«

»

மோடி திட்டவட்டமான முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு. – மன்னார் ஆயர்

a122
இலங்கைவரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, உண்மையின் அடிப்படையில் சிந்தித்து நீதியின் அடிப்படையில் செயற்பட்டு நல்லிணக்கத்தையும் உண்மையான சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருவதற்கு திடமான முடிவு ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

உயர்ந்த கலாசாரத்தைக் கொண்ட நாங்கள் உரிமைகள் இன்றி இருப்பது மிக வேதனையளிக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

பேராயர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசனின் பவளவிழாவும், சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் பீற்ரோ மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ஆயர் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார். நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் பிரச்சினைகளும் அரசியலும் நல்வாழ்வும் எத்தனையோ வகையில் இந்திய அரசியலோடு பிணைக்கப்பட்டதாக உள்ள நிலையில், இந்திய அரசு எடுக்கும் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகள் தீர்மானமெடுத்து இலங்கையில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்று சிந்திக்கின்றார்கள்.

ஆகவே எமது நாட்டில் உண்மையான விடுதலையும், சமாதானமும் சுபீட்சமான வாழ்வும் கொண்டதாக, நாட்டை எல்லோரும் கட்டியெழுப்பி அழகான நாடாகத் தாய்நாட்டை ஆக்குவதற்கு இந்தியாவின் நல்லெண்ணமும் நல்ல முறையில் செய்யப்படும் திட்டங்களும் மிக இன்றியமையாததாக இருக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார்.

“பல வருடங்களுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இங்கு வருகிறார். அவர் உண்மையின் அடிப்படையில் சிந்தித்து நல்ல தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். உயர்ந்த ஆழ்ந்த கலாசாரத்தைக் கொண்ட நாங்கள் உரிமைகள் இன்றி இருப்பது மிக வேதனையாகவுள்ளது.

அதனை இந்தியப் பிரதமர் உணர்ந்து இலங்கைத் தேசத்தின் அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு உரிமைகளைக் கொடுத்து நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

“இந்தியாவில் எத்தனையோ தேசியங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஆழ்ந்த அரசியல் அமைப்பைக் கொண்டுள்ள இந்தியா மகிழ்ச்சியான வாழ்வைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய கீதத்தைக்கூட அவர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பாடுவதனைக் காணலாம். இங்கு அப்படிக் காணமுடியாது. நாம் எவ்வளவுக்கு அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதனை, நாம் வெளிநாட்டுக்குப் போனால் உணர முடியும். அந்தளவுக்கு இங்கு நாம் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம்.

வரலாறு அறியாத காலத்துக்கு முன்னரே தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். 10 நிமிடத்தில் நாம் தமிழ் நாட்டுக்குச் செல்லலாம். அங்கிருந்து வந்து குடியேறி யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் சென்று வியாபாரங்கள் செய்து வாழ்பவர்களாக இருந்தோம்.

இப்போது எங்களை வந்தான் வரத்தான் என்றுகூறி அல்லது நிலத்தில் வேரூன்ற முடியாது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் என்றொரு கருத்தை சிங்கள அப்பாவி மக்கள் மத்தியில் பரப்பி தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜையாக அன்றி முன்றாவது அல்லது நான்காந்தரப் பிரஜையாகவோ தள்ளி வைத்த அரசியல் வரலாறு மிகவும் கவலைக்குரிய வரலாறு.” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒரே நாட்டில் அக, சுய, நிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்து விட்டு மகிழ்ச்சியாகவாழ ஒரு தாய் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்தியப் பிரதமரின் வருகை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றும் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4840

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.