«

»

விடியலைத் தேடும் தமிழினம்

mangala samaraweera
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் உரை, இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை என கூட்டத்தொடரின் ஆரம்ப நாளே அமர்க்களமாக அமைந்திருந்தது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் இங்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நடைபெறவுள்ள பல விடயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளகப் பொறிமுறைக்கான சர்வதேசத்தின் ஆதரவைக் கோரியிருந்தார்.
குறிப்பாக தேசிய அரசாங்கம், புதிய ஆட்சி, எதிர்க்கட்சித் தலைவர், பிரதம நீதியரசர் பதவிகளில் தமிழர், நல்லிணக்கச் செயற்பாடுகளில் கடந்த கால தோல்விகள், பயங்கரவாதம், இனவாதம் தோற்கடிக்கப்பட்டமை, அரசமைப்பின் வரையறைக்குள் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதிக்கும், மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கும், நட்டஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க சுயாதீனமான, பொறிமுறைகளை ஏற்படுத்தும் திட்டத்தின் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கான தீர்வு, குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்து ஆராய அலுவலகம், நீதித்துறை பொறிமுறைக்காக விசேட ஆலோசனை குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல்போனோரை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கான அலுவலகம், இராணுவத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை, நீதி மற்றும் நிர்வாகத்துறை மறுசீரமைப்பின் முக்கியத்துவம் அதன் ஊடாக பொறுப்புக்கூறல், சட்டத்தை ஆட்சிப்படுத்தல், மனித உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்தல், சர்வதேச, துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறல், விசேட அறிக்கையாளர்களை வரவழைத்தல், நபர்கள், அமைப்புக்கள் தொடர்பாக மீளாய்வு உள்ளிட்ட விடயங்களை தனதுரையில் குறிப்பிட்ட வெளி விவகார அமைச்சர் நீண்டதூரம் பயணித்து விட்டதாகவும் தொடர்ச்சியான பயணத்திற்கு நம்பிக்கையுடன் இணைந்து கொள்ளுமாறும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இவ்வுரையில் சில விடயங்கள் குறித்து கருத்தாழமாகச் சிந்தித்துப் பார்க்கையில் அரசாங்கம் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சிட்டு தன்னை நியாயப்படுத்துகின்றது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகின்றது.
நீதியை நிலைநாட்டல், பொறுப்புக் கூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் தமது அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் காலவரையறையின்றி குறிப்பிட்டுள்ள விடயங்கள் முழுமையாக செயல்வடிவம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
அதேநேரம் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளும், இத்தனை காலம் ஏமாற்றுப்பட்டும் தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் திடீரென இத்தனை வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியுடனேயே பார்க்கப்படுகின்றது.
இதுவொருபுறமிருக்கையில் முதலாவதாக, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அது அவசியமானதாகும் என குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் கனவான்கள் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலத்திலேயே பெரும்பான்மையினருக்காக பல வழக்குகளில் ஆஜரான சேர்.பொன்.இராமநாதன் 1922 காலப் பகுதியிலேயே ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒன்றாக தூங்கும் நிலை இங்கு இல்லை என்பதை கூறிவிட்டார்.
1948ம் ஆண்டு இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களின் அர்ப்பணிப்புக்கள் காத்திரமாக இருந்தன. குறிப்பாக சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி ஒவ்வொரு சமூகமும் நிகரான பங்களிப்பையே வழங்கியிருந்தன.
ஆனால், அந்த வரலாற்று உண்மையை மறுதலித்த சிங்கள அரசியல் சமூகம் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறையை கையிலெடுத்தது. இந்த நாட்டின் விடுதலையில் தமிழினத்திற்கு பங்களிப்பே இல்லை, தமிழினம் இந்த நாட்டிற்கு உரித்துடையவர்கள் அல்லர், இந்த நாட்டை சொந்தங்கொண்டாட முடியாது, தமிழினம் வந்தேறுகுடிகளே போன்ற நிலைப்பாட்டில் அழுத்தந்திருத்தமாக இருந்து தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தது.
இதனால் தமிழினத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டன, அடக்குமுறைக்குள் மௌனிக்க வேண்டிய சூழல் உருவெடுத்தது, இன முறுகல்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக தமிழர்களின் தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் தலைமையில் காலக்கிரமத்தில் அறவழிப்போராட்டங்கள் எழுச்சியடைந்தன. அவையும் நசுக்கப்படவே பிரிந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் தனிநாட்டு அறைகூவல் விடுக்கப்பட்டது.
அந்த அறைகூவலால் தமிழினம் விழித்துவிடக்கூடாது என்பதற்காக 1983ல் கோரமான இனக்கலவரமொன்று அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னரான காலப்பகுதியில் உரிமைகளைப்பெற்று விடுதலையடைவதற்காக முன்வந்த இளைஞர்கள் தற்காப்புக்காக ஆயுதமேந்தினார்கள்.
தற்காப்புக்காக பல்வேறு இளைஞர் குழுக்கள் ஆயுதமேந்திய போதும் ஒரு தரப்பினரே முப்படையையும் கொண்ட அமைப்பாக விளங்கி விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்த வேளை, தனியே போர்த்தன்மையுடைய தரப்பாக சித்திரிக்கப்பட்டு பயங்கரவாத பட்டஞ்சூட்டப்பட்டது.
மாறிவந்த உலக அரசியல் ஒழுங்கில் பெருமெடுப்பில் காட்டப்பட்ட அத்தரப்பைக் கட்டுப்படுத்த முனைந்தே இத்தனை வலிகளும் வடுக்களும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் சர்வதேசத்தில் வியட்நாம், கொசோவா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, எல்சல்வடோர், நிகரகுவா, சூடான், திமோர் உட்பட பல நாடுகளில் உரிமைகளுக்காக போராடிய மக்கள் கூட்டத்தின் போராட்டங்களை நசுக்க முனைந்ததன் காரணத்தாலேயே அவை ஆயுதரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தன. அவ்வாறாயின் அப்போராட்டங்கள் அனைத்துமே பயங்கரவாத போராட்டங்கள் எனக் கருதமுடியாது.
அவ்வாறிருக்கையில், இங்கு இன நல்லிணக்கம் தொடர்பாக பேசவிளையும் பிரதான தரப்பு போர்வெற்றியை மையப்படுத்தும் வகையில் உரிமைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதானது அடிப்படையிலேயே மாறுபட்ட பிரதிபலிப்பையே வெளிப்படுத்துகின்றது.
இரண்டாவதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கியுள்ளதாகக் கூறியிருக்கின்றார். 1977ம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு பின்னர் மீண்டுமொருமுறை தமிழர் ஒருவருக்கு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதனை யாரும் இட்டுக்கட்டி வழங்கவில்லை.
நடைபெற்று நிறைவடைந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினத்தின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கூட்டு அரசாங்கத்தை அமைத்து ஆட்சியாளர்களாக உருவெடுத்த நிலையில் பாராளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு அமைவாகவே வடகிழக்கில் தனித்து போட்டியிட்டு 16 ஆசனங்கள் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அப்பதவி கிடைத்துள்ளது.
அப்பதவி மறுக்கப்பட்டிருக்குமாகவிருந்தால் ஜனநாயகம், நல்லாட்சி என்பன வெறுமனே கானல் நீராகவே இருந்திருக்கும்.
மூன்றாவதாக பிரதம நீதியரசர் விடயம். முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முறையற்ற வகையில் பதவி விலக்கப்பட்டு 2013 ஜனவரி 15ம் திகதி பிறிதொரு நீதியரசருக்கு அப்பதவி வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 2015, ஜனவரி 8ல் சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சி அகற்றப்பட்டு, நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட முறைமை தவறு என்பது உறுதிப்படுத்தப்பட்டு, மீண்டும் அவருக்கான அங்கீகாரம் ஜனவரி 28ம் திகதி அளிக்கப்பட்டது.
ஆகவே, முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசருக்கான அங்கீகாரம் வழங்கப்படுகையில், அவரைத் தொடர்ந்து அப்பதவியில் அமர்த்தப்பட்டவரின் நியமனம் முறையற்றதாகி விடுகின்றது.
அதனடிப்படையில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது ஓய்வை அறிவித்தவுடன் சட்டத்தரணியாகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பிரதி சட்டமா அதிபராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும், பதில் பிரதம நீதியரசராகவும், பணியாற்றிய கனகசபாபதி சிறிபவன் ஜனவரி 30ம் திகதி பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
பிரதம நீதியரசர் பதவிக்கு அனைத்து வகையிலும் உரித்துடைய ஒருவருக்கே அப்பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த நியமனத்தில் இன, மத, மொழி விடயங்கள் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது வெளிப்படையானது.
நான்காவதாக, சுதந்திரத்தின் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகள் தோல்வியடைந்திருக்கின்றன. அரசியலமைப்பின் வரையறைக்குள் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதிக்கும், மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்குமுரிய நடவடிக்கைகள், இராணுவத்தின் ஒரு சில பதவிகளின் பொறுப்புக்களின் முறைமை காரணமாக நன்மதிப்பு பாதிக்கப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இக்கருத்துக்கள் மூலம் பல்வேறு விடயங்களை அரசாங்கத் தரப்பினர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றே பொருள்படுகின்றது. குறிப்பாக சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைமைகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என்பனவற்றை நல்லிணக்கத்திற்கான அடித்தளங்களாக கருதுவோமாயிருந்தால் அவை முழுமையடையாமையை ‘தோல்விநிலை’ எனக் கொள்ள முடியும்.
ஆனால் அதற்கு காரணமான தரப்பினர்கள் யார் என்பதை இங்கு ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது வெளிப்படுத்துவதற்கோ தற்போதுவரையில் அரசாங்கம் தயாராகவில்லை.
அதுமட்டுமன்றி இங்கு இடம்பெற்ற விடயங்கள் மீள நிகழாமலிருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறியிருப்பதன் மூலம் நீதிக்கு புறம்பாகவும் மனித குலத்துக்கு எதிரான விடயங்கள் இடம்பெற்றன என்பதை நேரிடையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை புறந்தள்ளியதன் காரணமாகவே நன்மதிப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுள்ள வெளிவிவகார அமைச்சரின் உரை அது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்து அதற்குரிய கருமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
எனினும் சர்வதேச விசாரணைக்கோ அல்லது சர்வதேச நியமங்களின் கீழான விசாரணைக்கோ தாம் ஒருபோதும் தயாரில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு தயாராகவில்லை.
ஆட்சியாளர்கள் இவ்வாறான உடும்புப்பிடியைத் தொடர்ந்து கொண்டிருக்கையில் ஆறு தசாப்தகாலமாக பாதிக்கப்பட்ட தரப்பாகவிருக்கும் தமிழ் மக்களுக்கு பதினொருநிமிட வாக்குறுதிகள் எவ்வாறு நீதியை, நியாயத்தை வழங்குமென எதிர்பார்க்க முடியும்? நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்வதாகக் கூறப்படும் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொள்ள முடியும்?
கடந்த ஆட்சியாளர்களை விடவும் ஜனவரி எட்டாம் திகதிக்கு பின்னரான நிலைமைகள் மென்போக்கடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். எனினும் தமிழ்த் தலைமைகளுக்கு கிடைத்த பதவிகள், அவற்றின் செயற்பாடுகள் என்பனவற்றை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி அதனை நல்லிணக்க செயற்பாடுகளின் அங்கங்களாக அர்த்தம் கற்பிக்க முயல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் இன்று வெளியிடப்படவுள்ள விசாரணை அறிக்கையில் பல்வேறு பாரதூரமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தனது உரையின் போது தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய தினம் அவ்வறிக்கை வெளியிடப்படவிருக்கின்றது. இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருக்கின்றது.
இந்நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அதனைத் தொடர்ந்த சர்வதேச நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றம் என்பன ஐ.நா. உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையை வலியுறுத்தும் அல்லது அழுத்தமளிக்கும் விடயங்களில் பாரிய தாக்கம் செலுத்தும் என்பது கண்கூடு.
தற்போதைய நிலையில் உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழினம், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உகந்த தருணமாகவே உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடுவோமாகவிருந்தால் மறுக்கப்படும் உரிமைகள் மறுக்கப்பட்டவையாகவே இருக்கும். அதேபோன்று இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கும் நியாயமான நீதி என்றுமே தேடலாகவே இருக்கும்.
தற்போது தமிழர்களின் பிரச்சினை சர்வதேச ரீதியாக முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அதனைச் சரியாக உணர்ந்து உரிய அணுகுமுறைகள் ஊடாக அப்பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெறும் செயற்பாடுகளை உயிர்ப்புடையதாக மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய நகர்வுகளை தற்போதைய பேரவைக் கூட்டத்தொடரில் நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்பை முழு மையாக உள்வாங்காது சர்வதேசத்தை பார் வையாளராக நிலைப்படுத்தி நியாயத் தைப் பெறமுடியும் என நம்பியிருப்போமாகவிருந்தால், இலங்கையின் இறைமை என்ற வட்டத்திற்குள் எம்மால் தலையீடு செய்ய முடியாது, என்ற நியாயப்படுத்தல்களையே எமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு சர்வதேசத்திடமிருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் பதில்களாக அமையும்.
எனவே, நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பது வாழ்வதற்கான உரிமைகளை உறுதிப்படுத்தல், மொழி, மத உரித்துக்களை உறுதிப்படுத்தல், நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை பொறி முறையின் அடிப்படையில் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பக்கச் சார்பின்றி சர்வதேச நியமங்களின் கீழ் நீதியை வழங்கல், மனிதாபிமான, மனித உரிமை மீறல்கள் மீள நிகழாமை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் அதன் ஊடாக மக்களின் துயரங் களிற்கு தீர்வைக் காணக்கூடிய வகையில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்பதை அங்கீகரிப்பதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
தற்போது இவ்விட யங்களில் ஒரு சில படிநிலைகளை இதயசுத்தியோடு அறிவித்திருக்கின்றமை உண்மையாகவிருந்தால் ஆகக்குறைந்தது அவற்றையாவது குறுகியகால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நல்லிணக்க பணிகளை பட்டியலிட்டு உடனடியாக அவற்றைச் செயல்படுத்திக் காட்டவேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது.
அவ்வாறில்லையேல் இது வரை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதைப் போலவே ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் கண்களில் மீண்டும் மண்ணைத்தூவி அவர்களையும் ஏமாற்றி பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை நிலைநிறுத்தும் செயற்பாடுகள் தொடருமா என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் வினாவுக்கு அரசாங்கமே பதிலளிக்கவும் தலைப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6679

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.