«

»

கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம்

dru
வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார்.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“வார்த்தைகளினாலோ அல்லது செயல்கள் மூலமாகவோ தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இருதரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு புதிய ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா
வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு எராக ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வடகொரியப் பிரச்சனை உரிய முறையில் கவனிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
“சீனா உதவி செய்ய முடிவு செய்தால், அருமை. இல்லாவிட்டால், அவர்களது உதவி இல்லாமல் அமெரிக்காவே பிரச்சனையைத் தீர்க்கும்” என்று டிரம்ப் எச்சரித்தார்.
ஏற்கெனவே கொரிய தீபகற்பப் பகுதிக்கு தனது போர்க்கப்பல்களை அமெரிக்கா நகர்த்தியுள்ளது.
வடகொரியாவும் எச்சரிக்கை
இது தொடர்பாக வடகொரிய ராணுவம் வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வெளிப்படையாக மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள வடகொரியா, “அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் தூண்டுதலுக்கு ஈவிரக்கமற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் உயிரோடு திரும்ப முடியாத அளவுக்கு அவர்களது கடற்படை மீது தாக்குதல் கடுமையாக இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளது.
டிரம்பின் அதிரடி அணுகுமுறை
அதிரடியான ராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் டிரம்ப் முனைப்புக் காட்டுவதை சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.
சிரியா ரசாயன தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின்பேரில், அந்நாட்டின் விமானத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஆப்கனில், ஐ.எஸ். அமைப்பின் மீது மாபெரும் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் வல்லமையை வடகொரியா பெற்றுவிடும் என்று அமெரிக்கா கவலை கொண்டிருக்கிறது.
சீனாவின் கவலை
அமெரிக்கா – வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டால் அது தனது எல்லையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று வடகொரியாவின் ஒரே கூட்டாளியான சீனா அஞ்சுகிறது.
மேலும், வடகொரிய அரசு வீழ்ந்தால், அது சீனாவுக்கான பாதுகாப்பை மேலும் பலவீனப்படுத்திவிடும். அண்டை நாட்டில், அமெரிக்க ராணுவத் தளம் இருப்பதை அந்த நாடு விரும்பாது.
இன்னொரு அணுகுண்டு சோதனை?
அதே நேரத்தில், வடகொரியா சனிக்கிழமையன்று இன்னொரு அணுகுண்டு சோதனை அல்லது நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தலாம் என்று தீவிர ஊகங்கள் உலா வருகின்றன

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9250

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.