«

»

காங்கிரஸ் பிளவு தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் வாசன்!

cong_2183129fதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பை மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் நாளை திங்கட்கிழமை வெளியிடுகிறார்.

1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்ற அன்றைய காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவின் முடிவை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை ஜி.கே. மூப்பனார் தொடங்கினார். மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் வாசன் தமாகா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதையடுத்து, கடந்த 2002-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா. இணைந்தது. அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர், மத்திய இணை அமைச்சர், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்த வாசன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் த.மா.காவை தொடங்க முடிவெடுத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முதலே அவருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கும் நல்லுறவு இல்லை எனக் கூறப்படுகிறது.

கட்சி விவகாரங்கள், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கும்போது மேலிடம் தன்னைக் கண்டுகொள்வதில்லை என்ற அதிருப்தியில் இருந்த வாசன், அவரது ஆதரவாளரான ஞானதேசிகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதும் அமைதியானார். கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் வெறும் 4.4 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவுக்கு அடுத்த இடத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. இதனால், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகனை நீக்க மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. சோனியா, ராகுல் காந்தியைச் சந்திக்க வாசன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் காமராஜர், மூப்பனார் படங்களுடன் அச்சிடப்பட்ட உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்த வேண்டாம் என மேலிடம் கேட்டுக் கொண்டது வாசன் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் டில்லியில் ஒக்ரோபர் 28-ஆம் திகதி நடைபெற்ற மாநிலத் தலைவர் கூட்டத்தில் பங்கேற்ற ஞானதேசிகன், உறுப்பினர் அட்டை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை திரும்பியதும் கடந்த வெள்ளிக்கிழமை ஞானதேசிகன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய வாசன், தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளார் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4275

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.