«

»

ஐபிஎல்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்!

S_secvpfஐ.பி.எல். நடப்பு தொடரில் சென்னை-டெல்லி அணிகள் இன்று 2-வது முறையாக மோத உள்ளன.

8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்லா கோட்லா மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மீண்டும் மோதுகின்றன.

கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப்புக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அதன் பிறகு டெல்லி, ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா அணிகளை துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் சரி சம பலத்தை வெளிப்படுத்துவதே சென்னை அணியின் வெற்றி ரகசியம் என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரன்டன் மெக்கல்லமும் (249 ரன்), வெய்ன் சுமித்தும் (256 ரன்) அளிக்கும் அதிரடி தொடக்கமும், மொகித் ஷர்மா (11 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (10 விக்கெட்) உள்ளிட்டோரின் சீரான பந்து வீச்சும் அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

சென்னை அணி சரியான கலவையில் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் கேப்டன் டோனி, வேகப்பந்து வீச்சாளர் கூடுதலாக தேவைப்பட்டால் வெய்ன் சுமித்தையும், சுழற்பந்து வீச்சாளர் இன்னொருவர் தேவைப்பட்டால் சுரேஷ் ரெய்னாவையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். டெல்லி ஆடுகளம் மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டது என்பதால், ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் சுழலுக்கு அதிக வேலை இருக்கும்.

6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பின்தங்கி இருக்கிறது. இந்த சீசனில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டு, பிரபலமான கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக அமர்த்தப்பட்ட போதிலும், டெல்லி அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பிரமாதப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சனும் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி 6 ஆட்டத்திலும் ஒன்றில் கூட டாஸ் வெல்லாத துரதிர்ஷ்டமும் அவர்களை துரத்திக் கொண்டிருக்கிறது.

சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது டெல்லி அணிக்கு பலம் தான். ஆனாலும் கடைசியாக இங்கு விளையாடிய 10 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, வலுவான சென்னை அணியின் சவாலுக்கு எந்த வகையில் ஈடுகொடுத்து விளையாடப் போகிறார்கள் என்ற ஆர்வம் எழுகிறது.

சென்னையும், டெல்லியும் ஏற்கனவே தொடக்க சுற்றில் மோதி விட்டன. அபுதாபியில் நடந்த அந்த ஆட்டத்தில் டெல்லியை 84 ரன்களில் சுருட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றிருந்தது. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க டெல்லி வீரர்கள் முனைப்பு காட்டி வருவதால், போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

சென்னையும், டெல்லியும் மொத்தத்தில் இதுவரை 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் சென்னையும், 4-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், டோனி (கேப்டன்), மிதுன் மன்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மொகித் ஷர்மா, ல்பனாஸ், ஈஸ்வர் பாண்டே.

டெல்லி: குயின்டான் டீ காக், முரளிவிஜய், கெவின் பீட்டர்சன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், டுமினி அல்லது ராஸ் டெய்லர், கேதர் ஜாதவ் அல்லது மனோஜ் திவாரி அல்லது சவுரப் திவாரி, வெய்ன் பார்னல், ஷபாஸ் நதீம், முகமது ஷமி, உனட்கட், ராகுல் ஷர்மா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2706

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.