«

»

கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும்! – தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு

ELUKA TAMIL
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வடகிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மக்களின் ஒன்றித்த குரலாக இப்பேரணி அமைய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
நல்லிணக்க செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வரும் சூழலில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வு சமஷ்டி முறையில் இருக்கப் போவதில்லை.
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணையில் சர்வதேச பங்களிப்புக்கு இடமில்லை. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பேயில்லை என சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இவ்வாறு ஒன்றித்த குரலாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லவேண்டிய தார்மீகக் கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு.
சர்வதேச ஒழுங்கு முறைக்கு அமைவாக அடக்கப்பட்ட ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி இன அழிப்பைச் சந்தித்த சமூகமொன்று தனக்கான விடுதலை பற்றி வெளியுலகுக்கு அதியுச்ச அளவில் அழுத்திச் சொல்லவேண்டிய தேவை உள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை வெளிக்கொணருமுகமாக முன்னெடுக்கப்படும். இப்பேரணியில் வடக்கு கிழக்கிலுள்ள அனைவரும் பங்குபற்றி ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை கோரிநிற்பதோடு தனது பூரண பங்களிப்பையும் வழங்கி நிற்கிறது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8752

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.