«

»

மகிந்த ராஜபக்சவின் மறுநுழைவை அமெரிக்காவும், இந்தியாவும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

Mahinda-Rajapaksa
ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
கடந்த முதலாம் திகதி மெதமுலானவில் வைத்து அவர் பாராளுமன்ற அரசியலுக்கு மீண்டும் திரும்பப் போவதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவு சிலருக்கு சந்தோசத்தையும் இன்னும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை சிறுபான்மையின மக்களுக்கு நல்லதொரு சகுனமாகவோ, செய்தியாகவோ இருக்கப் போவதில்லை.
அதுபோலவே மேற்குலக நாடுகளாலும், இது நல்லதொரு அறிகுறியாகப் பார்க்கப்படும் என்று கருதுவதற்கில்லை.
மகிந்த ராஜபக்சவின் 10 ஆண்டு கால ஆட்சியின் போது எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்களும் நெருக்கடிகளும் உள்நாட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல.
அது பிராந்திய சர்வதேச சக்திகளையும் இக்கட்டானதும், குழப்பானதுமான நிலைக்குள்ளும் தள்ளியிருந்தது.
எனவே தான் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் தோல்வி உள்நாட்டு மக்களால் மட்டும் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.
சர்வதேச சக்திகளின் கையும் அதில் ஓங்கியிருந்தது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான வியூகம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மகிந்த ராஜபக்சவும் கூட தோல்விக்குப் பின்னர் ஊடகங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளில் அமெரிக்காவையும், இந்தியப் புலனாய்வுத் துறையையும் நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் அமெரிக்கா எதிர்பார்த்த எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அமெரிக்க நலன்களுக்கு எதிராகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செயற்பட்டது.
அதைவிட சீனாவுக்கு தாராளமாக இடமளித்ததன் மூலம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் கோபத்தையும் சம்பாதித்திருந்தது மகிந்த அரசாங்கம்.
இது தான் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ ஒரு நகர்வை முன்னெடுக்கக் காரணமாக இருந்தது.
அதுபோலவே, மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடனான உறவுகள் சீரடையத் தொடங்கின.
பசில் ராஜபக்ச சிறையில் இருந்த போது அளித்திருந்த பேட்டி ஒன்றில் இந்தியாவைப் பகைத்துக் கொண்டதே தமது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
போரில் வெற்றியீட்ட இந்தியா, மிகப் பெரிய உதவிகளை வழங்கியதை நினைவுபடுத்தியே அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவையும் பகைத்துக் கொண்டதன் விளைவைத் தான் மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுபவிக்க நேரிட்டது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சாதகமான நிலை இலங்கையில் தோன்றியது.
ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன கூட்டு அரசாங்கம் அமெரிக்க, இந்திய நலன்களைப் புறக்கணிக்காமல் நடந்து கொண்டது.
அதுபோலவே மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட சீன சார்பு வெளிவிவகாரக் கொள்கையில் இருந்தும், இலங்கை விலகிக் கொண்டது.
இந்த மாற்றங்கள் மேற்குலகிற்கும், இந்தியாவுக்கும் மிகவும் சாதகமான நிலையைத் தோற்றுவித்தது.
இதன் விளைவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் இலங்கை வந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வருகை கூட இராஜதந்திர நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது.
இவையெல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியது அதிகாரத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றப்பட் ஒரு நிகழ்வு தான்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்குப் பிந்திய இலங்கையில், ஒரு ஜனநாயக வெளி தோன்றியது உண்மை.
அந்த ஜனநாயக வெளியும், இயல்பு நிலையும் மேற்குலகை நன்றாகவே வசீகரித்து விட்டன. இந்தச் சூழல் நிலைத்திருக்க வேண்டும் என்பது மேற்குலகினது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருக்க வேண்டிய போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாமதிக்கப்பட்டதே இலங்கையில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என்பதற்காகத் தான்.
ஆனால் இப்போதைய நிலைவரங்கள் அனைத்தும் அமெரிக்காவினதோ, இந்தியாவினதோ எதிர்பார்ப்புக்கு முரணானதாக அமைந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, ஓரம்கட்டப்பட்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியல் அரங்கிற்குள் நுழைந்திருக்கிறார்.
இதனை அமெரிக்காவோ இந்தியாவோ எதிர்பார்த்திருக்கும் என்று கூற முடியாது.
அதைவிட இப்போதைய சூழ்நிலையை இந்த நாடுகளால் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கருத முடியாது.
மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது அதுவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள சூழலில் அரசாங்கத்தைக் கைப்பற்றுவது ஆபத்தானது.
இது சிறுபான்மையின மக்களை மட்டும் அச்சம் கொள்ள வைக்கவில்லை.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கும் இது இக்கட்டான நிலை தான்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஊழல் மோசடிகளை விசாரிக்கவும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்கவும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.
ஆனாலும் அந்த விசாரணைகள் முடிவடைவதற்குள் பாராளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. மகிந்த ராஜபக்சவும் அரசியலுக்கு வந்துவிட்டார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைக் குறிவைத்தே அரசியலில் களமிறங்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
அவர் ஒன்றும் வெறும் பாராளுமன்றக் கதிரைக்காக களமிறங்கவில்லை. அவரது முழுமையான இலக்கும் பிரதமர் பதவி மீது தான் இருக்கிறது.
அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த வகையிலும் அவரை அசைக்க முடியாது.
அவர் தனது அதிகாரங்களை வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே முடக்கப் பார்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதைவிட அவரது ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகளுக்கு எதிரான எல்லா விசாரணைகளும் நின்று போகும்.
அதற்குப் பின்னர் அமெரிக்காவோ இந்தியாவோ எதிர்பார்த்த எதுவுமே நடக்கப் போவதில்லை. மீண்டும் சீனாவே முதன்மை பெறத் தொடங்கும்.
அத்தகையதொரு நிலையை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது.
இத்தகைய நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் மறுநுழைவை இந்த நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?
எத்தகைய மாற்று வியூகத்தை அமைக்கப் போகின்றன என்பது முக்கியமான கேள்வி.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5936

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.