«

»

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் அழிவை நோக்கி இட்டுச் செல்லும், கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்

kajenthira-kumar
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது.
அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்? அதனைக் கஜேந்திரகுமாரே கூறுகிறார்:
“ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனக் கூறி வருகின்றார்கள் இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கோசங்களினால் நாம் எதனையும் சாதித்து விடப்போவதில்லை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன அங்கு சமஷ்ஷ முறையிலான ஆட்சி நடை பெறுகின்றது. அது போன்றே கனடா ஜேர்மன் சுவிஸ் போன்ற நாடுகளிலும் கூட மாநில சுயாட்சி அடிப்படையில சுய நிர்ணய உரிமையுடன் அங்கு வாழும் மக்களம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் பிரிவினை வாதத்தின் மூலம் எதனையும் சாதித்தவிட முடியாது.
தமிழர் ஒரு தேசம் என்ற நிலைப்பாடு தமிழ் தேசிய முன்னனி முன்வைத்த விடயம் அல்ல இதனைத் திம்பு மாநாட்டில் தமிழ் மக்களின் அனைத்து கட்சிகளும் இணைந்து முன்வைத்த விடயமாகும் இதனை திம்பு மாநாட்டில் சமர்ப்பித்த விடயங்கள் எடுத்துப் பார்த்தால் தெரியும்.

தமிழ் ஒரு தேசம் என்ற விடயம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஒரு தேசம் என்ற வகையில் தான் தமிழர்களுக்கு தாயகம் இருப்பதன் அடிப்படையில் தான் சுய நிர்ண்ய உரிமையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய அரசியலில் இந்த நிலைப்பாடுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டைக் கைவிட்டு தமிழ் தேசிய வாதத்தை முன்கொண்டு செல்ல முடியாது தமிழ்த் தேசிய வாத்திற்கும் தமிழுக்கும் இடையில் உள்ள உறவுகள் இதுதான்.”
சம்பந்தன் கூறும் கருத்தின் உள்ளடக்கம் தொடர்பான சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறும் சிறுபிள்ளைத்தனமான பொழிப்புரை கேலிக்கிடமானது.
முதலாவதாக வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஒரு தேசிய இனம். ஆக, அவர்கள் ஒரு தேசத்தைச் சார்ந்தவர்கள், ஒரு தேசம் என்ற அடிப்படையில் அவர்களுக்குச் சுய நிர்ணைய உரிமை உண்டு. ஆக, அவர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையைக் கோரி நடத்தப்படும் போராட்டமே தேசிய விடுதலைப் போராட்டம். இலங்கை என்ற நாடு வட-கிழக்குத் தமிழர்களின் தேசத்தையும் இன்று உள்ளடக்கியுள்ளது. அவர்கள் தமது பிரிந்து செல்லும் உரிமையை பேரினவாத அரசுடன் போராடியே வெற்றிகொள்ள முடியும். அவ்வாறான போராட்டத்தில் தமது பிரிந்து செல்லும் உரிமையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் பிரிந்து செல்வதா, இணைந்து கூட்டாட்சி நடத்துவதா என்பது அவர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடு.
ஒரு வேளை எந்த நேரத்திலும் பிரிந்து செல்லும் உரிமையுடன் இணைந்து வாழ்வதா அன்றி பிரிந்து தனியரசு அமைப்பதா என்பதை உரிமை கிடைத்த பின்னர் தீர்மானிக்க வேண்டிய அரசியல்.
தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட அங்கீகரிக்கின்றது. அந்த உரிமைக்காகப் போராடும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பிரிவினை வாதிகள் அல்ல; அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமையையே கோருகிறார்கள் என்று உலகத்திற்குக் கூறுவதற்குரிய ஒவ்வொரு சந்தர்ப்பமும் தவறவிடப்பட்டுள்ளது. கஜேந்திர குமார் பொன்னம்பலமும் மீண்டும் அதே தவறை இழைப்பது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.
சுய நிர்ணைய உரிமைக்கான மக்களில் போராட்டத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியா என்ற கேள்விகளும் எழுகின்றன.
வன்னி வரைக்கும் நகர்த்திச் சென்று போராட்டத்தை அழித்துச் சிதைத்த மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் உளவு அமைப்புக்களின் நிழலில் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிழைப்பிற்காக இலங்கையில் அரசியல் நடத்துவது பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் அழிவை நோக்கியே இட்டுச் செல்லும்.
ஒரு மிதமான தேசிய முழக்கங்களை முன்வைத்து வாக்குத்திரட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. அதே போல முட்டள் தனமான தீவிரவாதியாகக் காட்டிக்கொண்டு புலம்பெயர் அமைப்புக்களின் கடைக்கண் பார்வையை பெற்றுக்கொள்வதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெற்றுள்ளது. இந்த இரண்டு பகுதியினருமே மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அல்ல. அவர்களின் நோக்கங்கள் வேறு.
இரண்டாவதாக, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து எமது பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை நடத்துகிறோம் என்றால் ஏனைய தேசிய இனங்களில் பிரிந்து செல்லும் உரிமையை நாம் மதிப்பளிப்பதிலிருந்தே அது ஆரம்பமாகும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையில் இருதேசிய இனங்கள் மட்டுமே வாழ்வதாகக் கூறுகிறார். தமிழர்கள் சிங்களவர்கள் என்று அத்தேசிய இனங்களை வசதியாகக் குறுக்கிக் கொள்கிறார். இங்கு மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமையும், இஸ்லாமியத் தமிழர்களின் உரிமையும் மறுக்கப்படுகிறது.
இலங்கையில் நாய் குரைத்தாலும் ஐ.நாவிற்கு ஓடிச்சென்று அழித்தவர்களிடமே மண்டியிடும் அரசியல்வாதிகள், தமது கொல்லைப்புறத்தில் வாழும் பலமிக்க ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமையைக் கூட மறுக்கிறார்கள்.
மூன்றாவதாக, ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் தேசிய இனம் சிறுபான்மைத் தேசிய இனம் என்பதில் என்ன தவறு? சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவது தானே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியில் எதிர்கொள்வதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவர்களின் அரசியல் ஒடுக்கபடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கானது அல்ல. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கேலிக்கூத்து அரசியல் ஒரு புறத்தில் சுய நிர்ணைய உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைபை வளர்த்து அங்கீகரமுள்ள அமைப்பாக மாற்றும்.
ஏனைய தேசிய இனங்களை அன்னியப்படுத்தும். உலகில் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடும் மக்கள் மத்தியில் அருவருக்கத்தக்க பிரிவினை வாதிகளாக எம்மை அடையாளப்படுத்தும். ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மத்தியில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5140

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.