«

»

கியூபாவின் சினிமா!

images (12)இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே கியூபாவிற்கு சினிமா அறிமுகமாகிவிட்ட நிலையிலும் 1959புரட்சிக்கு முந்தைய கியூபாவில் வெறும் 80முழுநீளப் படங்களே உருவாகியிருந்தன. இவற்றுள் பெரும்பான்மையானவை நாடக பாணியிலானவைதான். புரட்சிக்குப் பின்னரே கியூபாவின் திரைப்பட உலகம் ஒரு பொற்காலம் என்று சொல்லத்தக்க தடத்திற்குள் நுழைந்தது.

சினிமாவை முதன்முதலில் லூமியர் சகோதரர்கள் உருவாக்கியபோது அது அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பயணித்த பின்னரே கியூபாவின் ஹவானாவை வந்தடைந்தது. அது நடந்தது ஜனவரி 24, 1897ல். அதை மெக்சிகோவிலிருந்து கொண்டுவந்தவர் கேப்ரியல் வேய்ர். ஹவானாவின் பாசியோ டெல் ப்ராடோவில்தான் அது முதன்முதலில் காட்டப்பட்டது. அது தியேட்ரோ டகானின் அருகிலிருந்தது. இன்று அது கிரான் தியேட்ரோ டி லா ஹபானா என்றழைக்கப்படுகிறது. அப்போது நான்கு குறும்படங்கள் காட்டப்பட்டன.

கட்டணம் 50சென்ட்கள். இதனை சதம் என்றும் சொல்லலாம். சிறுவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் 20சதம் தான். குறுகிய காலத்திலேயே கியூபத் தீவில் எடுக்கப்பட்ட முதல் படத்தில் வேய்ர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, ‘சிமுலாக்ரோ டி இன்சென்டியோ’ எனும் ஆவணப்படம் தயாரானது. அது ஹவானாவின் தீயணைக்கும் படை வீரர்கள் பற்றிய படமாகும்.

முதல் உலகப்போர் துவங்குவதற்கு ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவின் நகரங்களிலெல்லாம் சினிமா எனும் ஊடகம் பணம் கொழிக்கும் தொழில் சார்ந்த ஒன்றாக விரிவடைந்துவிட்டது. அமெரிக்க நாடுகளைப் போலவே கியூபாவிலும் பல திசைகளிலிருந்தும் சினிமா காட்சிப் பொருளாக வந்து போய்க் கொண்டிருந்தது. ஐரோப்பிய சினிமாக் கொடையாளிகளிலிருந்து வட அமெரிக்கக் கொடையாளிகளை நோக்கி கியூப சினிமா ரசிகர்களின் கவனம் மெல்ல மெல்லத் திசைமாறத் தொடங்கி, இறுதியில் அது ஹாலிவுட்டின் பெரிய பெரிய கம்பெனிகளைச் சார்ந்துபோவதில் போய் முடிந்தது.
கொள்கை வழிப்பட்ட வரலாற்றுக் கதைகளுடன்தான் அமெரிக்கக் கண்டத்தின் சினிமாப் பயணமானது தொங்கியது. கியூபாவின் ‘எல் காப்பிட்டான் மாம்பி’, ‘லிபர்ட்டாடோர்ஸ் ஓ கொரில்லரஸ்’ (1914) குறிப்பிடத்தக்க படைப்புகள். 1910ல் கியூப சினிமாவின் போக்கில் இன்னொரு திருப்பம். ஸ்பானிய நாவலாசிரியர் ஜாகுயீன் டிசென்டாவின் டையாஸ் க்யூசடாவைத் தொடர்ந்து இலக்கியப் படைப்பாக்கங்களை திரைப்படங்களாக்குகிற முறை துவங்கியது. சார்லி சாப்ளினைப் போலச்செய்தும், பிரெஞ்சு நகைச்சுவைப் படங்களை, கௌபாய்ப் படங்களைத் தழுவியும் கியூப சினிமா வளர்ந்தது.

ஒரு முழுநீளக் கதைப்படத்தை 1937ல் உருவாக்குகிற வரையில் கியூபாவில் பேசாப் படங்களே கோலோச்சின. கியூபாவின் புரட்சிக்கு முன் வரை அங்கே மொத்தமே 80படங்கள்தான் தயாரிக்கப்பட்டன.
அமெரிக்கக் கண்டத்துப் பிரபலங்கள் பலர் படம்பிடிக்க கியூபத் தீவுக்கு வந்தனர். கியூபாவின் பிரபல நடிகர்கள் சிலர் நாட்டின் எல்லை கடந்து லத்தீன் அமெரிக்காவில் – குறிப்பாக மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினாவில் தங்களின் வெற்றிக் கொடிகளைப் பலமாக நாட்டினார்கள்.

கியூபாவின் பெயர்பெற்ற இசையமைப்பாளர்களான எர்னஸ்டோ லீகுவாநா, போலா டி நைவே, ரீடா மான்டானர் ஆகியோர் அமெரிக்க நாடுகளின் படங்களிலும் தங்களின் இசை ஆளுமையைச் செலுத்தினார்கள். இவையெல்லாம் புரட்சிக்கு முந்தைய காலத்தின் சுவடுகள்.

1959ல் கியூபா மக்கள் சமத்துவத்துக்கான புரட்சியை நடத்திமுடித்திருந்த சமயம். 1959ஆம் ஆண்டிலேயே கியூபாவின் புதிய அரசானது ‘டைரக்சியான் டீ கல்சரா டெல் எஜர்சிடோ ரெபெல்டே’ எனும் அமைப்பைத் தொடங்கிவிட்டது. இதன் பொருள் ‘புரட்சிகர ராணுவத்தின் பண்பாட்டுப் பிரிவு’ என்பதாகும். அது பல ஆவணப்படங்களைத் தயாரிக்க உதவியது. இந்தப் பண்பாட்டுப் பிரிவுதான் கியூபாவின் திரைப்படப் பயிற்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ.சி. (இன்ஸ்டிடியூடோ கியூபனோ டெல் ஆர்ட்டே ஒய் லா இன்டஸ்ட்ரியா சினிமாடோகிரேபிகோஸ்) உருவாக வித்திட்டது. இது புரட்சிகர அரசின் முதல் கலாச்சாரச் சட்டத்தின் விளைவாகவே வந்தது. இந்தச் சட்டத்தின்படி திரைப்படம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எழுச்சி ஏற்படுத்தக்கூடிய கலை வெளிப்பாட்டு ஊடகம் என்பதாகும். கல்வியையும் கருத்துக்களையும் மக்களிடையே நேரடியாகவும் விரிந்த அளவிலும் அதிகபட்சமாக எடுத்துச் செல்லும் ஊடகம் இதுதான். இந்த நிறுவனத்தின் துவக்கத்திலிருந்து 1980வரையில் இதன் தலைமைப் பொறுப்பை ஆல்பிரடோ குவேரா வகித்துவந்தார். அவரது வழிகாட்டுதலில் இது கியூப சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கியமான மையமாகச் செயல்பட்டது. அதன் பயனாக கியூபாவின் சினிமா ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் புரட்சியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது.
விமர்சகர்கள் இந்த நிறுவனத்தின் முதல் பத்து வருடங்களை கியூப சினிமாவின் பொற்காலம் என்கின்றனர். ஹம்பர்ட்டோ சோலாஸ் மற்றும் தாமஸ் கிட்டிரஸ் ஏலியா ஆகிய இந்த இருவரும் கியூபாவின் மிகச் சிறந்த இயக்குநர்கள் என்றே புகழப்படுகின்றனர். இவர்களின் முறையே ‘லூசியா’ (1969), ‘மெமரியாஸ் டெல் சப்டெசர்ரோல்லோ’ (1968) ஆகிய படங்கள் இவர்களின் புகழுக்கு வித்திட்டன. சர்வதேசத் திரைப்பட அமைப்புகளால் காலத்தை வென்ற 100படங்களில் ஒன்றாக இந்த ‘மெமரியாஸ் டெல் சப்டெசர்ரோல்லோ’ பேசப்பட்டது.

40ஆண்டுகால கியூப சினிமா உலகில் சக்தி மிக்கவையாகவும் பெரும் எண்ணிக்கையில் வெளிப்பட்டவையாகவும் திகழ்பவை ஆவணப்படங்களும் குறும்படங்களும் ஆகும். அமெரிக்காவின் இன ஒதுக்கலைச் சொன்ன முதல் வீடியோ ஆவணப்படம் 1965ல் வந்தது.

கியூப சினிமா உள்ளடக்கம் என்பது எப்போதும் மக்களின் பக்கம் நின்று பேசுபவையாகவே இருந்துவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்துவந்துள்ள அனிமேஷன் துறையிலும் மக்கள் நலனை, தேச நலனை முன்வைத்துப் பேசும் தன்மையே பார்க்க முடிகிறது. 1974ல் ஜுவான் பேட்ரோன் உருவாக்கிய கார்ட்டூன் பாத்திரம் எல்பிடியோ வால்டேஸ். 19ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கியூபாவின் விடுதலைக்காகப் போராடியது இந்தக் கார்ட்டூன் பாத்திரம் எல்பிடியோ. கியூபாவின் குழந்தைகளுக்கு இந்த எல்பிடியோ என்றாலே கொள்ளைப் பிரியம். ஜுவான் பேட்ரோனின் ‘வாம்பிரோஸ் என் லா ஹபானா’ (1983) என்ற முழு நீள அனிமேஷன் படமும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

ஐ.சி.ஏ.ஐ.சி. 1979ல் மிகமுக்கியமானதொரு பணியினைச் செய்தது. அதன் பெரு முயற்சியில்தான் புதிய லத்தீன் அமெரிக்க சினிமாவின் சர்வதேசப் படவிழா துவங்கப்பட்டது. இதுதான் லத்தீன் அமெரிக்க சினிமாவுக்கு விரிவான உலக ரசிகர்களை உருவாக்கித்தந்தது. 1979முதல் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நடக்கும் இந்தப் படவிழாதான் லத்தீன் அமெரிக்காவிலேயே இதுபோன்ற விழாக்களில் முதன்மையானதும், பிரம்மாண்டமானதுமாகும். ஹவானாவுக்கு அருகிலிருக்கும் ‘சான் ஆன்டனியோ டீ லாஸ்பேனூஸ்’ எனும் இடத்தில் சினிமா, தொலைக்காட்சி மற்றும் வீடியோவுக்கான சர்வதேசப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிலத்தை கியூபா அரசு வழங்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் லத்தீன் அமெரிக்காவின் புதிய சினிமா பவுண்டேஷனும், எழுத்தாளர் காபிரியல் கார்சியா மார்க்யூசும், லத்தீன் அமெரிக்க சினிமாவின் தந்தை என் அழைக்கப்படும் பெர்ணான்டோ பிர்ரியும் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். லத்தீன் அமெரிக்கா முழுமையிலிருந்தும் பல நூறு இளம் மாணவர்கள் இங்கே இயக்குநர், ஒளிப்பதிவு, திரைக்கதை, படத்தொகுப்பு போன்ற துறைகளில் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர்.

கியூபாவின் திரைப்பட நிறுவனமான இந்த ஐ.சி.ஏ.ஐ.சி. மக்களிடையே கலை விழுமியங்களையும், தேசிய உணர்வுகளையும் கட்டியெழுப்புவதில் முதன்மையான பங்கினை வகித்தது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகச்சிறந்த சினிமாக்களைப் பற்றிய விழிப்புணர்வை அது மக்களுக்கு ஊட்டியது. மேலும் கியூபாவின் சினிமாக்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துவதிலும், நுட்பமான சிக்கல்கள் நிறைந்த நேஷனல் ஜியாகிரபி இணையத்தில் சினிமாக்களை ஆவணப்படுத்துவதிலும்கூட கியூபாவின் இந்த நிறுவனத்தின் பங்களிப்பென்பது அளப்பரியதாகும்.

சினிமாவைப் பிரபலப்படுத்தும் விதமாகச் சுவரொட்டிகளை வடிவமைப்பதிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தியது. அது வெறும் சுவரொட்டி சமாச்சாரம்தானே என்று அலட்சியப்படுத்தாத ஐ.சி,ஏ.ஐ.சி.யின் போக்கு வியக்கத்தக்கது. கியூபாவின் இசையை முன்னேற்றுவதில் தனிக் கவனிப்பைச் செய்திருக்கிறது.
கியூபாவின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இது 1970களில் இயங்கத்தொடங்கியது முதல் சமூக-அரசியல் பிரச்சனைகளை மையமாக வைத்துப் படங்களைத் தயாரிக்க ஊக்கம் பெற்றது ஐ.சி.ஏ.ஐ.சி. அண்மைக்காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட கியூபாவின் சினிமா ‘பிரஸ்ஸா ஒய் சாக்கலேட்’ (1993). தாமஸ் கிட்டிரஸ் ஏலியா மற்றும் ஜுவான் கார்லோ டாபியோ ஆகிய இருவரும் இதனைத் தயாரித்தனர்.

இந்தப் படம்தான் கியூபாவின் சினிமா வரலாற்றிலேயே ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் படம்.
கியூபாவின் உற்ற நண்பனாக இருந்த, உடுக்கை இழந்தவன் கை போன்ற சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னும்கூட கியூபாவின் சினிமாக்களுக்கு நிதியளிப்பதில் தொடங்கி, தயாரிப்பை நிர்வகிப்பது, ஸ்டுடியோக்களை வாடகைக்கு விடுவது, சினிமாக்களை உருவாக்கும் கலைஞர்களுக்குத் தேவையான கருவிகளை வழங்குவது, படத் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கவனமாகத் தலையிட்டுத் தேவையானவற்றைச் செய்துதருவது, படமெடுத்து முடிந்ததும் அவற்றைத் தணிக்கைக்கு உட்படுத்தி அனுமதி வழங்குவது, படங்களை விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது என இன்றும் தொய்வில்லாமல் இயங்கிவருகிறது உலகம் பயின்றுகொள்ள வேண்டிய மக்கள் சினிமாவின் படைப்பூக்க நிறுவனமான கியூபாவின் இந்த ஐ.சி.ஏ.ஐ.சி.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1592

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.