«

»

கிழக்கை நோக்கி பாயுமா கூட்டமைப்பு?

anna_tnaஇலங்கையில் தேர்தல் திருவிழா ஒன்றினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதுடன் அதற்கான முன்ஆயத்தங்களையும் மேற்கொண்டுவருகின்றது.

இதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குறித்த தேர்தல் திருவிழாவில் தங்களது பங்களிப்புக்கள் குறித்தும் பங்குகள் குறித்தும் பேசுவதற்கு அங்கும் இங்குமாக கூடி இரகசிய கூட்டங்களையும் கூட்டணிகளையும் உருவாக்கிவருகின்றன.
நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழலாம் என்ற பரபரப்பில் பல சர்வதேச நாடுகளும், பொது அமைப்புக்களும் தங்களது ஆதரவு களத்தை திறந்துவிட்டுள்ள இக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு இலங்கையின் அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இன்று வரை தங்களது அரசியல் களத்தை பொதுமக்களை நோக்கி நகர்த்தியதாக தெரியவில்லை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் இந்தப்பொறுப்பில் இருந்து விலகிநிற்கின்றார்களா? என்ற கேள்விகளே அதிகம் எழுகின்றது.

tna_east_900
கடந்த தடவை நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தமைக்கு காரணம் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலுவான அரசியல் கட்டமைப்பு ஒன்று இல்லாமல் இருந்தமையேயாகும்.
ஒரு நாட்டில் கடந்த 60 ஆண்டுகாலமாக போராடி வருகின்ற சிறுபான்மையின மக்களின் அரசியல் தலைமைகளை கொண்ட கட்சிக்கு ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பு ஒன்று இன்றுவரை உருவாக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணகர்த்தாக்கள் யார்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.
கூட்டணிக் கட்சிகளுக்குள் உள்ள உள்முரண்பாடுகள்,மற்றும் தலைமைகளுக்கு இடையேயான பதவி போட்டிகளுக்கு நடுவினில் தமிழ் தேசிய இனத்தின் உரிமை பிரச்சினையை தொலைத்துவிடுவதற்கோ அல்லது அதுகுறித்து காலத்தை இழுத்தடிப்பதற்கோ தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்கமாட்டார்கள்.
தமிழரசுக்கட்சியா? டெலோவா?பிளட்டா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? என்ற கட்சிப் போட்டிகளை விடுத்து தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எவ்வாறு தமிழர்களின் உரிமைப்போராட்டம் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போருக்குள் அகப்பட்டு அழிந்து போனதோ அவ்வாறே கால ஓட்டத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான போராட்டத்திற்குள் சிக்கி அழிந்து போகாமல் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழர்களினதும் கடமையாகும்.
கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான அரசியல் சக்தியை உருவாக்கத் தவறியமையே இன்று தமிழ் மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தி குறைவடைவதற்கும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தலைமை ஒன்றை முன்வைக்க முடியாமல் போனதற்கும் காரணமாகும்.

ShowCartoon
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தங்களது அறிக்கைப் பிரச்சாரங்களை விடுத்து வடகிழக்கில் ஒரு செயற்பாட்டு தன்மையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பை கிராமங்கள் தோறும் உருவாக்கி அதனூடாக மக்களுடன் மக்களாக நின்று அரசியல் பணியாற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கிழக்கில் அரசியல் ஜனநாயகத்தை கடைப்பிடித்து செயற்படுவது கட்டாயமாகும். தலைமைத்துவத்தில் இருந்து உறுப்பினர்களை உருவாக்காமல் உறுப்பினர்களில் இருந்து தலைமைத்துவங்களை உருவாக்குகின்ற கட்டமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்கவேண்டும். அதாவது கிராமங்கள் தோறும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து தலைவர்களை தெரிவுசெய்கின்ற ஜனநாயக போக்கினை கூட்டமைப்பினர் உருவாக்கி செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
ஒரு அரசியல் கட்சியானது இளைஞர் அணி, மகளீர் அணி, அரசியல் ஆய்வுக்குழு, தொண்டர்படை, மத்தியசபை, என பல்வேறுபட்ட தங்களது மக்களின் தேவை சார்ந்த கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படவேண்டியது கட்டாயமாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இன்றுவரை அவ்வாறான நிர்வாக கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படவில்லை என்பதுடன் அதனை உருவாக்குவதற்கும் முயற்சிக்கவில்லை என்பதும் கவலையான விடயமே.
மேற்படி நிலமை தொடருமாகவிருந்தால் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியல் பற்றி அறியாதவர்களும் தெரியாதவர்களும் தலைவர்களாக உருவெடுப்பார்கள் என்பதுடன் அரசியல் களத்தை தெரியாதவர்களாலும், அரசியல் பேசதெரியாதவர்களினாலும் எதிர்காலத்தில் அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்கள் உருவாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
மிகமுக்கியமாக கடந்த ஆயுதப்போராட்டம் எவ்வாறு கிழக்கில் பாரிய அரசியல் தலைமைத்துவத்திற்கான வெற்றிடத்தை உருவாக்கியதோ அதேபோன்ற வெற்றிடம் எதிர்காலத்தில் நிகழும் என்பதே யதார்த்தமாகவுள்ளது.
இதைவிட இன்று கிழக்கில் உள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்துடன் இருக்கும் கட்சிகள் அல்லது அரசாங்கத்தை ஏமாற்றிப்பிழைக்கும் கட்சிகள் தங்களது தேர்தல் வியாபாரத்திற்காக கிராமங்கள் தோறும் பல வியாபாரிகளை உருவாக்கி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விற்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.anna_tna
இவ்வாறன சூழ்நிலையில் தமிழ் மக்களை தெளிவுபடுத்தி தமிழ் தேசிய உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை முன்னிறுத்திய வேலைத்திட்டம் ஒன்றை கிராமங்கள் தோறும் உருவாக்கவேண்டியது கட்டாயத்தேவையாகவுள்ளது.
கிழக்கை நோக்கிய பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

இதற்காக கிராமங்கள் தோறும் கட்சி உறுப்பினர்களை உருவாக்கி கட்டமைப்புக்களை அமைத்து செயற்பட வேண்டியுள்ளது. மேற்படி கட்டமைப்புக்களை உருவாக்க தவறினால் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் அற்ற தமிழ் உணர்வுகளை மறந்த அரசியல் அனாதைகளாக தமிழ் இளைஞர்,யுவதிகள் உருவாக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்களை மாற்றுக்கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஏமாற்றி பிழைப்பார்கள் என்பதே தின்னம்.

எனவே கிழக்கை நோக்கி பாயுமா கூட்டமைப்பு?

-நிலா-

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4218

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.