«

»

ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள்!

baby_week_31_twins
அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்த பின் அந்த பெண்ணை, தனியாக விட்டு பிரிந்தார் அவரது காதலர். இதனால், தனது குழந்தைகளை பராமரிக்க காதலரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி, பாசிக் கவுன்டி நீதிமன்றத்தில் அந்த பெண் மனு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சொகைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தது. இரட்டை குழந்தைகளும், காதலனுக்குதான் பிறந்ததா என்பது குறித்து டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சோதனையில் தான் திடுக்கிடும் தகவல் வெளியானது.
பெண்ணின் ஒரு குழந்தையின் டிஎன்ஏவும் காதலனின் டிஎன்ஏவும் ஒத்துப்போயின. மற்றொரு குழந்தையின் டிஎன்ஏ வேறுபட்டிருந்தது. இது குறித்து விசாரித்த போதுதான் அந்த பெண் உண்மையை ஒப்புக் கொண்டார்.
காதலருடன் நெருங்கமாக இருந்த அடுத்த ஒரு வாரத்தில் அந்த பெண், வேறு ஒரு நபருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மற்றொரு குழந்தை வேறு ஒரு நபருக்கு பிறந்தது என்பது மருத்துவ ரீதியாக நிரூபணமாகி உள்ளது. அந்த நபர் யாரென்று தெரியாது என பெண் கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட வினோத வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பெண்ணின் காதலன், அவருக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு பராமரிப்பு செலவு தொகையாக ரூ.2,000 வீதம் வழங்குமாறு உத்தரவிட்டார். ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளுடையது என்பது மருத்துவ ரீதியாக அபூர்வமாக நிகழும் ஒரு சம்பவமாகும்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘ஆணின் விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கக் கூடியது. எனவே ஒரு பெண், ஒரு ஆணுடன் நெருக்கமாக இருந்த அடுத்த ஒரு வாரத்தில் மற்றொரு ஆணுடன் சேர்ந்திருந்தால், இரண்டு பேரின் விந்தணுக்கள், இரு வெவ்வேறு கருமுட்டைகளில் சேர்ந்து இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளன.
10 இலட்சத்தில் ஒருவருக்குதான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படும்’ என விளக்கம் அளித்துள்ளனர். மருத்துவ துறையில் தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இத்தகைய அபூர்வ சம்பவங்கள் கண்டுபிடிப்பது எளிதாகி உள்ளது.
அதே சமயம், அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளின் தந்தை யார் என்பதை பரிசோதிக்கும் சோதனையில் 13,000இல் ஒருவருக்கு வெவ்வேறு தந்தைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
நியூஜேர்சியில் இத்தகைய வினோத வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால், வழக்கின் தீர்ப்பு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5460

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.