«

»

இலங்கையும் அங்கவீனமும் – யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை என்ன?

Battiஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற நம்பிக்கை தரும் பாடல்வரிகளை ஒரு முறையேனும் முணுமுணுக்காதவர்கள் நம்மில் வெகுசிலராகவே இருக்கக்கூடும் .

மாற்றுத்திறனாளிகள் மாற்றுவலுவுள்ளோர் என தற்போது பரவலாக அடையாளப்படுத்தப்படுகின்றதும் அங்கவீனர்கள் உடல் ஊனமுற்றோர் என கடந்தகாலங்களில் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை ஊக்கப்படுத்துகின்ற வகையில் எழுதப்பட்ட இப்பாடலைக் கேட்கின்றபோதெல்லாம் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிப் பெருக்கை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்துவிடமுடியாது.

மாற்றுவலுவுள்ளோருக்கான சர்வதேச தினமான இன்று எமது சமூக அமைப்பில் தவிர்க்க முடியாத பாகமாக மாறிவிட்டுள்ள இந்த கௌரவத்திற்கு பாத்திரமான மக்களையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அவர்களுக்கு எம்மால் செய்யக்கூடிய விடயங்களையும் சிந்தித்துப்பார்ப்பது சாலவும் பொருத்தமானதாகும்.

உலக சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் அதாவது சுமார் 650மில்லியன் மக்கள் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

யுஎன்டிபி என அறியப்படும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தரவுகளுக்கு அமைவாக உலகில் அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களில் எண்பது வீதமானவர்கள் வளர்முக நாடுகளிலேயே இருப்பதான அதிர்ச்சித்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
DSC_0020
 அங்கவீனம் இருக்குமானால் அது உங்களை உலகின் மிகப்பெரிய சிறுபான்மைக்குழுவின் அங்கத்தவராக மாற்றிவிடும் என்ற அளவில் அதன் உண்மையான பரிமாணம் பாரியதாகக் காணப்படுகின்றமையை நாம் வாழும் சமூதாயத்தினை அவதானித்தாலே உணர்ந்துகொள்ளமுடியும் .
அங்கவீனம் என்றதுமே நம்மவர்களில் பலருக்கு உடல் அவயவங்கள் அற்றவர்களே கண்முன் தோன்றுவர் .ஆனால் நிஜத்தில் அங்கவீனத்தை உடையவர்களின் மொத்தத் தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இவர்களின் எண்ணிக்கை குறைவானதென்பது வியப்பாகத் தோன்றலாம் .

இதனை மேலும் தெளிவாக கூறுவதென்றால் நம் கண்களுக்கு உடனே தெரியாத அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களே சமூகத்தில் அதிகளவில் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனமாகும் . சமூக விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் விளைவாக உடலியல் குறைபாடுகளுக்கு மேலாக அறிவியல் குறைப்பாடுகள் அபிவிருத்திக் குறைபாடுகள் போன்றவற்றால்; பாதிக்கப்பட்டவர்களைக் கூட அங்கவீனர்கள் என்ற பரந்துபட்ட பிரிவாக வகைப்படுத்துகின்றனர்.

அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கிரமமாக அதிகரித்துவருவதனை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்திநிற்கின்றன .

அ)எச்ஜவி எயிட்ஸ் போன்ற புதிய நோய்களின் தோற்றம் மன அழுத்தம் மதுப்பாவனை போதைபாவனை போன்ற தீங்கான விடயங்களால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள்

ஆ) வயதெல்லை அதிகரிப்பும் முதியோர்களின் பெருகிவரும் எண்ணிக்கையும் இவர்களில் பல உடற்சீரியக்கமற்றவர்களாக காணப்படுகின்றனர்

இ) போசாக்கீன்மை நோய்த்தாக்கம் சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தல் போன்ற பல காரணங்களால் அடுத்துவரும் 30 ஆண்டு காலப்பகுதியில் உலகில் குறிப்பாக வளர்முக நாடுகளில் அங்கவீனத்தைக் கொண்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்ட எதிர்வுகூறல் நிஜமாகிவருகின்றமை

ஈ)ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகள் 

ஆகியன அங்கவீன அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

70வயதிற்கு மேலாக ஆயுட்காலத்தைக் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் சராசரியாக 8 ஆண்டுகளை அன்றேல் தமது ஆயுளின் 11.5வீதத்தை அங்கவீனத்துடன் கழிக்க நேரிடுவதாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Batti

இலங்கையும் அங்கவீனமும்

இலங்கையில் அங்கவீனர்களின் தொகை குறித்து சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களமொன்றின் அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது இலங்கை சனத்தொகையில் சுமார் ஏழுவீதமானோர் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார் .
.
இந்த எண்ணிக்கை கடைசியாக 2001ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டுக்கமைவானதென தெரிவித்த அந்த அதிகாரி யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலவரம் அடுத்தவருடம் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீட்டின் பின்னரே தெரிய வரும் எனச் சுட்டிக்காட்டினார்.

பிறப்பு அங்கவீனத்தைக் கொண்டவர்களுடன் பின்னர் முதுமை நோக்கிய வாழ்வில் அங்கவீனத்தைக் கொண்டவர்களைத் தவிர யுத்த வன்முறைகளால் அங்கவீனர்களானவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

இலங்கையில் மூன்றுதசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தால் காவுகொள்ளப்பட்ட உயிர்களிலும் அதிகமாக அங்கவீனத்திற்குட்பட்டவர்களின் எண்ணிக்;கை காணப்படும் என்பதைச் சொல்வதற்கு மேதைகள் தேவையில்லை.

பொதுமக்கள் அரச படையினர் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என யுத்தத்தால் நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் அங்கவீனமுற்றுள்ளனர் .இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களது எண்ணிக்கையே அதிகமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை .

 தமிழ் மக்களில் எத்தனைபேர் யுத்தத்தால் அங்கவீனமாகினர் என்ற உத்தியோகபூர்வமான தரவுகள் இல்லை இதற்கு வடக்கு கிழக்கில் கடந்த 30வருடகாலமாக குடிசனமதிப்பீடு இடம்பெறாமையும் முக்கியகாரணமாகும் .

     யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை
யுத்தம் நிறைவடைந்ததாக பிரகடனப்படுத்தப்பட்டு 16 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவயவங்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிகளுக்காக காத்திருப்பதாக ஐரின்(IRIN) செய்திச்சேவை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது

 அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை பொருத்தும் பணியினை மேற்கொண்டுவரும் Sri Lanka School of Prosthetics and Orthotics நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இலங்கையில் கணக்கெடுக்கப்பட்டுள்ள 160000 அவயவங்களை இழந்தோரில் 90 சதவீதமானோர் தரமான செயற்கைக்கால்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் அனேகமானோர் சிவில் யுத்தத்துடன் தொடர்புடைய நிலக்கண்ணிவெடி மற்றும் குண்டுவெடிப்புக்கள் காரணமாகவே அவயவங்களை இழந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

2009ம் ஆண்டின் முற்பகுதியில் யுத்தத்தின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் தனது இருகால்களையும் இழந்து இன்னும் செயற்கை கால்களை பெற்றுகொள்ள முடியாதநிலையிலுள்ள முல்லைத்தீவைச் சேர்;ந்த 25வயதுடைய ஜெகநாதன் சிவகுமாரன் என்ற இளைஞரின் கருத்தையும் ஜரிஎன் செய்திச் சேவை பதிவுசெய்துள்ளது.

‘நான் பணத்திற்காக ஒரு விலங்கினைப் போன்று வீதிகளில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கின்றேன் .யுத்தத்தால் அங்கவீனாகிய நான் இன்னமும் அதனால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்’  என்கிறார் ஜெகநாதன் சிவகுமாரன்

அவயவங்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும் செயற்கை அவயவங்களிலும் உடலுக்கு மிகநெருங்கி ஒத்திசைவாக காணப்படுபவை உடலுக்கு கடினமானவை என வித்தியாசம் உள்ளன.

மனித உடலுக்கு மிகவும் நெருக்கமானதும் ஒத்திசைவானதுமான அவயவங்களைத்தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்ற மூலப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றதுடன் அவற்றின் விலை மிகவும் அதிகமானதாகும் .அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் மூலப்பொருட்கள் விலைகுறைவானதாக காணப்படுகின்ற போதிலும் அது பயனாளர்களுக்கு எளிதாக இருப்பதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்படும் உயர்தரம் வாய்ந்த செயற்கை அவயவம் ஒன்றைப்பெறுவதற்கு 5000 முதல் 12000 அமெரிக்க டொலர்களை செலவிடவேண்டிய நிலை காணப்படுகின்றது .வருடமொன்றிற்கே சராசரியாக 4500 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்ற இலங்கை மக்களால் இத்தகைய உயர்தர செயற்கை அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுகின்றது.

காட்டில் விறகுதேடச்சென்ற போது நிலக்கண்ணிவெடியில் சிக்கி 2007ம் ஆண்டில் வலது காலை இழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41வயதுடைய ஷங்கர் கமலராஜன் என்பவரது கருத்;தையும் ஐரிஎன் செய்திச்சேவை பதிவுசெய்திருந்தது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலேயே உள்ளுர் சமூக நிறுவனமொன்றின் அனுசரணையின் மூலமாக ஷங்கருக்கு செயற்கைக்கால் கிடைத்திருந்தது

தனக்கேற்பட்ட நிலைமை குறித்து கருத்துவெளியிட்ட ஷங்கர் ‘ என்னால் எதனையுமே செய்துகொள்ள முடியாத நிலை காரணமாக இரண்டு வருடகாலங்களை நான் பிச்சைக்காரனைப் போன்று கழிக்க நேர்ந்தது .உணவின்றி பட்டினி கிடந்த நாட்களும் உள்ளன. கடந்த காலத்தில் முடக்கப்பட்ட நிலையிலான ஏற்பட்ட உளவியல் தாக்கத்திலிருந்து விடுபட்டு (செயற்கைகாலுடன் கூடிய) புதிய வாழ்விற்கு என்னை இசைவாக்கிக்கொள்ள முயற்சித்துவருகின்றேன்’ எனக் கூறினார்.

ஆனால் அனுசரணையாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பலரின் நிலைமை கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது .

அங்கவீனமுற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களிலொன்றான லெனாட் செசாயர் அமைப்பின் முகாமையாளர் அலி ஷப்றியிடம் வினவியபோது அங்கவீனமுற்றவர்களுக்கு உதவுவதற்கு தமக்கு மனமிருந்தபோதும் போதிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார் . இதன்காரணமாகவே பாரிய தேவைகளைக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமது சேவையை விஸ்தரிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்றோருக்கு நிதி மற்றும் வளங்கள் மூலமாக உதவுகின்ற தேவை பெரிதாக இருக்கின்றது அதனைவிடவும் இலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் பாரிய தேவையைப் பூர்த்திசெய்யவேண்டும் என அலி ஷவ்றி சுட்டிக்காட்டினார்.

-artificial-prosthetic-
அங்கவீனமுடையவர்களுக்கு சமூகத்தில் தரப்படுகின்ற அங்கிகாரமும் சந்தர்ப்பங்களும் தற்போது மிகமிக குறைவானதாகவே காணப்படுகின்றது.இவ்விடயத்தில் மக்களின் மனநிலையிலும் அதிகாரங்களிலுள்ளவர்களின் அணுகுமுறைகளிலும் கொள்கை வகுப்பிலும் நடைமுறைப்படுத்தலிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என ஷவ்றி தெரிவித்தார்.

அங்கவீனமுடையவர் பாரபட்சமாக பார்க்கப்படும் நிலைமை உலகளவில் பரவலாக காணப்படுகின்றது

2004ம் ஆண்டில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கவீனமுற்றவர்கள் வன்முறை அன்றேல் பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உலகில் உழைக்கும் வயதைச் சேர்ந்தவர்களில் 386மில்லியன் பேர் ஏதோ ஒரு வகையான அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கவீனமுடையவர்கள் மத்தியில் வேலையில்லாப்பிரச்சனை 80சதவீதமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது

அங்கவீனமுடையவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை செயற்திறனுடைய முறையில் செய்யமாட்டார்கள் என காலகாலமாக நிலவிவரும் தப்பபிப்பிராயங்களும் அவர்களை வேலையில் சேர்த்துக்கொண்டால் அதிக சலுகைகளை வழங்கவேண்டும் என்ற எண்ணமுமே அங்கவீனமுற்றவர்கள் மத்தியில் காணப்படும் தொழிலின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

ஆனால் மனதை ஒருமுகப்படுத்தி நேரத்தை வீணடிக்காது வேலைசெய்வதில் அங்கவீனமுடையவர்கள் எவருக்குமே சளைத்தவர்களோ இரண்டாம்தரமானவர்களோ கிடையாது என்பது பல இடங்களில் நிருபிக்கப்பட்டுள்ளது.

அங்கவீனமுடையவர்களை அங்கவீனர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மாற்றுவலுவுள்ளோர் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் உடையோர் என அழைப்பதெல்லாம் நல்ல மாற்றங்களே .ஆனாலும் மக்களாகிய நாமும் அதிகாரத்திலுள்ளவர்களும் இந்த பெயர்மாற்றத்தினால் மாத்திரம் நன்மைகிட்டும் என்றுவிட்டு பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிடமுடியாது .

இவர்கள் விடயத்தில் இதயசுத்தியுடன் உளப்பூர்வமாக நாம் எமது சிந்தனைப்போக்கையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள இன்றைய தினத்திலேனும் நாம் உறுதிபூணவேண்டும்.

a_soldier_who_has_lost_both_legs.v1

Disabled-Army-Soldiers

 

eresha_wheelchair130 images (1)

images

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4503

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.