«

»

பதினெட்டு ஆண்டுகால போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.

jayalalitha-fund
பதினெட்டு ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் ஜெயலலிதா. அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துவிட்டார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி!
குன்ஹாவும் பவானி சிங்கும்!
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியும் மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி நீதிபதி குமாரசாமியை நியமித்தார். அதே மாதம் 5-ம் தேதி தொடங்கிய விசாரணை மார்ச் 11-ம் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் பெஞ்ச் பவானி சிங்கை நீக்கியது. அன்றே க.அன்பழகனின் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். அன்றே ஆச்சார்யாவின் 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் வரும் 11-ம் தேதி தீர்ப்பு என்று கடந்த 8-ம் தேதி அறிவித்தார்.
அரசியல் ஆக்கக் கூடாது!
ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நாள் முதலே நீதிபதி குமாரசாமி பரபரப்புடன் விசாரித்தார். ஜனவரி 5-ம் தேதி அன்று நீதிபதி குமாரசாமி இருக்கையில் அமர்ந்ததும் நீதிமன்றத்துக்குள் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து… ‘‘நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நீதிமன்றத்துக்குள் ஒழுங்கீனமாக கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகளில் அமர வேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியல் வரக் கூடாது. அதற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. ஒரு மணி நேரம் கூட வாய்தா கொடுக்க முடியாது” என்று சொல்லி அதிர வைத்தார்.
அன்று நீதிமன்றத்துக்கு சுப்பிரமணியன் சுவாமியும் வந்திருந்தார். ‘‘இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்கச் செய்து எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று சுவாமி சொல்ல, ‘‘அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் அதனை பரிசீலித்து முடிவெடுப்பேன்” என்று சொன்னார்.
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், ‘‘இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்ததைப்போல இந்த வழக்கிலும் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்துக் கொண்டு எங்களுடைய எழுத்துப்பூர்வமான வாதத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதி குமாரசாமி, ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி பிரதிவாதி இருக்கிறார். உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3-ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை” என்று சொல்லிவிட்டார்.
உடனே வழக்கை முடிக்கவேண்டும்!
வழக்கை விசாரணைக்கு எடுத்தது முதல் விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டினார் நீதிபதி குமாரசாமி. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரான குமார், வாய்தா கேட்டபோது மறுத்த நீதிபதி, ‘‘இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம் கூட தர முடியாது” என்று சொன்னார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், ‘‘என் மனுதாரருக்கு சொந்தமான கட்டடத்தின் மதிப்பை மிகைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள். தகுதி வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை. சுதாகரனின் திருமணம் 1995-ல் நடைபெற்றது.
ஆனால், அந்த திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல், மின்விளக்கு, வாழைத்தோரணம் அனைத்தையும் 1997-ல் கணக்கீடு செய்திருக்கிறார்கள். திருமண செலவின் உண்மையான மதிப்பீடு செய்ய முடியாமல் குத்து மதிப்பாக 5 கோடி செலவு செய்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
உண்மையில் திருமணத்துக்கு ஆன அனைத்துச் செலவுகளையும் சிவாஜியின் குடும்பத்தார்தான் செய்தார்கள். இப்படி எங்கள் தரப்பு நியாயத்தை எதையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொள்ளவே இல்லை.ஜெயலலிதாவை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கைப் போட்டுள்ளார்கள்.
ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணையின் போது சட்ட விரோதமாகச் செயல்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களையும் பெறாமல் அவர்கள் வீட்டில் இல்லாதபோது கட்டடங்களை சோதனையிட்டனர். என் மனுதாரர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் வருமானத்தைக் குறைத்து மதிப்பிட்டும், செலவுகளை மிகைப்படுத்தியும் செயல்பட்டுள்ளனர்.
என் மனுதாரர்கள் எந்தவிதமான ஊழல்களிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கிலும் முறையாக எஃ.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. என் மனுதாரர் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனி கவனத்துடன் செயல்பட்டார்கள்” என்று வாதங்களை வைத்தார் குமார்.
ஜெயலலிதாவைக் காப்பாற்றிய 17 பொயின்ட்டுகள்!
இவ்வழக்கின் 6-வது நாளில் இருந்து, ஜெயலலிதாவுக்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலாவுக்காக கேரள முன்னாள் நீதிபதி பசந்த்தும், சுதாகரன், இளவரசிக்காக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரமும் ஆஜராகி தங்கள் வாதங்களை நீதிபதி முன்பு வைத்தார்கள். நாகேஸ்வரராவ் வைத்த வாதங்களை நீதிபதி கவனமாக குறித்துக் கொண்டு இருந்தார்.
1. ஜெயலலிதாவுக்கு வழக்கு காலகட்டத்துக்கு முன்பே ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், விவசாய நிலங்கள், கட்டடங்கள் என நிறைய சொத்துகள் இருந்தன. அதன் மூலம் அவருக்கு அதிகளவு வருமானமும் வந்தது. 91 – 96-ல் அவர் எந்தவிதமான சொத்துகளையும் வாங்கவில்லை. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் அவருடைய வருமானத்தை குறைத்தும், செலவுகளை அதிகரித்தும் காட்டி இருக்கிறார்கள்.
2. அதேபோல ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர். ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற பண பரிவார்த்தனைகள் முறையாக நடைபெற்றது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வந்த பரிசு பொருட்களைக்கூட அவரது சொத்து பட்டியலில் கணக்கிட்டுள்ளனர். இதையெல்லாம் கீழமை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியும் நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
3. ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 முதல் 96 வரையிலான காலகட்டத்தில் நிறைய சொத்துகளை வாங்கி அதை சசிகலா, சுதாகரன், இளவரசி போன்ற பினாமி பெயர்களில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், என் மனுதாரர் பினாமி அல்ல.
4. இந்திய சாட்சியங்கள் சட்டம் 106-ன் படி ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை குற்றம் சுமத்துபவர்களே நீதிமன்றத்தில் முதலில் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன் மீதுள்ள குற்றசாட்டுகளின் ஆதாரங்களை மறுப்பார்கள். இந்த வழக்கில் என் மனுதாரர் மீது குற்றம் சுமத்தும் அரசுத் தரப்புதான் நீதிமன்றத்தில் முதலில் என் மனுதாரர் மீதுள்ள குற்றங்களை நிரூபிக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பு என் மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை.
5. என் மனுதாரர் ஜெயலலிதா ஒவ்வோர் ஆண்டும் வருமானவரித் துறையில் கணக்குகள் காண்பித்து வரி செலுத்தியும் இருக்கிறார். வருமான வரித் துறையும் அந்தச் சொத்துகளை மதிப்பீடு செய்து ஏற்றுக் கொண்டுள்ளது.
6. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களை புதுப்பிக்கப்பட்டது. அந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், அவற்றின் மதிப்பை பல மடங்கு அதிகப்படுத்தி கணக்கீடு செய்துள்ளனர். இதற்கு அப்போதைய அரசின் துண்டுதலே காரணம். கட்டடங்களை தகுதி வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை.
7. இதை ஒப்புக்கொண்ட கீழமை நீதிபதி குன்ஹா அந்த சாட்சியங்களை நிராகரிக்காமல் கட்டட மதிப்பீட்டு செய்த தொகையில் இருந்து தோராயமாக 20% தள்ளுபடி செய்து எடுத்துக்கொள்கிறேன். என்று கூறி இருப்பது தவறு. இது புதிய வழக்கமாக இருக்கிறது.
8. ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் உத்தரவின் பேரில் மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான மொத்த செலவாக 13.64 கோடி செலவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த 3 கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக உண்மையில் ஜெயலலிதா செலவு செய்த தொகை 3.52 கோடி தான்.
9. அதேபோல கட்டடங்களுக்கு பயன்படுத்திய டைல்ஸ் ஒரு சதுர அடி 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அதை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் டைல்ஸ் ஒரு சதுர அடி ரூ.20,000 என பதிவு செய்திருக்கிறார்கள்.
10. மனுதாரர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் 1996-ல் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்து தங்க, வைர ஆபரணங்களைக் கைப்பற்றினர். அப்போது என் மனுதாரர் வீட்டில் இல்லை.
11. மனுதாரர் ஜெயலலிதா 1991 மார்ச் 31 வரை வைத்திருந்த 26 கிலோ 902 கிராம் நகைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், 1986 வைத்திருந்த 7040 கிராம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு குறைத்துக் காண்பிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா வழக்கு காலகட்டமான 91-96 காலகட்டத்தில் நகைகள் வாங்கவில்லை.
12. ஜெயலலிதா 1991-ல் முதல் முறையாக முதல்வரானார். தன்னுடைய 44 வது பிறந்த நாள் 1992-ல் பிப்ரவரி மாதத்தில் வந்தது. அப்போது கட்சித் தொண்டர்கள் அவர் பிறந்த நாளுக்காக பரிசுப் பொருட்களாக தங்க, வெள்ளி பொருட்கள் கொடுத்ததோடு காசோலையாகவும் ரூ. 1 1/2 கோடி கொடுத்தார்கள். என் கட்சிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை கூட வருமானத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
13. ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத் ரங்கா ரெட்டி பஷீராபாத்தில் 15 ஏக்கர் விவசாய நிலத்தில் 1972-லேயே விவசாயம் செய்ததன் மூலம் 1 லட்சம் வருமானம் வந்தது. அதன் பிறகு 1987 முதல் 93 வரை வருடத்துக்கு ரூ. 7 1/2 லட்சம், 8 1/2 லட்சம் என வருமானம் வந்துகொண்டிருந்தது. வழக்கு காலகட்டமான 1991-96-ல் அந்த நிலத்தில் திராட்சை, வாழை, கத்திரி, தேங்காய் மற்றும் காய்கறிகள் விளைவித்ததன் மூலம் 52,50,000 வருமானம் வந்தது. ஆனால் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு காலகட்டத்தில் இந்த விவசாய நிலத்தின் மூலம் வருடம் ரூ. 1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம்தான் கிடைத்தது. என்றும் ஆனால் கீழமை நீதிமன்ற நீதிபதி அந்த நிலத்தின் மூலம் வழக்கு காலகட்டத்தில் ஒரு வருடத்துக்கு ரூ. 2 லட்சம் வீதம் 5 வருடத்துக்கு ரூ. 10 லட்சம் என்று எழுதி இருப்பது தவறு.
14. தனி நபர் அணியும் பொருட்களுக்கு வருமான வரித்துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதனால் வாட்ச்களை சொத்துப் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அதேபோல ஜெயலலிதா அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் அவருடைய பெயரில் பல வாகனங்கள் வாங்கப்பட்டது. அதையும் அவருடைய சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது தவறு.
15. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள தொகை ரூ.66,44,73,573.00 இதற்கு முழுவதுமாக கணக்குகள் காட்டப்பட்டு ஜெயலலிதாவின் வருமான சேமிப்பில் கூடுதலாக ரூ.95 லட்சம் இருக்கிறது.
16. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஏ1 ஜெயலலிதாவும், ஏ2 சசிகலாவும் பங்குதாரர்கள். இந்த நிறுவனத்துக்கு 4 வழிகளில் வருமானம் வந்தது. 1. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் சந்தாதாரர்கள் மூலமும் 2. விவசாய நிலத்தின் மூலமும் 3. பிரின்டிங் மூலமும் 4. வாடகையின் மூலமும் வருமானம் வந்தது. இந்த வழிகளில் மொத்தம் ஜெயா பப்ளிகேஷனுக்கு 15.1 கோடி வருமானம் வந்துள்ளது. இப்படி சந்தாதாரர்களிடம் இருந்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் நிறுவனத்துக்கு வந்த மொத்த தொகை ரூ14,25,00,000 ஆகும். இந்த தொகையை என் கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமான லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. நீதிபதி குன்ஹா வருமானவரித் துறை ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நிராகரித்து விட்டார். எனவே, இந்த ரூ. 15.1 கோடியை என் மனுதாரர் வருமானத்தில் சேர்க்க வேண்டும்.
17. என்னுடைய மனுதாரர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுகாதரனுக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழிப் பேத்தி சத்யலட்சுமிக்கும் சென்னை எம்.ஆர்.சி கிரவுண்டில் 7.9.1995-ல் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் கழித்து 17.4.97-ம் தேதி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து திருமணத்துக்கு ரூ.6,45,04,222 செலவு செய்துள்ளதாக செலவுப் பட்டியலில் சேர்த்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும். இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா ரூ. 29 லட்சமும், சிவாஜியின் மூத்த மகனும், சத்யலட்சுமியின் தாய்மாமனுமான ராம்குமார் 1 கோடி ரூபாயும் செலவு செய்திருக்கிறார்கள். அனைத்தும் காசோலைகளாகவே பரிமாற்றம் நடைபெற்றது. – இந்த வாதங்கள்தான் ஜெயலலிதா தரப்பை காப்பாற்றியது என்று சொல்கிறார்கள்.
சுவாமியும் அன்பழகனும்!
இந்த வழக்கில் மூன்று எதிர்தரப்பினர் இருந்தார்கள். கர்நாடக அரசு, க.அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகிய மூவரும் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இறுதியில் வைத்தார்கள். சுப்பிரமணியன் சுவாமி தனது வாதத்தில், ‘‘ஜெயலலிதா 1979-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
கடந்த 1985 – 86-ம் ஆண்டு வருமான வரித்துறையில் தாக்கல் செய்த அறிக்கையில் தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார். 1984-89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 1988-ம் ஆண்டு ரூ. 9.2 லட்சம் செலவில் 4 கார்களும், ரூ. 1.40 லட்சத்தில் ஒரு ஜீப் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985 தெரிவித்தவருக்கு, எப்படி எம்.பி-யாக இருந்த காலத்தில் மட்டும் வாகனம் வாங்க வருமானம் வந்தது?
1990-ம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களை தொடங்கினார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை.
ஆனால், ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கூடுதலாக 29 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அந்த 29 நிறுவனங்களில் எந்த செயல்பாடும் இல்லாத நிலையில் அந்த நிறுவன வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக் கணக்கான அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையா சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் பார்ட்னராக இருந்து தொடங்கப்பட்ட ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி சசிகலாவுக்கு கொடுக்கிறார். சசிகலாவிடம் இருந்து சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பல கோடிகள் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன.
இதற்கு சாட்சியாக ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலக ஊழியர் ஜெயராமன், ராமவிஜயன் அளித்துள்ள வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1991 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த போது வெறும் 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்” என்று சொல்லி இருந்தார்.
இறுதியாக வந்தார் ஆச்சார்யா!
அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா இந்த வழக்கின் இறுதியில் வந்து ஆஜரானார். 18 பக்க எழுத்துப் பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா முதல்வர் பதவியைத் தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு ஊழியர் சொத்துக் குவிப்பதும், லஞ்சம் பெறுவதும் தவறு. ஆனால் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததோடு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்றபின் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தன் பதவி காலத்தின்போது புதிய கட்டடங்கள் கட்டியது, பழைய கட்டடங்கள் புதுப்பித்தது, வளர்ப்பு மகன் திருமணச் செலவு என ஏராளமான செலவுகள் செய்துள்ளார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கர்நாடக அரசை ஒரு வாதியாக சேர்க்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த மாநில அரசை வழக்கில் சேர்க்காதது சட்டவிரோதமானது. அதனால் இந்த 4 பேரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று சொன்னார் ஆச்சார்யா!
வகேலாவிடம் ஆலோசனை!
தீர்ப்பு எப்படியும் 11-ம் தேதி அறிவித்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார். 11-ம் தேதி தீர்ப்பு என்றால் 8-ம் தேதியே தீர்ப்பு தேதி அறிவித்துவிட வேண்டும். ஏனென்றால் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு தேதி அறிவித்து விடுவார்கள். என்று நேஷனல் மீடியாக்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தார்கள்.
இதற்கிடையே 8-ம் தேதி காலை 11 மணிக்கு பதிவாளர் பாட்டீலும், நீதிபதி குமாரசாமியும் ஆலோசனை செய்தார்கள். அதையடுத்து மாலை 4 மணிக்கு பதிவாளர், கூடுதல் பதிவாளர் என 5 பேர் கொண்ட டீம் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை சென்று சந்தித்தது. ஒடிசா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகும் இன்னும் அங்கு இருக்கிறார் நீதிபதி வகேலா. அவரிடம் ஆலோசனை செய்தார்கள்.
ஆலோசனையில் இருந்துகொண்டு பதிவாளர் பாட்டீல் தீர்ப்பு நகலை வெளியிடும் போர்டு கமிட்டியில் இருந்து 5 பேரையும், தீர்ப்புத் திருத்தப் பிரிவில் 4 பேரையும் நீதிமன்றத்திலேயே இருக்கச் சொன்னார்கள். வெள்ளிக்கிழமை மதியம் விடுமுறை என்பதால் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் இந்த 9 பேரும் நீதிமன்றத்திலேயே இருந்தார்கள்.
வகேலா வீட்டில் ஆலோசனை செய்த பிறகு 8.30 மணிக்கு அந்த டீம் வந்தது. பிறகு இரவு 9.08-க்கு 11.5.2015 தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது!
அந்த மூன்று நிமிடங்கள்!
11-ம் தேதி காலை 8 மணியில் இருந்தே நீதிமன்ற வளாகத்தின் வெளியே பத்திரிகையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தார்கள். நீதிமன்றத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் அந்த வட்டாரமே வெறிச்சோடிக் கிடந்தது. கூடுதல் கமிஷனர் அலேக்குமார் ஆணையின்படி நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பிறகு அலேக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் பேசிய பிறகு 10 மணிக்கு குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதித்தார்கள்.
நீதிமன்ற ஹாலில் ஒரு பக்கம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் மணிசங்கர், குமார், அசோகன், செந்தில் அமர்ந்திருந்தார்கள். அடுத்த பக்கம் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, பவானி சிங்கின் உதவி வழக்கறிஞர் சதீஷ்கிரிஜி, க.அன்பழகனின் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி ஆகியோரும் அமர்ந்திருந்தார்கள். இந்தக் காட்சிகளைக் காண பி.வி.ஆச்சார்யாவின் மகன் பி.எல்.ஆச்சார்யாவும், மகள் புஷ்பலதாவும் வந்திருந்தார்கள்.
சரியாக 10.57-க்கு நீதிபதி குமாரசாமி வந்தார். அனைவரின் முகத்தையும் உற்றுப் பார்த்துவிட்டு ‘‘வழக்கு எண் 835, 836, 837, 838… இந்த வழக்கின் அனைத்து குற்றசாட்டுகளில் இருந்தும் நான்கு பேரையும் விடுவிக்கிறேன். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறேன். கம்பெனி வழக்கில் இருந்து ஒரு பகுதியை மட்டும் விடுவிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு இருக்கையைவிட்டு எழுந்து சென்றார்.
தீர்ப்பில் நான்கு பேரும் விடுதலை என்றதுமே கோர்ட் ஹாலுக்குள் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் கோஷம் போட்டு ஆரவாரம் செய்தார்கள். அதை கண்டுகொள்ளாமல் நீதிமன்ற அறையைவிட்டு எழுந்து சென்றார் நீதிபதி. தீர்ப்பு நகல் 920 பக்கமும், தீர்ப்பின் சாராம்சம் 2 1/2 பக்கமும் இருக்கிறது.
கோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்ததும் ஜெயலலிதா வழக்கறிஞர் குமாரை அலேக்காகத் தூக்கி மகிழ்ச்சி அடைந்தார்கள். ‘அம்மா வாழ்க!’ என்று ஆரவாரம் செய்ததோடு பையில் வாங்கி வந்த லட்டு, ஜிலேபியை அனைவருக்கும் கொடுத்தார்கள்.
இதுபற்றி குமாரிடம் பேசிய போது, ‘‘அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட இந்த வழக்கில் நீதி கிடைத்துவிட்டது. அம்மா முதல்வராக இனி எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி சொல்லிவிட்டார் என்றார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5490

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.