«

»

அமைச்சரவை பத்திரமொன்றினை தாக்கல் செய்யுமாறு மனோவுக்கு ஆலோசனை

sirisena1
மேல்மாகாண தோட்டப்புற பாடசாலைகளில் தமிழ் பட்டதாரிகளை நியமிக்கும் வகையில் “பின்தங்கிய பிரிவினர்” என்ற அடிப்படையில் புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றினை தாக்கல் செய்யுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதன்போது தோட்டப்புற பாடசாலைகளுக்கானபட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்தே தோட்டப்புறங்களிலுள்ள தமிழ் பட்டதாரிகளை இணைக்கும் வகையில் “பின்தங்கிய பிரிவினர்” என்ற அடிப்படையில் புதிய அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.
மேல்மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாக மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் தோட்டப்புற பாடசாலைகளுக்கு 86 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் 10 தமிழர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 10 சிங்கள ஆசிரியர்களாகவும் ஏனையவர்கள் முஸ்லிம் ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவுள்ளனர்.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்ட, அவிசாவளை உள்வரும் ஹோமாகமை கல்வி வலயத்தை சார்ந்த தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு தோட்டங்களை சாராத ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது பொருத்தமானதல்ல என்று அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்க்கும் போது, இப்படி நியமனம் பெறுகின்ற சகோதர இன, ஆசிரியர்கள், நியமன விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று சென்று விடுகிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் பணி புரியாததால், இந்த பாடசாலைகளின் கல்வித் தரம் குன்றுகிறது. இது ஒரு பின்தங்கிய இனத்துக்கு காட்டப்படும் அநீதியாகும்.
மேலும் ஆசிரிய நியமனங்களுக்காக நடத்தப்படும் பரீட்சைகளும், நேர்முக தேர்வுகளும் இன்னமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும். இளம் தமிழ் மாணவர்களது, மொழி, இன கலாசாரத்துக்கும் உகந்தவர்களையே தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் போல் அல்லாமல் இன்று மலையக பகுதிகளில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதையும் இவர்கள் தோட்ட பாடசாலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட முடியும் எனவும் அமைச்சர் மனோ ஜனாதிபதியிடம் இதன்போது எடுத்துக்கூறினார்.
தோட்டப்புற பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகள் மற்றும் இவர்களது பெற்றோர் சமூக, பொருளாதார மட்டங்களில் தேசிய மட்டங்களை விட பின் தங்கி இருக்கின்ற காரணத்தால் இந்த விசேட சலுகை ஒதுக்கீடு அவசியமாகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவற்றை செவிமடுத்த ஜனாதிபதி தோட்ட பாடசாலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக, “பின்தங்கிய பிரிவினர்” என்ற அடிப்படையில் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கும்படி அமைச்சர் மனோவிடம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12166

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.