«

»

புலிகளின் அழிவும் இந்தியாவும்!

எரிக் சொல்ஹெய்ம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் என்பதை இந்தியா கடைசி சில மாதங்களில் தான் உணர்ந்து கொண்டதாக அண்மையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், நோர்வேயின் முன்னாள் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா விரும்பியது என்றும், அவர்கள் அழிக்கப்படப் போகிறார்கள் என்பதை கடைசி மாதங்களில் இந்தியா உணர்ந்து கொண்ட போதிலும், அவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட இந்தியா விடவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
போர் இறுதிக்கட்டத்தை அடைவதற்கு பல மாதங்கள் முன்னர் வரை, விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் என்று இந்தியா நம்பவில்லை என்றும், தமது சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளித்து வந்தது என்றும், ஆனால் கடைசி சில மாதங்களில், புலிகள் அழிக்கப்படுவதை இந்தியா எதிர்பார்த்திருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அவர் இந்தக் கருத்தை வெளியிட்டது, இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஒரு முன்னாள் சமாதானத் தூதுவர் என்ற நிலையில் இருந்து தான்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போரை நிறுத்துவதற்கு நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து வந்தது என்ற அடிப்படையில் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளித்த காரணத்தினால், விடுதலைப் புலிகள் அழிக்கப்படப் போகிறார்கள் என்று இந்தியா நம்பவில்லை என்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.
போர் முடிவுக்கு வருவதற்கு பல மாதங்கள் முன்பு வரை, விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்று இந்தியா நம்பவில்லை என்று அவர் கூறியிருந்ததன் அடிப்படை அது தான்.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதை விரும்பியது, அதனை எதிர்பார்த்துக் காத்திருந்தது என்பதே, அரசியல் பரப்பில் உள்ள பொதுவான ஒரு நம்பிக்கையாகும்.
நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு எந்த அடிப்படையில் இருந்தது என்பதை ஊகிக்க முடியாது போனாலும், விடுதலைப் புலிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தியா அறிந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்களிடம், இந்தக் கருத்து 2007ஆம் ஆண்டு பிற்பகுதியிலேயே தோன்றி விட்டது.
அதற்குக் காரணம், அரசபடைகள் வகுத்திருந்த போர்த்திட்டம் தான்.
வடமேற்கு மன்னார் கரையோரத்தைக் கைப்பற்றி, புலிகளைப் பரந்துபட்ட அளவில் போருக்கு இழுத்து அழிக்கும், அந்தப் போர்த் திட்டத்தின் இறுதி முடிவை இந்தியப் போர் வல்லுநர்கள் பலரும் சரியாகவே கணித்திருந்தனர்.
இந்தியப் போர் வல்லுநர்கள் மட்டுமன்றி, அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்கும், இந்தப் போர்த் திட்டம் விடுதலைப் புலிகளை அழிவுக்குள் கொண்டு செல்லும் என்றே கணித்திருந்தார்.
அவர் வாஷிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியிருந்த தகவல் குறிப்பு ஒன்றில் அதனைக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் விக்கிலீக்ஸில் அந்த தகவல் குறிப்பு வெளியாகியிருந்தது.
அரசபடைகள், வடமேற்குக் கடலோரப் பகுதி ஊடான தாக்குதலைத் தொடங்கிய போது, புலிகள் இலகுவாக வீழ்த்தப்பட்டு விடுவார்கள் என்றே இந்தியப் பாதுகாப்பு வல்லுநர்கள், ஆய்வாளர்கள் கருதியிருந்தார்கள்.
அதனால் தான், விடுதலைப் புலிகளால் ஆறு மாதங்கள் வரை தான் தாக்குப் பிடிக்க முடியும் என்று, 2007ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் கணக்குப் போட்டிருந்தனர்.
புதுடில்லியை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனையாளர் குழாம் அமைப்பின் சென்னையிலுள்ள அலுவலகத்தில், 2007ஆம் ஆண்டின் பின் அரைப் பகுதியில், நடந்த ஒரு கலந்துரையாடல் அது.
அதில், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வுகளை எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் மற்றும், இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வுகளை எழுதி வருபவருமான கொமடோர் வாசன் ஆகியோர், பங்கேற்றிருந்தனர்.
இதில் அவர்கள் இருவருமே, விடுதலைப் புலிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூறியிருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருந்தன.
கப்பல் மூலம் ஆயுதங்களைத் தரையிறக்கும் வாய்ப்புகள், அவர்களுக்கு குறைந்து போயிருந்த காலகட்டம் அது.
வடமேற்கு மன்னார் கரையோரத்தைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் விடுதலைப் புலிகளின் விநியோக வழிகள் அடைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது விடுதலைப் புலிகளுக்கு, தமிழ்நாடு வழியான விநியோகமே பிரதானமாக இருந்தது.
இலுப்பைக்கடவை, நாச்சிக்குடா, பூநகரி பிரதேசங்களைப் படையினர் கைப்பற்றியதன் மூலம், வடமேற்கு கடலோரம் வழியான புலிகளின் விநியோக வழிகளை அரசபடையினர் முற்றாகவே அடைத்தனர்.
அது புலிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாயிற்று.
வடமேற்கு கரையோரப் பகுதிகளைப் புலிகள் இழக்க முன்னரே, அதற்கான எதிர்வு கூறலை கேர்ணல் ஹரிகரனும், கொமடோர் வாசனும் அந்தக் கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும், விடுதலைப் புலிகளால் இன்னும் சில மாதங்களே தாக்குப் பிடிக்க முடியும் என்பதே அவர்களின் அப்போதைய கருத்தாக இருந்தது.
ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் அந்தக் கருத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின்னர் தான், மன்னாரின் வடமேற்குக் கடலோரத்தை அரச படையினரால் கைப்பற்ற முடிந்தது.
அதாவது, 2008 ஆம் ஆண்டு நவம்பரில் தான் பூநகரி அரசபடைகளிடம் வீழ்ச்சி கண்டது.
அதற்குப் பின்னரும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலானது.
வட மேற்கு கரையோரத்தைக் கைப்பற்றியதன் மூலம், தமிழ்நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், புவியியல் ரீதியான ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியது அரசாங்கம்.
இதன் மூலம் அரசபடைகளால் விடுதலைப் புலிகளை இலகுவாக வீழ்த்த, முடிந்தது.
கிழக்கு கடற்பகுதி வழியான விநியோகத்தை மட்டும் நம்பி போரைத் தொடர்ந்த புலிகளால், 2009 மே வரை தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அமைதி முயற்சிகளை இந்தியா ஆதரித்தது என்பதற்கு, புலிகளை அழிக்க முடியாது என்ற கருத்துத் தான் காரணம் எனக் கருதுகிறார் எரிக் சொல்ஹெய்ம்.
ஆனால், இந்தியாவின் மத்திய அரசாங்கத்துக்கு அப்போது தமிழ்நாட்டையும் சமாளிக்க வேண்டிய தேவை இருந்ததை அவர் கருத்தில் கொண்டாரா என்பது தெரியவில்லை.
ஏனென்றால், தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க., மத்திய அரசாங்கத்திலும் இணைந்திருந்தது.
எனவே, அதன் நெருக்கடியையும் சமாளிக்க வேண்டிய தேவை மன்மோகன்சிங் அரசாங்கத்துக்கு இருந்தது.
எனவே, புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்தியா அமைதி முயற்சிகளை ஆதரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இந்தியாவின் உண்மையான தோற்றமும் இலக்கும், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிடுவது போன்று, புலிகள் தோற்கடிக்கப்படுவது மட்டும் தான்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை, அவர்கள் இல்லாமல் செய்யப்படுவதை இந்தியா விரும்பியது.
அதனால் தான், போரின் கடைசிக் கட்டத்தில் கூட, அவர்கள் முற்றாகவே அழிக்கப்பட்ட போதும் கூட அவர்களுக்காக குறிப்பாக, தமிழ் மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூரை விடத் தயாராக இருக்கவில்லை.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7005

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.