«

»

எழுக தமிழ்’ என பெயர் பெற்றது ஏன்?

ELUKA TAMIL
எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்” என்று பெயர்பெற்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன்.
எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்டையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலுக்கு இம் மாதம் 10 ஆம் திகதி காலை பவனி வரக் காத்திருக்கின்றார்கள்.
எமது அழைப்பு கட்சி சார்ந்ததல்ல. மதம் சார்ந்ததல்ல. இனம் சார்ந்ததல்ல. எமது அழைப்பு தமிழ்மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசும் யாவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
ஏன் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளீர்கள்? என நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் 85 சதவிகிதத்திற்கு மேல் தமிழ் பேசுவோர் இருந்த காலம் போய் தற்போது மூன்றில் ஒரு பங்கு சிங்கள மொழியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
காணிகள் பறிபோயுள்ளன. கலைகள் சிதைவடைந்துள்ளன. கலாச்சாரம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மொத்தத்தில் “எழுக சிங்களம்” எல்லை தாண்டி வந்து இங்கு குடி கொண்டுள்ளது.
சுயநலம் மிக்க அரசியல்வாதிகளுக்கன்றி மற்றவர்கள் யாவர்க்கும் இது வெள்ளிடைமலை. இது காறும் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் இனியாவது விடிவு காணவே “எழுக தமிழ்” எழுந்து வருகின்றது.
இந்து – முஸ்லீம் மக்களுக்கிடையேயான முரண்பாடுகள் ஆக்கப்பட்டவையே ஒழிய அனவரதமும் அமைந்திருந்த ஒரு நிலைப்பாடு அல்ல. அதைத் தற்போது எமது முஸ்லீம் சகோதரர்கள் தெரிந்து கொண்டு வருகின்றார்கள்.
இந்து, கிறிஸ்தவ, தமிழ் மக்களும் இஸ்லாமியத் தமிழ் மக்களும் காலாதி காலமாகப் பிட்டும், தேங்காய்ப்பூவும் போல் இயைந்து செயற்பட்டுவிட்டு அண்மைக் காலங்களில் மட்டும் ஏன் முரண்பட்டு இருக்கின்றார்கள் என்பதை இருதரப்பாரும் உணர்ந்து கொள்ளவேண்டும்?
முரண்பாடுகள் எம்மேல் திணிக்கப்பட்டதே காரணம். அவ்வாறு திணிக்கப்பட்டதற்கு எமது குறுகிய நோக்கங்கள் கொண்ட அரசியல்வாதிகள் விதிவிலக்கன்று.
தொடர்ந்து வந்த பெரும்பான்மை இனம் சார்பான அரசாங்கங்கள் யாவும் ஒரே நிகழ்ச்சி நிரலிலேயே செயற்பட்டுவருகின்றனர். கட்சிகள் மாறினாலும் கரவான குடியேற்ற எண்ணங்களை எந்தப் பெரும்பான்மைக் கட்சியும் கண்டிக்கவில்லை, கடியவில்லை.
மாறாகத் தாமும் சேர்ந்து வடகிழக்கு மாகாணங்களின் குடிப்பரம்பலை, மொழிப்பரம்பலை மாற்றவே செய்துள்ளார்கள்.
எனவே, வடகிழக்கு இணைப்பு என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் பாதுகாப்புக் கருதியே எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கு இணைப்பொன்றே தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ வழிவகுக்கும்.
இன ஐக்கியத்தைக் கெடுக்கப் பார்க்கின்றார்கள், இன விரிசல்களுக்கு இடமளிக்கப் பார்க்கின்றார்கள் என எம்மேல் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
இதுவரை காலமும் நடைபெற்றுவரும் இன ஒடுக்கல்கள் பற்றி நாம் கூறினால் அது இனவிரிசலாகப் பெரும்பான்மையினராலும், எம்முள் சிலராலும் அர்த்தப்படுத்தப்படுகின்றன.
உண்மையைக் கூறுவதைத் தடுக்க, எம்மைப் பயப்படுத்தி வைக்க இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழி அமைப்பன என்பது அவர்களின் எதிர்பார்ப்புப் போலத் தெரிகின்றது.
இப்பொழுதிருக்கும் சமாதானமானது இன நல்லுறவால் ஏற்பட்ட சமாதானம் அல்ல. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே.
அதனால் தான் இராணுவத்தினரைப் பெரும் அளவினதாக வடக்கிலும், கிழக்கிலும் வைத்திருக்க விளைகின்றனர். மத்தியில் பதவியில் உள்ளோர்.
எங்களிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு உங்களுக்குத் தமிழர்களிடம் இருந்து கிடைக்காது என்று கூறி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் வளர்க்கப் பார்க்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் களையவே அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடையேயும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது எழுந்துள்ளது.
அரசியல் தீர்வு பற்றிப் பேசும் போது தமிழ் பேசும் மக்கள் யாவருமே கூட்டாட்சியாகிய சமஷ்டி முறையே சிறந்தது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
ஆனால், கடந்த கால நிகழ்வுகளின் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் உறுதி தளர்ந்து காணப்படுகின்றார்கள்.
தமிழ் மக்கள் தம்மை ஒதுக்கி விடுவார்களோ, தடுத்து வைப்பார்களோ என்று அச்சம் கொள்கின்றார்கள்.
ஆனால், அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாய் இருந்தால் என்ன?, மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவையாக இருந்தால் என்ன? தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மாகாணங்களில் முஸ்லீம் மக்களுக்காக ஒரு அலகை ஏற்படுத்துவதில் அவர்கள் தம் பூரண சம்மதத்தையே வெளிக்காட்டிவந்து உள்ளார்கள்.
வடகிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ் மொழி பேசப்பட்டு வந்த மாகாணங்களே என்பதை உத்தியோகபூர்வமாகப் பதிந்து வைத்திருப்பது அத்தியாவசியம் என்பது தற்பொழுது எல்லாத் தமிழ் பேசுந் தரப்பாருக்கும் புரிகின்றது. ஆனால், சந்தேகங்கள், ஐயப்பாடுகள் மக்களை ஒருங்கிணைக்கவிடாது தடுக்கின்றன.
எழுக தமிழ்” அரசியல் சார்ந்தது ஆனால் அரசியற் கட்சிகள் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்தது…. ஆனால் சமயங்கள் சார்ந்ததல்ல. தமிழ் மொழி சார்ந்தது ஆனால் தமிழ் மொழியல்லாதவற்றைப் புறக்கணிக்காதது.
தமிழ்மொழிக்கும் அதைப் பேசும் மக்களுக்கும் தக்க ஏற்பினை வழங்க வேண்டும் என்று கேட்டே “எழுக தமிழ்” இம்மாதம் 10 ஆம் திகதி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலில் நடைபெற இருக்கின்றது.
அதில், சகலரும் பங்குபற்ற வேண்டும் எனவும், எமது ஒற்றுமையினை உலகறியச் செய்ய இது ஒரு நல்ல தருணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8881

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.