«

»

மறந்துவிட்டு அல்லது ஏற்றுக் கொண்டு பயணிப்பதா?

prabakaran_001
அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் தமிழர்களின் நிர்வாகத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புப் பிரிவுகளும் இருந்த காலகட்டம் என்று ஒன்றுண்டு. அதனை நாம் பிரகடனப்படுத்தப்படாத அரசு என்று அழைத்தோம்.
அப்படியிருந்த அந்தக் காலங்களில் தமிழர் தரப்பு உலகநாடுகளின் இராஜதந்திரிகளோடு தமிழர் தீர்வுக்காகப் பேசிய வண்ணமே இருந்தார்கள்.
அவர்கள் தங்களால் முடிந்தளவு இராஜதந்திர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். ஆயுதப் போராட்டம் மிக உச்சநிலையில் இருந்த காலத்திலேயே இவை நிகழ்ந்தன.
இறுக்கமான உலக நிலைப்பாடுகளும், செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதல்களும் பல்வேறு நாடுகளில் தேசியச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த அமைப்புகளில் ஏற்படுத்திய தாக்கங்களை நாங்கள் கணக்கில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
புலிகள் ஏதோ இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் தோற்றுப்போனதாகவும், அதன் காரணமாகவே முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்ததாகவும் சொல்லிக்கொண்டிருக்கும் சிலரின் அரசியல் அவதானங்கள், எங்கள் போராட்ட வடிவங்களின் உண்மைநிலையினை அறியாததால் ஏற்பட்டதாகவே உணருகின்றேன்.
தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை, இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தாமல் சென்றதுவே இறுதி முடிவுக்கு காரணம் என்று சொல்பவர்களுக்கும் பதிலாக இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் உண்மையாகவே போரினை நேசித்தார்களா? அல்லது அவர்கள் அதற்குள்ளே தள்ளப்பட்டார்களா? என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு பார்ப்பதன் ஊடாகவே இழந்த தோல்விகளில் இருந்து மீண்டு அரசியல் வெற்றிகளை எவ்வாறு கண்டடைவது என்பது குறித்துச் சிந்திக்கலாம்.
பலத்தை இழந்த இனமாக நாம் இருந்துகொண்டு எந்தப் பிரச்சினையையும் கறுப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது. இந்தச் சூழ்நிலையில் கறுப்பு வெள்ளைக்கிடையிலும் உள்ள பல்வேறு வர்ணங்களைக் கண்டறிந்து நகர்வதே புத்திசாதுரியமாகும்.
விடுதலைப்புலிகள் தாம் கடந்து வந்த பாதைகளில் இரண்டு மிகப்பெரிய இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.அந்த முயற்சிகள் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கின்றன.
2001 டிசெம்பரில் ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் விடுதலைப்புலிகளோடு ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இலங்கையின் சர்வ அதிகாரங்களும் படைத்த ஐனாதிபதியாகச் சந்திரிகாவே பதவியில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளினூடான பேச்சுக்களில் ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன.
விடுதலைப்புலிகள் பல நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, அரசியல் சாணக்கியர்கள் பலரின் அறிவுரைகளையும் உள்வாங்கி ஒரு இடைக்கால நிர்வாகத் தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டத்தை ரணில் அரசாங்கத்திடம் கொடுக்கின்றார்கள்.
உலகநாடுகள் தங்கள் மகிழ்ச்சியினையும் ஆதரவையும் தெரிவிக்கின்றார்கள். இந்த இடைக்கால ஆட்சித் திட்டத்தில் தமிழர்கள், சிங்களவர்கள் முஸ்லீம் மக்கள் என அனைவரும் உள்ளடங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான உதவி செயலாளர் ‘ரிச்சாட் ஆர்மிட்டாஜ்’ ( Interim Self Governing Authority ISGA proposals forwarded by LTTE. US Deputy Secretary of State Richard Armitage) இடைக்கால நிர்வாகத் தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டத்தைப் பற்றிக் கருத்துக் கூறுகையில்
“விடுதலைப்புலிகளின் அரசியல் அபிலாசைகளை நான் முதல் முறையாக மிகவும் விளக்கமான விரித்துரை மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புப் பிரதிநிதி இது குறித்துக் கருத்துக் கூறுகையில் “இத்திட்ட அறிக்கையானது பேச்சுவார்த்தையின் மிகவும் முக்கியமான முதற்படி” என்றார்.
விடுதலைப்புலிகள் சிலவற்றை விட்டுக்கொடுத்து, சிங்கள மக்களையும் உலக அரசுகளின் ஆதரவுகளையும் உள்வாங்கக் காரணமாக இருந்த இடைக்காலத் திட்ட அறிக்கையைக் காரணம் காட்டி, ஜே.வி.பி மற்றும் கடும் போக்காளர்கள் மிகப்பெரிய அழுத்தம் ஒன்றினைக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் பிரதமர் ரணில் அவர்கள் அமெரிக்காவில் இருந்தார்.
(பிரதமர் ரணில், அமெரிக்கா ஜனாதிபதி புஸ் – நவம்பர் 05. 2003இல் சந்தித்த போது)
தென்னிலங்கையில் பேரினவாதிகளின் அழுத்தம் காரணமாகவும் தனது சுய திட்டத்தின் பேரிலும் ஜனாதிபதி சந்திரிகா நவம்பர் 04, 2003 இல் ரணிலின் அரசாங்கத்தைக் கலைத்தார். அத்துடன் சந்திரிகா பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கியமான அமைச்சுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.
திடீரென அரசாங்கக் கட்டடங்களுக்கு அதி உச்ச இராணுவப் பாதுகாப்பை வழங்கியதோடு, இலங்கைப் பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டார். அந்தச் சமயத்தில் ரணில் அவர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸிடம் பேச்சுவார்த்தைகள் நன்றாக நடப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமையினைக் கேள்விப்பட்ட ரணில் அவர்கள் “தனது அரசாங்கம் ஒரு போதும் பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கப் போவதில்லை” என்பதைத் தனது அரசாங்கம் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிந்திருந்தும் சர்வதேச ஊடகங்களுக்கு வாசிங்டனில் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தது ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருந்தது.
அமெரிக்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கருத்துச் சொல்கையில் “இதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்தப் பாராளுமன்றக் கலைப்புக் குறித்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்” என்றார். உலகநாடுகள் தங்கள் கவலையினைத் தெரிவித்தன. அந்த நாட்டுக்கு யாரும் செல்லக்கூடாது என அறிக்கை விடுவதற்கான முயற்சிகளைக்கூட மேற்குலகம் செய்ய எத்தனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்தக் கலைப்பு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமையவே நடந்தேறியது என்பதை ஏற்றுக்கொண்டு உலகம் மீண்டும், இலங்கையிடம் ஏமாந்துபோனது. இலங்கைக்கான அரசியல் சாசனத்தை அவர்கள் எப்படியெல்லாம் பிரயோகிப்பார்கள் என்பதை மிகவும் அழகான முறையில் காட்டிநின்ற செயற்பாடு இது.
ரணில் அவர்கள் சந்திரிகாவின் இந்தப் பொறுப்பற்ற செயலினால் இலங்கை மீண்டும் இரத்தக்களரிக்கு இட்டுச் செல்லப்படுமென்றும், சர்வாதிகார ஆட்சி ஒன்றுக்கு அத்திவாரம் இடுவதாக அமையும் என்றும் சொன்னார். அதுவே உண்மையாகப் போனது. சந்திரிகா ரணிலுடைய ஆட்சியைக் கலைக்காது விட்டிருப்பின் முள்ளிவாய்க்காலில் நாம் எல்லாவற்றையும் தொலைத்துவிடாமல் தப்பியிருக்க முடியும்.
உலகத்தை ஏற்றுக்கொண்டு, பலவற்றை விட்டுக்கொடுத்து பலம் பொருந்தி இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தோடு புலிகள் இதயசுத்தியோடு ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.
இடைக்காலப் பொதி கொடுக்கப்பட்ட காரணத்தால், அந்த முயற்சியினை சிங்கள ஏகாதிபத்தியம் தனது அரசியலமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அழித்துக் கொண்டது. இன்று ஜனாதிபதி ஆட்சிமுறையினை ஒழிக்கவேண்டும், என்று ஒரு அணியில் ரணிலோடு சேர்ந்திருப்பவர் வேறு யாரும் அல்ல எங்கள் சந்திரிகா அம்மையார் என்பதை மறந்துவிட்டு நாம் முன்செல்லமுடியாது.
இந்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள்தான் அன்று அந்தச் சட்டத்தை மிகவும் கீழ்த்தரமாக எமக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தார்கள்.
2006 இல், Hindustan Times பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கின்றபோது “தான் வாழ்க்கையில் செய்த பெரும் தவறு ரணிலுடைய அரசாங்கத்தைக் கலைத்தது” என்று சொல்லியுள்ளார்..
அந்தக் கலைப்புக்கு எங்கள் அணியில் இருந்த ஜேவிபி இனரும், கடும்போக்காளர்களுமே காரணம்” என்றார். 2014 தேர்தல் கூட்டமைப்பில் அவர்களோடு இணைந்தே சந்திரிகா அம்மையார் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, சந்திரிகாவின் சுதந்திரக்கட்சியும் ஜேவிபியும் மற்றும் கடும்போக்காளர்களின் இதரகட்சிகளும் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்து, ஏப்ரல் 2ம் திகதி 2004 பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தமிழுருக்கு எதிரான கருத்துக்களை விதைத்து ஆட்சியினைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் பாராளுமன்றத்துக்கு 105 இடங்களை சந்திரிகாவின் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவும், ரணில் கட்சியினர் 82 உறுப்பினர்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 22 இடங்களையும் பெற்று வெற்றியீட்டினர்.
புலிகளின் அரசியல் கட்சியாகவும் அவர்களின் ஆசிர்வாதத்தோடும் உருவாக்கப்பட்ட தமிழர் தேசியக்கூட்டமைப்பு வெற்றியீட்டியது. மக்கள் விடுதலைப்புலிகளை ஏற்றுக் கொண்டதையும், அவர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை அவர்களுக்கு மக்கள் கொடுத்திருந்ததும் தெளிவானதாக இருந்தது.
சுனாமிக்கு பிறகான காலம்
2004 டிசெம்பரில் எங்கள் பிரதேசங்களை சுனாமி அடித்து நொருக்கியபோது, விடுதலைப்புலிகள் பக்கத்தில் இருந்து நிவாரணம் வழங்கும் முயற்சிகள் பல நடைபெற்றன. சிங்கள மக்களுக்கும் புலிகள் தங்கள் சேமிப்பு நிலையங்களில் இருந்து உணவுப்பொருட்களக் கொடுத்து உதவினர்.
கிழக்கில் புலிகள் சுனாமியில் சிக்கிய சிங்கள இராணுவத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் தங்களை ஈடுப்படுத்தியிருந்தனர்.
இந்தப் காலப்பகுதியில் தான் இலங்கை அரசாங்கதையும், புலிகளையும் இணைத்து சுனாமிக்கு பின்னரான நிவாரணம் வழங்கும் குழு நிறுவப்பட்டது.
Post-Tsunami Operational Management Structure P-TOMS என்ற அந்தக் குழுவில் அம்பாறை, மட்டகளப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் திருகோணமலை போன்ற தமிழர் பிரதேசங்களில் ஏற்பட்ட சேதங்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான புனரமைப்பு வேலைகளையும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
அந்தக்குழுவில் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரும், புலிகள் பிரதிநிதி ஒருவரும், முஸ்லீம்களின் பிரதிநிதி ஒருவருமாக எல்லாமாக மூன்று பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகளின் சமிக்ஞையினைப் பற்றி சிங்கள அரசாங்கப் பிரதிநிதி சொல்கின்றார். ”இயற்கையின் காரணமாக அவர்களுக்கும், நமக்கும் இருந்த வேறுபாடுகளைக் களைந்து விட்டு அவர்கள் எங்களோடு முதல் முதலாக வேலை செய்ய முன்வந்திருப்பதைப் பாராட்டி ஏற்றுகொள்ளவேண்டும்”.
இந்த முயற்சியினைக் கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் மிகவும் ஊக்கத்தோடு வரவேற்றிருந்தன. அன்றைய ஐக்கியநாடுகளின் பொதுசெயலாளர் கோபி அனான் கூறும்போது ”சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் ஏற்பட்டதை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.” என்றார்.
ஜேவிபி உறுப்பினர் போராட்டத்தை நடத்தும் காட்சி
உலகநாடுகள் ஏற்றுக்கொண்ட P-Toms முயற்சியினைக் கூட இலங்கை நீதிமன்றத்துக்கூடாக இடைக்கால உத்தரவு வாங்கித் தடைசெய்தார்கள். இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடு என்று சொல்லி அதை முடக்கிப்போட்டு, உலகத்தை மீண்டும் ஏமாற்றிவிட்டார்கள் சிங்களத் தலைவர்கள்.
இயற்கை அனர்த்தத்திலிருந்து மீளுவதற்கான நிவாரண முயற்சியினைக் கூடத் தர மறுத்து, அந்த முயற்சியினைத் தடுக்க அவர்களின் சட்டத்தை அவர்களுக்காக பயன்படுத்திக்கொண்டவர்கள் எவ்வாறு நாம் இனப்படுகொலைக்கான விசாரணையினை மேற்கொள்ளும் தகுதியினைப் பெற முடியும்?
சந்திரிகாவோடு இருந்த (இருக்கும்) இரண்டு பெரும் கட்சிகளும் கூட இந்த முயற்சியினைத் தடுத்திருந்தார்கள் (அவர்கள்தான் இன்று மைத்திரி அணியில் ஒன்றாக உள்ளார்கள் ). இந்த முயற்சி வெற்றியீட்டி இருக்குமானால், இன்று நாம் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்திருக்க வேண்டி வந்திருக்காது.
பலர் சுனாமியில் இருந்து மீண்டு வருவதற்குக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கத், தெற்கில் JVP மற்றும் கடும்போக்காளர்கள் மேலைத்தேயத்துக்கு எதிரான போராட்டங்களை அதிகப்படுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பெரும் முயற்சிகளும் தமிழர் தரப்பு பலத்தோடு இருக்கும் காலத்தில் விட்டுக்கொடுப்போடு இயங்கியமையால் நடந்தவை. அவற்றில் ஒரு முயற்சியாவது வெற்றியீட்டியிருக்குமானால், பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு எங்கள் நாட்டில் இன்று வேறோர் சூழ்நிலை உருவாகியிருக்கும்.
விட்டுக்கொடுக்காத நிலையெடுத்தே நாம் தெருவுக்கு வந்தோம் என்று புலம்புவர்கள் நிச்சயம் இவ்விரண்டு முயற்சிகள் எதற்க்காகத் தோற்றுபோனது என்பதை உணரவேண்டும்.
இலங்கையின் அரசியல் பாதை ஊடாக நாம் பயணிக்கும் போது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை வைத்து எவ்வாறு நம்மைத் தோற்கடிப்பார்கள் என்பதையும் உள்வாங்கி அடுத்தகட்ட நகர்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
2009க்கு பிறகான காலப்பகுதி
கிழக்கில் தமிழ் தேசியம்
தமிழர்களின் விகிதாசாரம் மாற்றப்பட்டு அதன் ஒரு அங்கமாக நாம் 2012இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம். சுதந்திரக் கட்சிக் கூட்டமைப்பு 14 இடங்களையும், தமிழர் தேசியக் கூட்டமைப்பு 11 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் பெற்றது.
முஸ்லிம் காங்கிரசினர் சுதந்திரக் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பிரச்சாரம் செய்துகொண்டே, இந்த தேர்தலைச் சந்தித்தார்கள். திரு. சம்மந்தன் அய்யா அவர்களைத் தங்களோடு சேர்ந்து ஆட்சியினை ஏற்றுக்கொள்ளச் சொல்லி விட்டு, தமிழர்களைத் தள்ளி வைத்துச் சிங்களக் கட்சியினை அணைத்துக் கொண்டு சென்றார்கள்.
தற்போதைய நிலையில் நாம் கிழக்கை மிகவிரைவில் தொலைத்து விடப்போகின்றோம். அங்கே குடியேற்றங்கள் பரவலாக நிகழ்த்தப்பட்டு, தமிழர்களின் இடத்தை தமதாக்கிக் கொண்டுவருகின்றார்கள்.
இனங்களின் விகிதாசாரம் மாற்றப்பட்டுவிட்டன. நாளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு பிரதேசமாக நாம் தேர்தலில் நின்றாலும், நமக்குத் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.
இங்கேதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் கிழக்கைப் பலப்படுத்தப் பல உதவிகளைச் செய்தாக வேண்டியுள்ளது. கிழக்கில் வாழும் மக்களின் ஏழ்மை நிலை நீக்கப்படவேண்டும். இது உடனடிச் செயற்பாடாக அமைய வேண்டும்!
தமிழர் தேசியக் கூட்டமைப்பும் எமது எதிர்காலமும்
இறுதியாக நட்துமுடிந்த தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு இடப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை விவரம்.
இடம் ஆண்டு- 2004 ஆண்டு- 2010
மட்டக்களப்பு- 161,011 66,235
யாழ்ப்பாணம்- 257,320 65,119
திருகோணமலை- 68,955 33,268
வன்னி – 90,835 41,673
திகாமடுல்ல- 55,533 26,895
விடுதலைப் புலிகளின் ஒரு அரசியல் அங்கமாகக் (proxy) கருதப்பட்டு, இலங்கை அரசியலுக்குள்ளே உள்வாங்கப்பட்டவர்கள்தான் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர்.
அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் அபிலாசைகளை அன்று ஏற்றுக்கொண்டதன் காரணத்தால், இன்று வரைக்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் நேசிக்கப்படுபவர்கள். ஒரு திட்டம் சறுக்கும் போது, திட்டம் இரண்டைப் பற்றி தேடுவோம். ஆங்கிலத்தில் Plan B என்பார்கள். அந்த Plan B தான் எமக்கான இந்தத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர்.
மேல் காட்டியிருக்கும் புள்ளிவிபரத்தில் 2004 இலும் 2010 இலும் நடந்த தேர்தல்களில் தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் இழந்திருக்கும் வாக்கு விகிதாசாரத்தை உற்றுநோக்கும்போது, தொடர்ச்சியாக அவர்கள் வாக்குகளை இன்னும் கூடுதலாக இழந்துகொண்டு வருவதற்கான காரணங்கள் பல உண்டு.
கிழக்கு இன்று சிங்கள மயப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்கள் தேர்தலில் பங்கெடுப்பதை வெறுக்கின்றார்கள். தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் மக்களில் ஒருவராக வந்து செயற்படாத காரணம், தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் மீதான விமர்சனம், கட்சிப் பதிவின்றி இழுத்தடிப்பு, சனநாயகத்துக்கு மாற மறுப்பது, தேர்தல் அரசியலில் நம்பிக்கையிழந்த மக்கள் என்பன நான்கு வருடங்களுக்குப் பின்பான விழ்ச்சிக்குக் காரணங்களாக எமக்குத் தெரிகின்றது.
2015 தேர்தலைச் சந்திக்கப்போகும் கூட்டமைப்பினர் எத்தனை இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்பது கவலை கொள்ள வைக்கின்றது. தற்போதைய நிலமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தத் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தி, இன்றைய உலக சக்கரத்தில் மாட்டியிருக்கும் எங்கள் பிரச்சனைக்கு ஆணித்திரமான ஒரு எதிர்காலத்தை நமக்கு அவர்களே ஏற்படுத்திதர ஆசைப்படுகின்றோம்.
ஆனால், நிலத்தில் இருக்கும் மக்களை அவர்களை உள்வாங்காமல், சனநாயகத்துக்கு முரணாக இந்தக் கூட்டமைப்பு செயற்படுவதின் காரணமாக மக்களின் ஆதரவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் படுபயங்கரமான நிலை ஒன்றினைப் பார்க்கின்றோம்.
கட்சி தனது பதிவினைக் கூடச் செய்யாமல், அதற்குப் பல முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டு, சிலர் தங்கள் சர்வாதிகார போக்கை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் தேய்ந்து போதல் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக அமையும். அப்படி மக்களால் தோற்கடிக்கப்படும் நிலை வந்தால் கவலை எங்களை உள்கொள்ளும். அதன்பின் மீண்டு வருவது கடினமானதாகும்.
தமிழ் போராட்டத்தில் தங்களை 60 வருடங்களுக்கு மேலாக இணைத்துக்கொண்டவர்கள் தமிழரசுக் கட்சியினர். அவர்களின் விட்டுக்கொடுக்காத தமிழ்த் தேசிய உணர்வும் போராட்ட வரலாற்றையும் யாரும் குறை சொல்லமுடியாது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.
தமிழர் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால், தனது கட்சியும் அதனூடான தமிழர் தேசியத்துக்கான தங்களது மேல் நிலையும் குறைந்துவிடும் என அவர்கள் பயப்படுகின்றார்கள்.
அதனால் அதைப் பதிவு செய்வதைத் தவிர்க்கின்றார்கள். கட்சி சனநாயகம் என வந்தபின்னால், தலைவர்கள், உறுப்பினர்கள் கட்சிக்கூடாக (Candidate Nomination) உறுப்பினர்களை உள்வாங்கித் தங்கள் பிரதிநிதிகள் யார் என்பதை கட்சித் தேர்தலுக்கூடாகத் தீர்மானிக்கலாம்.
இதன் மூலம் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்களைக் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு. உறுப்பினர்களின் மனங்களை வெல்வதற்குப் போட்டியிடும் ஒவ்வொருவரும் வேலை செய்தாகவேண்டும்.
நான்கு பேர்கள் மூடிய அறைக்குள்ளே இருந்து முடிவெடுக்கும் நிலை சரிவராது என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இது வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கும் பொருந்தும்.
திரு. சம்மந்தன் அய்யா அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தவிக்கும் எம் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகின்றார். சாணக்கியம் படைத்த ஓர் அரசியல்வாதி அவர்.
தமிழ்த் தேசியத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர் என்பதையும் ஏற்றுக்கொள்ளுகின்றோம். ஆனாலும், கட்சி சார்ந்த முடிவுகளைத் தனி மனிதர்களால் நிகழ்த்த முடியாது என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
நாம் தனிப்பட்டவர்களாக உலகைவிட்டு மறைந்த பின்னாலும், எங்கள் இனத்தைச் சுமந்து செல்லும் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி விடவேண்டும் என்பதை மதிப்புகுரிய எங்கள் சம்மந்தன் அய்யா அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் இல்லாத காலத்தில், நாம் யாருக்கும் அடி பணிந்து செல்லாத அமைப்பொன்றை அவர் நமக்குத் தற்பொழுது ஏற்படுத்தித் தரவேண்டும். தான் இல்லாது போனாலும் தன்னைப் போன்ற ஒரு தளபதியினை உருவாக்கி விடவேண்டும். அது நெறிமுறையினால் உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். தனி மனித ஆசா பாசங்களால் உள்வாங்கப்பட்டதாக இருக்கக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
தமிழர் தேசியக்கூட்டமைப்பில் ஒரு சிலரின் மீது குற்றங்களைச் சுமத்திப் பிரிந்து சென்றவர்கள் எதைச் சாதிக்கமுடியும்? என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பயணிக்கும் கப்பல் ஓட்டை விழுந்து விட்டதாக நினைத்துதுத் தப்பி இன்னும் ஒரு கப்பலில் பயணிக்கும் வேளையில் தப்பிய கப்பலிலும் ஓட்டை விழுக்கின்றபோது இன்னுமொரு கப்பலுக்குத் தாவியாக வேண்டும்.
இப்படியே தாவித் தாவிக் கொண்டிருந்தால் ஓட்டை விழுந்தவுடன் ஓடுவதற்குத்தான் நாம் பழகிவிடுவோம். அப்படிச் செய்கின்ற போது நாங்கள் “பெரும்” சக்தியாக உருவாக்கம் பெற முடியாமல் போய்விடும். எங்கள் பிரதேசத்தை ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருகின்றோம் என்பதை உணரவேண்டும்.
போராட்டத்தின் எதிரிகளாக கடைசிவரைக்கும் காட்டியும், கூட்டியும் கொடுத்தவர்கள் இன்று தமிழர் தேசியக் கூட்டமைப்பை தங்கள் அமைப்பாகவும், அவர்களை அணைத்துச் செல்லத் நாமே வழி அமைத்துக் கொடுக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
எங்கள் வழிகாட்டிகளைக் கைவிட்டுத், தள்ளிப்போய் நிற்பதனால் நாமே எங்கள் தமிழர் தேசியக்கூட்டமைப்பை எதிரிகளின் கூடாரமாக்கி விடக்கூடாது.
நீ்ங்கள் விரக்தியில் போய் உருவாக்கும் இன்னுமொரு கட்சியில் நாம் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் மேல் முன்வைக்கின்ற பிரச்சனைகள் அங்கும் வரமாட்டாது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது?
தமிழர்களுக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை தமிழர் தேசியக் கூட்டமைப்பு. அதை நாம் பலப்படுத்தியாகவேண்டும். தலைமைகள் சில விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தி, வெளியே போன நம்மவர்களையும் உள்வாங்க வேண்டும். தமிழர்களுக்காகவே பேசக்கூடிய அவர்களின் அரசியல் பாதையில் வெற்றியீட்டிக் கொடுக்ககூடிய திடமான ஒரு பாதையில் பயணிக்கவேண்டும்.
அந்தப் பயணத்தில், தங்கள் நேரத்தையும், பணத்தையும் போராட்டத்துக்கு அள்ளிக்கொடுத்த எங்கள் மக்கள் மீண்டும் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் கொடுத்தே விடுதலைத் தீயினை வளர்த்தார்கள்.
தலைவர்கள் சற்றே இறங்கி வந்து மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்காகப் பேசவும் அவர்களுக்காகச் செயற்படவும் துணிகின்ற போது, பலமான மாபெரும் மக்கள் சக்தி அந்த அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
தமிழர் தேசியக் கூட்டமைப்பு சிறுகச் சிறுக முன்னேறுவதாக ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுக்கின்ற போது, அங்கே சிங்களக் குடியேற்றம் அதி வேகமாக நடப்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் முயற்சிகள் யாவும் முன்னோக்கி நகருவதாக இருக்கவேண்டுமேயன்றி, பின்னோக்கிப் போதல் கூடாது.
புலிகள் பலத்தோடு இருக்கும் போதே பேச்சில் ஈடுபட்டார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்து கொண்டிருக்கும் போதே 2006 இல் கனடா அவர்கள் மீது தடையினைப் போட்டது.
இரு கட்சிகள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முடிவானது மற்றைய கட்சியைப் பேச்சுவார்த்தையில் ஈடுபாடு கொள்ளாமல் சண்டையில் நாட்டம் கொள்ள வைத்தது. இதுவே வரலாறு. அவர்கள் பலம் பொருந்திய காலத்திலேயே உலகம் எம்மை உருட்டி விளையாடியது.
நாம் இன்றும் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், பலம் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. ஆகையினால், மக்களின் அபிலாசைகளை மக்களோடு நின்று மக்களுக்காகப் பேசுங்கள்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தலையாட்டியாகவேண்டும் என்றால், நாம் எல்லோருக்கும் தலையாட்டத் தள்ளப்பட்டு மக்களிடம் இருந்தும் இலக்கில் இருந்தும் தூரச்சென்று விடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. எங்களுக்கானதை நாங்கள் தான் கேட்கமுடியும். எங்கள் மக்களுக்கானதே எங்கள் பயணம்! மற்ற சக்திகளின் நலன்களுக்கானது அல்ல.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5001

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.