«

»

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”

07-cv-vigneswaran-600புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் பல்வேறு விடயங்கள் குறித்து சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து மிகவும் துணிவோடு தேர்தலில் களமிறங்கி, அசைக்க முடியாது என கருதப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, மிகவும் அமைதியான மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறியிருந்தார். அதே அமைதியுடன், ஆடம்பரமின்றி எளிமையாக சாதாரணமாக, காரியங்களை முன்னெடுத்து வலம் வருகின்றார்.
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகப் போகின்ற நிலையில் அவருடைய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அன்றைய தினமே, அவர் திருகோணமலைக்குச் சென்று கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
முன்னைய ஜனாதிபதியின் வருகையைப் போன்று, யாழ்ப்பாணத்துக்கான இவருடைய வருகை பெரும் ஆரவாரமாக அமையவில்லை. சாதாரணமாக வந்தார். சாதாரணமாகக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சாதாரணமாகத் திரும்பிச் சென்றார் என்பது மேலோட்டமான பார்வை.
இந்தக் கூட்டமும் சாதாரண கூட்டம்தானா அல்லது மிகவும் முக்கியமான கூட்டமா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் முடிவுகள் எதுவும் – மிகவும் முக்கியமான முடிவுகள் என்று கூற முடியாவிட்டாலும், சாதாரண விடயம் குறித்த முடிவுகூட எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வடமாகாண அபிவிருத்திக்குழு கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
சாதாரண கூட்டமாக நடைபெற்று முடிந்துள்ளபோதிலும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல விடயங்கள் வெளிப்பட்டிருக்கின்றன, வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இங்கு வரவேற்புரையாற்றிய வடமாகாண ஆளுநர் பளிஹக்கார அனைத்துப் பங்காளர்களையும் சேர்த்து அர்த்தபுஷ்டியுள்ள கலந்துரையாடலின் ஊடாக, புதிய அரசு நிர்ணயித்துள்ள கொள்கை இலக்காகிய நல்லிணக்கம் மற்றும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் ஆணையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய காணொளியுடன் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அதில் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.
வடமாகாணத்தின் நிலைமைகளை ஜனாதிபதியும், அவருடன் இந்த நிகழ்வுக்காக வருகை தந்திருந்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இதன் மூலம் ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கத்தக்க வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது.
இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை இடம்பெற்றது. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் தயார் செய்திருந்தார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியிருந்தார். தமிழ் மொழியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதனைச் செய்யவில்லை என்றும், நாட்டின் அரசியலமைப்பில் ஆங்கில மொழிக்கு இணைப்பு மொழியாக வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த உரை முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அவருடைய உரைக்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால்தானோ என்னவோ அதில் தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் காணப்படவில்லை.
‘இரண்டு தேசம் ஒரு நாடு’
அறிவை மாத்திரம் பயன்படுத்தி எமது அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. உளப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் ஏற்படுகின்ற மனம் மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை முதலமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
‘நாங்கள் இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாக முன்னேற வேண்டுமானால், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஆகிய மூன்று மொழிகளிலும் உரையாடக் கூடியவராகவும் திறமையுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்’ என முதலமைச்சர் கூறியிருந்தார்.
மொழியின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கை என்ற ஒரு நாட்டின் உள்ளே இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்த இரண்டு தேசங்கள் என்பது பொதுவாக, தமிழ்த்தேசியம், சிங்களத் தேசியம் என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. இதனையே அவர் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தியிருக்கின்றார் எனக் கொள்வதில் தவறிருக்க முடியாது.
எனவே, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதென்பது இதன் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதை, யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக ஜனாதிபதி என்ற ரீதியில் வருகை தந்திருந்த ஜனாதிபதி சிறிசேனவுக்கு குறிப்புணர்த்தியிருக்கின்றார் என்று கருத வேண்டியிருக்கின்றது.
இத்தகைய மொழி அறிவின் ஊடாக எங்கள் நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நல்லிணக்கத்துடன் கூடிய உறவு நிலைக்குத் திரும்பிச் செல்ல முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நாட்டில், பல விடயங்கள், இனங்களுக்கிடையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. சில அரசியல்வாதிகள் இந்த இனவாத நெருப்பு அணைந்துவிடாத வகையில் அதற்கு எண்ணெய் ஊற்றிப் போஷித்திருக்கின்றார்கள் என்பதையும் முதலமைச்சர் எடுத்துக்காட்டத் தவறவில்லை. இந்த நிலை புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் மாற்றடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.
‘வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே 13வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது பயனளிக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் வேறு பல காரியங்களுக்கு மத்தியில் 13வது திருத்தம் மெலிவடைந்து போனது.
அது மட்டுமல்லாமல், தொழில் நுட்ப ரீதியிலான, நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் ஊடாகவும், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், திவிநெகும சட்டமூலம் என்பவற்றினாலும் அது மேலும் தேய்வடைந்து வலுவிழந்து போனது.
கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதியே இப்போதைய தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் ஏனையோர் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள், இந்த 13 வது அரசியலமைப்புத் திருத்தம் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக மாட்டாது என்று எதிர்வு கூறியிருந்தார்கள்.
உண்மையான அதிகார பரவலாக்கம் வேண்டும்
தமிழ் மக்கள் மஹிந்த சிந்தனையை, தமது வாக்களிப்பின் மூலம் புறக்கணித்து வடமாகாணசபையின் முதலமைச்சர் என்ற வகையில் தங்களுக்கு அமோகமாக ஆதரவளித்து தேர்தலில் வெற்றிபெற்றிருந்த போதிலும் மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இணைத் தலைவராகக் கலந்து கொண்டு செயலாற்றுமாறு கேட்டிருந்தார்.
ஆனால் மத்திய அரசாங்கம் என்ன நினைக்கின்றதோ, எதனை விரும்புகின்றதோ, அவற்றை நிறைவேற்றத்தக்க வகையில் வடமாகாண சபை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கம் எதிர்பார்த்து காரியங்களை முன்னெடுத்திருந்தது.
இந்த விடயங்களை, ஒரு கோர்வையாகக் குறிப்பிட்டிருந்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முக்கியமான ஒரு விடயத்தையும் ஜனாதிபதியின் முன்னிலையில்; சுட்டிக்காட்டியிருந்தார்.
அதிகாரப் பரவலாக்கம் என்பது பிராந்தியம் தனக்கு விரும்பியதை, தனக்கு வேண்டியதை, மத்திய அரசின் ஒத்துழைப்போடு, தீர்மானிப்பதற்கு அனுமதிப்பதாக இருக்க வேண்டும். நிர்வாக நடைமுறையில் இந்த அம்சம் கவனத்தில் எடுக்கப்பட்டு விரைவில், அர்த்தமுள்ள வகையில், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்’ என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.
வடக்கு, கிழக்குப் பிரதேசம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்குள்ள பிரச்சினைகள் ஏனைய பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளிலும் பார்க்க வேறுபட்டவை. தீவிரமானவை. எனவே அதற்கு தீவிரமான முறையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது என்பதையும் அவர் தன்னுடைய உரையில் வலியுறுத்தியிருந்தார்.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் மீளளிக்கப்பட வேண்டியது உள்ளிட்ட வடபகுதியின் முக்கிய எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்த அவர், எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வருகின்ற வெசாக் தினத்தன்று சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார்.
புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, மேலும் மேலும் தமது நல்லெண்ணத்தை தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில், ஆழமான விடயங்களை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நாசுக்காக, நாகரிகமாக புதிய அரச தலைவரிடம் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைத்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தைப் போன்று இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் ஒரு கால அட்டவணை இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொது வேட்பாளராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா ஆகியோரிடம் நடத்தப்பட்ட பேச்சுக்கள், அவற்றின்போது ஏற்பட்டிருந்த இணக்கப்பாடு என்பவை குறித்தும் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்காகச் செயற்பட்டிருந்த அணியினருக்கும் இடையில் தேர்தலுக்கு முன்னர் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட வில்லை என்பதை மீண்டும் அவர் இந்த கூட்டத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
முன்னைய சந்தர்ப்பங்களைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை வரவேற்ற அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் தங்களுக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தத் தவறியிருந்தார்கள் என சுட்டிக்காட்டி, இனிமேல் அவ்வாறில்லாமல் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி பயன்பெற முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
வடமாகாண அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பிரச்சினைகள் எடுத்துக்காட்டப் பட்டிருந்தன. ஆயினும் எந்த ஒரு விடயத்திலும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கொள்கை அளவிலான தீர்மானம் குறித்த கருத்துக்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதியின் நிலைப்பாடு
பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய ஜனாதிபதி அவற்றுக்கு நேரடியாக, ஆக்கபூர்வமான பதில்களை வழங்கவில்லை. புதிய ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் சேவகனாக இருந்து வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி மக்களை உளப்பூர்வமாக ஒன்றிணைக்க நடவ டிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
வெறும் உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முடியாது. மணல் கற்களைக் கொண்டு மக்களின் உள்ளங்களை ஒன்றிணைக்க முடியாது என்பதை அண்மைய காலத்து அனுபவங்களின் ஊடாக நன்கு உணர்ந்திருக்கின்றோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அச்சமற்ற ஒரு அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் வாழ வேண்டும். அத்துடன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது, வடக்கு தெற்கு என்று பாராமல் முழு நாட்டையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.
ஆனாலும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இதற்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டு வருகின்றார் என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் மாத்திரம் 90 ஆயிரம் விதவைகள் இருக்கின்றார்கள் என்பது, புள்ளிவிபரத் தகவல். ஆயினும், இங்கு 80 ஆயிரம் விதவைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெற்கிலும் எண்ணற்ற விதவைகள் இருக்கின்றார்கள். அவர்களின் விடயமும் கவனத்தில் எடுக்கப்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது பேச்சளவிலேயே காணப்படுகின்றது. உண்மையாகவே இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும் என்ற உளப்பூர்வமான அணுகுமுறையை, ஜனாதிபதியின் உரையில் இருந்து தெளிவாக உணர்ந்து கொள்ள முடியவில்லை.
நூறுநாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து, மூன்று மாதங்களில் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து களத்தில் இறங்கியுள்ள புதிய அரசாங்கத்திடமிருந்து நாட்டின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமானது என்று கூற முடியாது.
ஆயினும் வரப்போகின்ற தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று பலமான ஓர் ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்பதில் புதிய அரசாங்கத் தரப்பினர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
எனவே, தேசிய மட்டத்திலான பிரச்சினைகளுக்கும், சிக்கல்கள் நிறைந்த தமிழ் மக்களுக்கே உரிய பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வைக் காண்பதற்குரிய முன் ஆயத்தங்களை, தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதில் தவறிருக்க முடியாது. அத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியதே.
இருந்த போதிலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வலுவுள்ளதாக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டைப் புறந்தள்ளுகின்ற அதேநேரம், அரச தரப்பினரின் முகம் கோணாத வகையில் காரியங்களை முன்னெடுத்து நகர்த்திச் செல்ல வேண்டும் என்ற போக்கே தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது.
அத்துடன் ஒரு பொதுவான கொள்கைத் திட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுவதைக் காண முடியவில்லை. முரண்பாடான போக்கையே தலைமைகள் கைக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளால், புதிய அரசாங்கத்தை, சரியான முறையில் அணுகி, தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத்தக்க வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியுமா என்பது சந்தேகமே.
செல்வரட்னம் – சிறிதரன்

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4774

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.