«

»

ஜனநாயக போராளிகளின் அரசியல் பிரவேசமும் தமிழ் தேசிய வாதிகளின் தேசிய வியாபாரமும்

viduthalai
தமிழ் தேசியமும், தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டமும் தேர்தல் களத்தில் ஒரு பண்டமாக்கப்பட்டு தேசியத்தையும் போராட்டத்தையும் வியாபாரப் பொருளாக்கி வடக்கின் தமிழ் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.
ஜனநாயகப் போராளிகள் என்றழைக்கப்படும் சில போட்டியாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தளத்திலும், புலத்திலும் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தமிழர்கள் மத்தியில் ஒரு தரப்புக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னொரு தரப்புக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தரப்புக்கு அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமது வாக்கு வங்கி மீதான கேள்வி எழுந்துள்ளது.
இவர்கள் துரோகிகளா? துடிப்புள்ள புரட்சிவாதிகளா? என்ற கேள்வியினையும் மக்களிடம் தோற்றுவித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்னாள் போராளிகள் என்பவர்கள் தம்மை யார் என்றும் தாம் என்ன பணி செய்தார்கள் என்றும் அறிவிக்காமை அல்லது அவர்கள் திடீர் என அரசியலில் முளைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக காட்ட முற்படுவது பிழையான விடையம். அதனை தமிழ் மக்களினால் ஏற்க முடியாது உள்ளது.
நான் கடற் புலியில் இருந்தேன், நிர்வாக சேவையில் இருந்தேன், காவல் துறையில் இருந்தேன், பாட்டுப் பாடினேன் என்பது முக்கியமல்ல தனது சேவைக்காலம் என்ன? என்ன சாதித்தேன்? என்பதன் அடிப்படையில் தான் திறமைகள் வெளிக்காட்டப்பட்டிருக்க வேண்டும்.
அரசியல் பற்றி போதிய அறிவும் தகுதியும் பின்புலமும் அற்ற சிறு போராளிகள் விடுதலைப் புலிகள் என்ற உலகெங்கும் பறந்து விரிந்த பேரியக்கத்தின் மீது சவாரி செய்வது ஆரோக்கியமான விடையம் அல்ல.
தேர்தல் களத்தில் குதித்திருக்கும் முன்னாள் போராளிகள் புலிகள் இயக்கத்தில் சாதித்த மூத்த உறுப்பினர்கள் அல்லர் என்பதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
40 வருட ஆயுத அரசியல் போராட்டமும் தியாகங்களும் இழப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் சாதனைகளும் வெறுமனே தனி நபர்களின் அரசியல் பிழைப்புக்கான வியாபாரப் பொருளாகிவிட்டதா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. .
தமிழ் தேசியத்தில் அரசியல் பிழைப்பு தாராளமாகவே நடைபெறுகின்றது. வெட்கம், கூச்சம், நாணம், இல்லாமல் தாராளவாத தேசிய பிழைப்பு வாத அரசியல் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகப் போராளிகளுக்கும் இது பொருந்தும் புலிகள் இயக்கம் யாருக்கு சொந்தம்?…. என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் மத்தியில் கருத்தியல் போர் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் அணி தோற்குமாக இருந்தால் புலிகள் இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும். புலிகளை தமிழ் மக்கள் ஓரம்கட்டி விட்டார்கள் என்ற வதந்தி உருவெடுக்கும். இதனால் மாவீரரின் தியாகம் அர்த்தமற்றதாகும். மாறான விசமப் பிரச்சாரமும் சிலரால் முன்னெடுக்கப்படும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின்மீது சவாரிசெய்ய புறப்பட்டவர்கள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முடிவுரை எழுதிவிடக் கூடாது. புலிகள் இயக்கத்தை அந்த மக்கள் தோற்கடித்து விட்டார்கள் என்பதான தோற்றப்பாட்டை உருவாக்கிட சிங்கள கடும்போக்குவதம் சந்தர்ப்பம் பார்த்திருக்கின்றது. இந்த அபாய சூழலை எப்படி தமிழ் தேசியவாதம் எதிர்கொள்ளப் போகின்றது. தமிழ் தேசியவாத அரங்கு இன்று குழம்பிய குட்டையாகி வருகின்றது. தமிழ் தேசிய வாதத்தின் வாக்கு வங்கி சிதறும் அபாயம் தோன்றியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஆட்ட முடியாத சக்தியான புலிகள் இயக்கத்தை சர்வதேசம் ஒன்றிணைந்து புலிகளை அழித்துவிட்டார்கள் என்பதுதான் இன்றைய வரலாறு இதனைப் புரட்டிப்போட சிலமனிதர்கள் முயல்வது தமிழ் மக்களினால் சகிக்க முடியாத விடயமாகவும் உள்ளது.
புலிகள் இயக்கத்தை உரிமை கொண்டாடக் கூடிய அல்லது தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு ஜனநாயகப் போராளியையும் ஜனநாயகப் போராளிகள் அடையாளப்படுத்தவில்லை.
மறுபுறத்தே இவர்கள் கடந்த காலத்தில் பரந்தளவிலான தமிழ் தேசிய வலையமைப்புடன் எதுவித தொடர்பாடலையும் மேற்கொள்ளாமல் திடீர் என அரசியல் பிரவேசம் செய்திருப்பதும் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் என களத்தில் குதித்திருக்கும் எட்டுப்பேரும் போராட்ட காலத்தில் பெரியளவில் அறிமுகமான மூத்த போராளிகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடையம்.
முன்னாள் போராளிகள் சிலரின் பாராளுமன்ற அரசியல் பயண ஆசை ஆரோக்கியமான விடையம் இல்லை. அதற்கான சூழல் இலங்கையிலும் சரி சர்வதேசத்திலும் சரி இல்லை ஜனநாயகப் போராளிகளின் அரசியல் நீரோட்டத்தை 2015ல் தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் சரி ஏற்று நகரும் சூழல் அறவேயில்லை என்பது யதார்த்தம்.
இதற்கு நல்ல உதாரணம் 2009ல் வன்னிப் போர் முடிவடைந்தபோது வெளிநாடுகளுக்குத் தலைமறைவாகிச் சென்ற முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலத்திற்கு எதிராக தலைமைச்செயலகம் என்ற ஒரு குழு வேகமாக உருவெடுத்தது ஆனால் அவர்களினால் நிலைக்க முடியவில்லை. அவர்கள் இன்று பெயரளவில் இயங்குகின்றனர்.
இளம் முகமறியாத முன்னாள் போராளிகள் சிலரின் அரசியல் பிரவேசம் ஒட்டுமொத்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தையும் அசிங்கப்படுத்தப் போகும் விபரீதம் நடக்கப்போகிறது. என்பதனை இக் கட்டுரை வாயிலாக எச்சரிக்கின்றேன். இது புலிகள் இயக்கத்தின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.
போராளிகள் அரசியலில் ஈடுபடுவதனை இலங்கை அரசும் விரும்பாது. பாதுகாப்பு படைத்தரப்பும் விரும்பாது. ஏனெனில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகின்றபோது எதுவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்ற ஆலோசனையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
புலிகள் இயக்கத்தின் தலைமையிடமும் இலங்கை பாராளுமன்ற அரசியல் பிரவேசம் தொடர்பாக சிந்தனை ஏதும் இருந்ததில்லை. பிரபாகரன் அப்படி புலிகள் இயக்கத்தை வளர்த்ததும் இல்லை பிரபாகரன் விரும்பியிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம். பாராளுமன்றத்திற்கு போராளிகளை அனுப்பியிருக்கலாம்.
எனவே முன்னாள் போராளிகள் சிலரின் அரசியல் களம் விமர்சனத்துக்குரியது அல்லது தவறானது என்பது உண்மை. இன்றைய அரசியல் என்பது பொய்யும் புரட்டும் நேர்மையீனமும் கொண்டது. இதனை புலிகளின் தலைமை விரும்பவில்லை.
தமிழ் தேசிய அரசியலோடு சர்வதேச அரசியலையும் விடுதலைப் புலிகளின் பெயரோடு டீல் பண்ணுவது உலக ஒழுங்கின்படி இன்று நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதனை ஜனநாயக போராளிகள் அமைப்பின் புத்திஜீவிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ் தேசியம் பற்றி புலம்பியவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்தவர்களும் தமது அரசியல் தேவைகளுக்காக அரசியல் கைதிகள் விடுதலை, விடுதலையான போராளிகள் மறு வாழ்வு, விதவைகளின் மறுவாழ்வு வாழ்வாதார மேம்பாடுகள் பற்றி உருப்படியாக ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை
எல்லாம் தமது அரசியல் நலன்களுக்கான கருத்தாடல் வெளியாக லீலைக் கண்ணீராக முன்னாள் போராளிகள், விதவைகள், ஊனமுற்றோரின் பெயரில் புலம்பெயர் மக்களிடம் சுரண்டி அரசியல் இலாபம் தேடியதும் புலம்பெயர் மக்களிடம் மறுவாழ்வு மேம்பாட்டிற்கு என நிதி பெற்று மோசடி செய்து அரசியல் செய்ததும் முன்னாள் போராளிகளின் தோற்றத்திற்கு ஒரு காரணமாக அமையலாம்.
அத்துடன் சிலரின் கதிரையாசை மோகமும் மற்றுமொரு காரணம். புலிகளின் தியாகத்தையும், வீரத்தையும், சாதனைகளையும் தமது சுயநல அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புலிகளின் பிரதிநிதிகள் தாங்கள் என்று மார்பு தட்டும் கடந்தகால தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகள் ஜனநாயகப் போராளிகளை தீட்டுப்பட்டவார்கள் எனவும் தீண்டத் தகாதவர்கள் எனவும் துரோகிகள், விரோதிகள் என்று கூறுவதும் நாகரீகமான பதில் இல்லை. ஒட்டுமொத்தமாக சமூகத்தில் ஒதுங்கி வாழும் போராளிகளையும் அவமானப்படுத்தியிருக்கின்றது. இது ஆரோக்கியமான அரசியல் முறியடிப்பு பிரச்சாரம் இல்லை.
கூட்டமைப்பு மீது முன்னாள் போராளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளுக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் போராளிகள் முள்ளிவாய்க்காலில் ஏன் குப்பி கடித்து சாகவில்லை என்ற கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உளறுகின்ற அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் பெயரால் புலி வியாபாரம் செய்தவர்களுக்கு இது காழ் புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமது வாக்கு வங்கி மீதான பயத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் இவர்களை தாறுமாறாக விமர்சிப்பவர்கள் யார் என்றால் தலைவர் பிரபாகரனின் பெயராலும், புலிகள் இயக்கத்தின் பெயராலும், மாவீரர்களின் பெயராலும் விதவைகளின் பெயராலும் ஊனமுற்றவர்களின் பெயராலும் வியாபார அரசியல் செய்பவர்களாக காணப்படுகின்றனர். அப்படியானால் முன்னாள் போராளிகள் மட்டும் எதிரிகளா? ஏன் தமிழ் தேசியத்தின் பெயரில் புலிகளின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கு முன்னாள் போராளிகள் இடையூறாகி விட்டார்கள். வெளிநாடு சென்று புலிகள் என்று கூறுபவர்களுடன் இவர்களின் உறவிலும் சில சலசலப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர் மக்களுடன் முன்னாள் போராளிகள் ஊனமுற்றவர்கள் தொடர்பை பேணத் தொடங்கியதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராளிகளுக்கும் விரிசல் ஏற்படக் காரணமாகிவிட்டது. முன்னாள் போராளிகள், விதவைகள் ஊனமுற்றவர்களின் பெயரில் இடம்பெற்ற நிதி மோசடி சுரண்டல்களும் இடைவெளி விரிசலுக்கு காரணம் எனலாம்.
கூட்டமைப்பில் பணி செய்யும் எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காவது தமிழ் மக்கள் வாக்களிப்பதில்லை. புலிகளின் தலைவர், பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியம் – உருவாக்கப்பட்டது என்பதற்காக மட்டுமே பெரும்பான்மை வீதமானவர்கள் வாக்களிக்கப் பழக்கப்பட்டுவிட்டனர். “இனத்தின் ஒற்றுமைக்காக மட்டுமே வாக்களிக்கின்றோம். எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் நம்பவில்லை எல்லாம் அவர்களின் சுயநலனுக்காக போடும் ஆட்டம்” என்பது மக்களுக்குத் தெரியும்.
புலிகளின் கொள்கையினை பின்பற்றாத அல்லது போராட்ட காலத்தில் யாழ்பாணத்திளும்>வன்னியிலும் தப்பிப்பிழைத்து போராட்டத்தில் பங்குபற்றாமல் சுயநலமாக வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று புலி வியாபாரம் செய்கின்றார்கள். புலிகளின் பிரதிவிம்பமாக தம்மைக் காட்டி வாக்குத்தேடும் முயட்சியும், அசிங்கமும் யாழ்ப்பாணத்தில் நிகழ்கின்றது.
பிரபாகரனை பின்பற்றுகின்றோம், புலிகள் இயக்கத்தை பற்றி கதைத்து உசுப்பேற்றி வாக்குக் கேட்பது பாமர மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் சூழல் தமிழ் தேசியத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பாக இருந்தாலும் சரி தமிழ்தேசிய மக்கள் முன்னநியனாலும் சரி ஜனநாயகப் போராளிகள் கட்சி யாக இருந்தாலும் சரி புலிகளையும், தலைவரையும் போரட்டத்தையும்< தியாகத்தையும்பயன்படுத்தி வாக்குக் கேட்பதும் அரசியல் வியாபாரம் செய்வதும் உண்மையில் அரசியல் ப்பணிசெய்யும் அரசியல் வாதிக்கு அழகில்லை, தகுதியும் இல்லை. அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் தமது திறமை மீதும் சாதனை மீதும் அரசியல் செய்ய வேண்டும் அதனை விடுத்து எதிரில் நிற்பவர்கள் துரோகிகள், பாலியல் பலவீனமானவர்கள், மோசடிக்க்கரர்கள் என சேறு பூசுவது எமது உரிமை போராட்ட அரசியல் விடுதலைக்கான பயணமாக அமையாது. “உள்ளே இருப்பவர் எல்லாம் குற்றவாளியும் இல்லை, வெளியே இருப்பவர் எல்லாம் சுற்றவாளியும் இல்லை” என்ற பாடல் வரி ஞாபகத்திற்கு வருகின்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப்படும் முன்னாள் போராளிகள் என்று உரிமைகொண்டாடும் சிலரின் ஜனநாயக நீரோட்டத்தினை எடுத்த எடுப்பால் பலரும் துரோகிகள் என குற்றம் சுமத்துவது நல்லது அல்ல அதுபற்றி ஆராயவேண்டிய கடமை உண்டு. எடுத்த எடுப்பில் தேசத் துரோகம், விலைபோனவர் அரச புலனாய்வுடன் சேர்ந்தியங்குவது அல்லது றோவின் பிரதிநிதி C.I.A யின் பிரதிநிதி என குற்றம் சுமத்துவது ஆரோக்கியமான விடையம் அல்ல. அதற்காக முன்னாள் போராளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்குவது கண்டனத்துக்குரிய விடையம். தமிழ் தேசியத்தின் பெயரில் பணி செய்யும் யாராவது ஒருவர் அமெரிக்கா உளவுத்துறை C.I.A யுடன் அல்லது இந்திய உளவுத்துறை றோவுடன் அல்லது இலங்கை உளவுத்துறையுடன்( CID, TID ) அல்லது படைத்தரப்புடன் நல்லுறவு இல்லாமல் அரசியல் செய்யும் யாரவது தம்மை சுத்தமானவர்கள் என்று கூறுபவர்கள் இருந்தால் அதை எமது மக்கள் நம்பத் தயாராக இல்லை. இதனை ஒரு பிரச்சினையாக எடுத்தது இவர்கள் தமது கடந்த காலத்தில் எங்கே நின்றார்கள் என்பதற்கும் விடை தேட வேண்டும். இது தப்பிப்பிளைப்பதற்கு ஒரு கருவி அல்லது பாதுகாப்பு கவசம். எந்தவொரு கட்சியும் புலனாய்வுப் பின்னணி இல்லாமல் இயங்குவதில்லை. எங்கும் பின்கதவு புலனாய்வுச் செயற்பாடுகள் உள்ளது. இதனை ஜனநாயகப் போராளிகளுக்கு புது விடயமாக நோக்குவது விடை அல்ல. முற்போக்கு வாதிகளாக அல்லது தமிழ் இனத்திற்கு எதாவது அர்த்தமுள்ளதாக செய்ய முனைபவர்கள் அரச இயந்திரத்துடன் ஒத்திசைவு இல்லாமல் இலங்கைத்தீவில் எதனையும் செய்ய முடியாது. இவ் சந்தர்ப்ப சூழலை நல்ல மனிதன், நல்ல தமிழன் நல்லதற்கு பயன்படுத்துவான் சுயநலவாதிகள் சுயநலத்திற்கு பயன்படுத்துவார்கள். புலி பசித்தாலும் புள்தின்னாது முலோபாயம், தந்திரோபாயம் என்பது எல்லாம் எதிரியுடன் கூடியினைந்து பணி செய்வதில்தான் இராஜதந்திரம், என அர்த்தப்படுகின்றது. எதிரிகளுடன் இணைந்து வேலைசெய்வது இராஜதந்திரம் அல்லது தந்திரோபாயம் இதுதான் அரசியல் சாணக்கியம். அனால் ஜனநாயகப் போராளிகள் கட்சி பற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தமது வாக்கு வேட்டைக்காக மற்றவர்களை விமர்சிப்பதை விடுத்து தமது திறமைகள் மீதான விளம்பரம்தான் ஆரோக்கியமான அரசியல் ஆடுகளம். தமிழ் மக்களின் அரசியல் வெளி என்பது ஒரு பித்தலாட்ட அரசியல் மேடையாகி விட்டது. இது கதிரைகளுக்கான போராட்டமாகி விட்டது. தமிழ் தலைவர்கள் தமது இருப்புக்காக தேசிய அரசியல் பேசுகின்றவர்களாக உள்ளார்கள். இவர்கள் இன விசுவாசத்தின் பால் இன உணர்வு வெளிப்பாட்டில் இல்லை. இதனை அவர்களின் உள்ளக நிர்வாக திரைமறைவுச் செயற்பாடுகளை அணுகி ஆராயுமிடத்து புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அதனை இங்கு தேர்தல் காலத்தில் எழுதுவது நல்லது அல்ல எல்லாப் போராளிகள் மீதும் விமர்சனங்களை அள்ளி வீசுவோர் தாங்கள் நடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்க வேண்டும். புலிகளின் பெயரைச்சொல்லி அரசியல் நடாத்தவும் வாக்குச் சேர்க்கவும் தகுதியற்றவர்கள் புலி வியாபாரம் செய்வது தமிழ் மக்களுக்கு வேதனையாக உள்ளது. வடக்கில் போர் நடந்த காலத்தில் வாழ்த்த இவர்கள் ஏன் போர் களம் செல்லவில்லை? .கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சவாரி செய்வதால் விரும்பியும், விரும்பாமலும் மக்கள் வீட்டுக்கு வாக்களித்து தமது தமிழ் உணர்வை வெளிக்காட்டும் தார்மீக கடமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். “தர்மத்தின் வீதியை சூதுகவ்வும்” என்பதாச்சு தமிழ் மக்களின் வாக்குகள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடன் செய்து கிடப்பது எம் தலைவிதியாச்சு அதனால் ஜனநாயகப் போராளிகளை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்பதும் அர்த்தமாகி விடாது. ச.சங்கரன்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6250

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.