«

»

ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி டெல்லியை தோற்கடித்தது!

FINCH323-260620147–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியை தோற்கடித்து ஐதராபாத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

வந்தார், பீட்டர்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. விரல் காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் ஆடாத டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சன் குணமடைந்து அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் மயங்க் அகர்வால், ராஸ் டெய்லர், ஜிம்மி நீஷம், கவுல்டர் நிலே ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லட்சுமி ரத்தன் சுக்லா, குயின்டான் டீ காக், வெய்ன் பார்னல் மற்றும் கெவின் பீட்டர்சன் இடம் பெற்றனர். ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக இர்பான் பதானுக்கு பதிலாக நமன் ஓஜா சேர்க்கப்பட்டார்.

நழுவிய 3 கேட்ச்

டாஸ் ஜெயித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது. கேப்டன் ஷிகர் தவானும், ஆரோன் பிஞ்சும் இன்னிங்சை அதிரடியாக ஆரம்பித்தனர். பார்னலின் ஓவரில் பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என்று தொடர்ச்சியாக விரட்டிய தவான் அடுத்த பந்தில் அதாவது 26 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து (விட்டவர், மனோஜ் திவாரி) தப்பினார். அணியின் ஸ்கோர் 56 ரன்களாக உயர்ந்த போது, தொடக்க ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் பிரித்தார். தவான் 33 ரன்களில் (22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து டேவிட் வார்னர் ஆட வந்தார். சந்தித்த 2–வது பந்தில் அவர் வெளியேறி இருக்கவேண்டியது. பேட்டின் விளிம்பில் உரசிக் கொண்டு சென்ற கேட்ச் வாய்ப்பை, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவற விட்டார். இந்த வாய்ப்பை வார்னர், கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

வார்னர்–பிஞ்ச் ஜோடி தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் போக போக நொறுக்கி தள்ளினர். குறிப்பாக ஆரோன் பிஞ்ச், சுக்லாவின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர், உனட்கட்டின் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்த கூட்டணியை கடைசி வரை டெல்லி பவுலர்களால் உடைக்க முடியவில்லை. இதற்கிடையே, டேவிட் வார்னர் 31 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் மனோஜ் திவாரி வீணடித்தார். மூன்று கேட்ச்சுகளை நழுவ விட்டதன் விளைவு, ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது சிறந்த ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. இதில் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேகரித்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் இதற்கு முன்பு கடந்த ஆண்டு மும்பைக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்ததே ஐதராபாத்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஐதராபாத் வெற்றி

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், குயின்டான் டீ காக்கும் களம் புகுந்தனர். மிதமான வேகத்தில் விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் (11.2 ஓவர்) திரட்டி அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டீ காக் 48 ரன்களிலும் (30 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), முரளிவிஜய் 52 ரன்களிலும் (40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்து ஓவர்களில் வெளியேறினர்.

ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களால் ரன்வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. இதனால் ரன்தேவை அதிகரித்து கொண்டே போனது. எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் (15 ரன், 14பந்து), கேப்டன் கெவின் பீட்டர்சன் (16 ரன், 17 பந்து) இருவரும் ஸ்டெயினின் ஒரே ஓவரில் வீழ்ந்ததால் நெருக்கடி முற்றியது.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். இந்த ஓவரில் டுமினி–மனோஜ் திவாரி ஜோடி சிக்சர், பவுண்டரி உள்பட 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிக்கனியை பறித்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.

தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளிடம் தோற்ற ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் 4–வது லீக்கில் விளையாடிய டெல்லிக்கு இது 3–வது தோல்வியாகும்.

ஸ்கோர் போர்டு

ஐதராபாத் சன் ரைசர்ஸ்

ஷிகர் தவான் (சி) பீட்டர்சன் (பி) நதீம் 33

ஆரோன் பிஞ்ச் (நாட்–அவுட்) 88

டேவிட் வார்னர் (நாட்–அவுட்) 58

எக்ஸ்டிரா 5

மொத்தம் (20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 184

விக்கெட் வீழ்ச்சி: 1–56

பந்து வீச்சு விவரம்

ஷபாஸ் நதீம் 4–0–24–1

முகமது ஷமி 4–0–36–0

பார்னல் 4–0–38–0

உனட்கட் 4–0–43–0

டுமினி 2–0–19–0

சுக்லா 2–0–21–0

டெல்லி டேர்டெவில்ஸ்

டீ காக் (சி) பிஞ்ச் (பி) கரண் ஷர்மா 48

விஜய் (சி) ஸ்டெயின் (பி) சேமி 52

கெவின் பீட்டர்சன் (சி) சேமி (பி) ஸ்டெயின் 16

தினேஷ் கார்த்திக் (சி) லேகேஷ் ராகுல் (பி) ஸ்டெயின் 15

டுமினி (நாட்–அவுட்) 20

மனோஜ் திவாரி (நாட்–அவுட்) 23

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 180

விக்கெட் வீழ்ச்சி: 1–99, 2–103, 3–135, 4–135

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 4–0–40–0

ஸ்டெயின் 4–0–33–2

வேணுகோபால் ராவ் 1–0–9–0

கரண் ஷர்மா 4–0–23–1

டேரன் சேமி 3–0–34–1

அமித் மிஸ்ரா 4–0–38–0

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2337

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.