«

»

வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.

srilanka
இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.
ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது.
2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியே இவ்விசாரணை அமையவிருக்கின்றது. இது தொடர்பாகவே இலங்கை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளில் இருந்து அதிகம் பேசப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருந்த ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதற்கு தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் என்று தான் எடுத்த இனப்பிரச்சினை சிக்கலை இலங்கையிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறது.
அதாவது இது உங்கள் பிரச்சினை, நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதைப் போல. அழித்தவர்களும் இலங்கையர்கள் தான். அழிக்கப்பட்டவர்களும் இலங்கையர்கள் தான்.
ஆகையால் இலங்கையர்களே அதை விசாரிப்பது நல்லது. இதற்குள் நாங்கள் எதற்கு என்பதைப் போல இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின்னரான சர்வதேசத்தின் இலங்கை மீதான கண்காணிப்பு.
இவ்விடத்தில் பல உள்ளக மற்றும் சர்வதேச முரண்பாடுகள் உண்டு என்பதையும், அதையும் தாண்டிய பல சிக்கல்களையும் ஆராய வேண்டிய தேவை நமக்குண்டு.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை அது தனது அரசியல், இராஜதந்திரக் கொள்கைகளை தமிழர்களை அழிப்பதிலும், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை சிதைப்பதிலுமே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக சர்வதேச விசாரணைகளும், போர்க்குற்றவாளிகளும் என்று இப்பொழுது பேசப்படுபவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவர் சகோதரர்களும், மற்றும் இராணுவத்தில் உள்ள சில வீரர்களுமே.
மற்றைய யாரும் போர்க் குற்றவாளிகளாக நாமும் சரி சர்வதேசமும் சரி பேசிக்கொள்வதும் இல்லை. அலட்டிக் கொள்வதும் இல்லை.
ஆனால் மிகப்பெரிய போர்க்குற்றவாளிகள் யார் என்று நோக்கில், அவர்கள் வேறு யாருமல்ல. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தினர் என்பது தெளிவாகும்.
இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகட்டும் இரண்டு கட்சியுமே தமிழின அழிப்பை பாரபட்சமின்றி செய்து முடித்த மகா உத்தமர்கள் தான்.
சாதாரணமாக நமக்கு அதிகம் தெரிந்த இனவழிப்புக்களை இங்கே நோக்கின் 1983ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இலங்கையின் அதி உச்சமான மோசமானதொரு கலவரமாக இன்று வரை நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்துகின்றது.
எனில் தமிழர்களின் சொத்தாக இதயமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட போது அத்தனை ஈழத் தமிழனின் இதயம் மட்டுமல்ல, உலகத் தமிழினத்தின் உடலையும் பொசுக்கியது.
அது தமிழர்களின் அடையாளமாக, சொத்தாக, வரலாற்றுச் சின்னமாக, தமிழர்களின் அறிவுப் பொக்கிசமாக திகழ்ந்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் அறிவுத் தேடலை மழுங்கடித்தாலே போதும். அது தானாகவே அழிந்துவிடும்.
அதனை இலக்கு வைத்தே இதனைச் செய்தனர். அதை வேறு யாரும் செய்யவில்லை. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி,
இன்னுமொருவர் இருக்கிறார். அவர் கணவனை இழந்தவர் அதனால் குடும்பங்களின் வேதனைகளை அறிந்தவர். ஒரு பெண். ஆகையால் எங்கள் துன்பங்களை நன்கு உணர்ந்திருப்பார். அதனால் ஆட்சிப் பொறுப்பேற்றதும் எங்கள் துயர் துடைப்பார். என்று தமிழர்கள் எண்ணியிருக்க,
வந்தவர், ஜனாதிபதி ஆசனம் ஏறியவர், செய்வார் என்று நினைக்க, செத்துமடி என்று இலங்கை அரசியல் பல்லவியை பாடினார். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டன.
அவர் தான் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய பங்காற்றிய, இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையில் இரண்டு முறை ஒய்யாரமாக ஆட்சி செலுத்திய உலகின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க.
அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்காத கொடுமைகள் இல்லை.
தேவாலயங்களிலும், ஆலங்களிலும், பாடசாலைகளிலும், வயல் வெளிகளிலும் விமானக் குண்டுமழை பொழிந்தவர். எத்தனை உயிர்கள் சிலுவையின் மடியிலும், கருவறை தெய்வத்தின் மடியிலும் கசங்கிப் போயின.
இன்றுவரை எங்களை இன்னுமொரு அழிப்பு நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றது. அவள் தான் எங்கள் கிரிசாந்தி அக்கா. செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கபட்டவள் தான் எங்கள் அக்கா.
அக்கா வேறு யாருடைய ஆட்சிக் காலத்தில் புதைக்கப்பட்டாள்? சமாதானப் புறா உன்று வர்ணிக்கப்பட்ட அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா.? செம்மணிப் புதைகுழி யாருடைய காலத்தில் என்று நாங்கள் இங்கே எழுதித் தான் தெரிய வேண்டுமா?
இப்படி ஆட்சி ஏறிய இவர்கள் அனைவரும் தமிழ் இனத்தை வேர் அறுக்கத் தானே களம் புகுந்தனர். தவிர இவர்களுக்கு வேறு திட்டங்களே இருந்ததில்லை.
இன்னும் ஒருபடி மேல் சென்று பார்த்தால் இன்னொன்று புரியும். ஜனாதிபதியாக சந்திரிக்கா இருக்க, பிரதமராக ரணில் பதவி வகிக்க, புலிகளை சமாதான ஒப்பந்தத்தை செய்து முடித்த சந்திரிக்கா, ஆட்சியை கலைத்து மகிந்தரை பிரதமர் ஆக்கினார்.
பின்னர், தனது ஆட்சிக் காலம் முடிய அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கும் அரும்பாடுபட்டார். புலிகளுடன் ரணில் மூலம் ஒப்பந்தம் செய்து மகிந்தரை ஆட்சி ஏற்றி, முள்ளிவாய்க்கால் கொடுமையான யுத்தத்திற்கு வழியமைத்தவர்கள் இந்த ரணிலும் சந்திரக்காவுமே.
ஆனால் கால மாற்றத்தின் கோலமோ என்னமோ இவர்கள் உள்ளக விசாரணையை இலங்கை அரசாங்கமே செய்யும் என்று கூறுகின்றார்கள். அதாவது இதுவரை காலமும் அழித்தவர்களிடமே அதற்கான விசாரணையையும் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள்.
எப்படியிருக்கின்றது தமிழனின் நிலமை. அவர்களாலேயே அழிக்கப்பட்டு, அவர்களாலேயே பாடை ஏற்றப்பட்டு, நாசமறுக்கப்பட்ட கையறு நிலையில் சர்வதேசமானது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் ஏதேனும் உபகாரம் செய்யும் என நினைத்தால், அது சொல்கிறது உள்ளக விசாரணைப் பொறிமுறையினூடாக தீர்வு காணப்படும் என்று.
கடவுளே..! இங்கே இவர்கள் யாரை யார் விசாரிப்பார்கள்? அனைவருமே போர்க்குற்றம் செய்தவர்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாகட்டும், முன்னாள், இந்நாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவாகட்டும்,
ஏன் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வன்னிப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தான்.
ஆக! இன்றைய நிலவரப்படி இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான உள்ளக விசாரணையானது யாரால்? யாரை? எப்படி? மேற்கொள்ளப்படும் என்பதே கேள்வி?
தவிர, எக்காலப்பகுதியில் எந்த ஆட்சியாளரின் வழிநடத்தலில் எங்கே வைத்துக் கொல்லப்பட்டனர் என்றும் விசாரணைகளை யார் மேற்கொள்வார்கள்.?
நல்லாட்சி எனும் அரசாங்கமே இனப்படுகொலையாளிகளின் கூட்டாக இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்தும் எனக் கூறும் போது தமிழ் மக்கள் என்ன நினைப்பர்?
கடவுளே இது அடுக்குமா? இத்தனை உயிர்களும் காவு கொள்ளப்பட்டு, உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்த தமிழர் விவகாரத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்றால் அதே சர்வதேசம் உள்நாட்டில் விசாரித்து தீர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது.
இது தான் ஜனநாயகமோ? இது தான் அரசியல் சாணக்கியமோ? காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.
உண்மையில் இலங்கையில் ஒரு அதிசயம் நடக்கத்தான் போகின்றது. குற்றவாளிகளே குற்றங்களைப் பற்றி விசாரித்து தாங்களே அதற்கு தீர்வினை அறிவித்து தண்டையையும் ஏற்கப்போகின்றார்கள். அதை தமிழர்கள் பார்த்து மனம் மகிழ்ந்து கொள்ளுங்கள்.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மெல்ல தலைப்படுகின்றது. இன்னும் எத்தனையோ விடையங்களை காணவேண்டியிருக்கின்றது.
காத்திருப்போம். இன்னும் எத்தனையே அதிசயங்களை ஈழத்தமிழினம் காணப்போகின்றது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6697

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.