«

»

தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் – சுமந்திரன்

suma
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான சமஸ்டித் தீர்வை தெளிவாக முன்வைத்து, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தைரியமாக வெளியிட்டுள்ளது.
ஆனால் இவற்றிற்கு மாற்றீடு எதையும் முன்வைக்க தைரியமும், தகுதியும் இல்லாதவர்கள், வெற்றுச் சங்குகள் போன்று கூச்சல் இடுகின்றனர் என்று M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
கரவெட்டி கிழக்கில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முனவைத்துள்ளது.
அத்துடன் இந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டு உள்ளது. ஆனால் இவை எதனையும் செய்ய தைரியமும், திறமையும் இல்லாதவர்கள், எம்மைக் குறை கூறி காலத்தைக் கழிக்கின்றனர். தம்மிடம் எதுவும் சொந்தமாக இல்லாத வெறுமையின் காழ்ப்புணர்ச்சியை, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
போர் முடிந்தது முதல் நாம் மக்களுடன் இருக்கின்றோம், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், வழக்குகள் மூலம் மக்களுக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தோம், ஆனால் இவை எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், தேர்தல் வந்ததும், திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தெளுந்தவர்கள் போன்று திடீர் என்று இங்கே வந்து முகாமிட்டு எம்மைத் திட்டித் தீர்த்து காலத்தை ஓட்டுகின்றனர்.
நேற்று வரை தமிழர்களை திரும்பிக் கூடப் பார்க்கத இவர்கள், தேர்தல் முடிந்த மறுகையோடு தமிழர்களை மறந்து விடுவார்கள்.
தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாமல், வெறுமனே விமர்சித்துக் கொண்டும், குறை கூறிக்கொண்டும் இருப்பது முறையல்ல, தம்மிடமுள்ள மாற்றீடு என்ன என்பதனை சொல்ல வேண்டும், ஆனால் அவர்களால் சொல்ல முடியாது.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வை விட சிறந்த சாத்தியமான தீர்வை இவர்களால் மட்டுமல்ல, யாராலும் முன்வைக்க முடியாது.
தமிழ் மக்கள் நாம் முன்வைத்துள்ள தீர்வை எந்த அளவு ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்திற்கு நீங்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
தமிழர்களில் யாராவது ஒரு சிலர் தமது வாக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்காமல், தவறியேனும் கொள்கை இல்லாதவர்களுக்கு வழங்கினால், அவை தீர்விற்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவதுடன் , தமிழர்களே தீர்வை விரும்பவில்லை என்று வழங்கிய அங்கீகாரமாகவும் கருதப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
ஆகவே தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு தீர்க்கமான சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் முறையாக பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6252

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.