திருந்தேன். மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வழங்கல், திண்மக்கழிவகற்றல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் வீதிகள் புனரமைத்தல் போன்ற பல பணிகள் காணப்படுகின்றன. எனவே மேற்படி மக்களது அத்தியாவசியத் தேவைகள் பூரணப்படுத்தப்படாமல் மின் உயர்த்தியை சபையினுடைய நிதியில் பொருத்துவது பொருத்தமற்றது என ,உண்மையிலேயே மின்னுயர்த்தியின் பயன்பாடு அவசியமுள்ள மாற்றுத்திறனாளியான என்னால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மின்னுயர்த்தியைப் பொருத்துவதற்கு மாற்றுவழிகளாக மத்திய அரசிடமோ, அல்லது மாகாண அரசிடமோ, அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ, அல்லது மாகாணசபை உறுபினர்களிடமோ, அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களிடமோ மின்னுயர்த்தியை பொருத்துவதற்கு தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்ளுமாறும் சபையில் ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
அத்துடன் கடந்த காலங்களில் பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கற்ற செயலும் என்னால் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது வருடத்தில் ஒரு சில தடவைகள் மட்டும் பாவனைக்கு உட்படுத்தப்படும் பிரதேச சபையின் பொதுமண்டபம் குறித்த கட்டடத்தின் கீழ்மாடியில் உள்ளது. ஆனால் நாளாந்தம் மக்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாவனைக்கு உட்படுத்தப்படும் பிரதேசசபையின் அலுவலகம் அதே கட்டடத்தின் மேல்மாடியிலும் கட்டப்பட்டுள்ளது.
இதனை மாற்றி அலுவலகத்தை கீழேயும், பொது மண்டபத்தை மேலேயும் தொலைநோக்குச் சிந்தனையோடு அமைத்திருக்க வேண்டும். முன்னைய சபை போன்று இப்படியான தவறுகளை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளாது மக்கள் நலன் சார் சிந்தனையுடன் திறம்பட செயலாற்ற வேண்டும் என்றும் சபையில் கூறியிருந்தேன்.
ஆனால் சபையானது எனது நியாயபூர்வமான கருத்தையும் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளாது மின்னுயர்த்தியை சபையின் வருமானத்தில் பொருத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளது.
மக்களது அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு போதிய நிதி, ஆளணி மற்றும் வாகன பற்றாக்குறை நிலவுவதாக கௌரவ தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது என்பதைத் தங்களின் கவனத்திற்கு தயவுடன் தெரியப்படுத்துகிறேன்.
அத்துடன் மாற்றுத்திறனாளியாக இருந்தும் நான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் மக்களுக்கு மகத்தான திருப்திகரமான சேவை செய்ய வேண்டும் என்கின்ற ஒரேயொரு நோக்கிலேயே சபையின் நிதியில் அல்லது சபை வருமானத்தில் மின்னுயர்த்தி பொருத்தும் தீர்மானத்தை எதிர்க்கிறேன் என்பதையும் அத்துடன் சபை நிதியல்லாத மேற்குறிப்பிட்ட வழிகளில் நிதியினை பெற்று மின்னுயர்த்தியை பொருத்துவதற்கு எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை என்பதையும் தயவுடன் தெரியப்படுத்துகிறேன்.” என்றுள்ளது

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12132

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.