எம்மைப்பற்றி

வணக்கம்
எம் தமிழ் உறவுகளே!
கல் தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தகுடிகள் என்று சொல்லப்படும் தமிழர்களாகிய நாங்கள் இன்று எமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக கையேந்திக் காத்திருக்கும் உலகின் கடைசியினமாக எங்கள் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
வரலாற்றில் பல சாதனைகளை படைத்த எங்கள் தேசத்தின் மக்கள் இன்று தங்களின் எதிர்கால வாழ்க்கையையே எவ்வாறு வாழ்வதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
முப்பதாண்டுகால யுத்தம், இயற்கை அழிவுகள் என அவலங்களோடு பயணித்த இவர்களின் வாழ்க்கையில் இன்று அவலங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றது.
உலகில் எட்டுக்கோடி சனத்தொகையைக் கொண்ட தமிழினத்தில் பிறந்த எங்கள் தேசத்தின் மக்களுக்கான வாழ்வாதார நம்பிக்கையை இன்று யார்?; ஏற்படுத்த போகின்றார்கள் என்ற கேள்வியையே அவர்கள் தங்களின் மனங்களில் சுமந்துகொண்டிருக்கின்றார்கள்.
போராட்டம், போராட்டம், என்று சொல்லி போரிட்ட அமைப்புகளையெல்லாம் வலுப்படுத்திய வெளிநாட்டு, புலம்பெயர் தேசத்து தமிழ் தலைவர்களே நீங்கள் நடத்திய போராட்டத்தின் பிரதான பாத்திரங்களாக இருந்த எங்கள் தேசத்தின் மக்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
போரின் எச்சங்களாக எங்கள் தேசத்தில் சிதைந்துகிடக்கும் ஏராளமான எம் தமிழ் உறவுகளுக்கு யார்?; உதவிசெய்வது 15000இற்கு மேற்பட்ட தாய்,தந்தையை இழந்த சிறுவர்கள், 25,000 இற்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், 50,000ற்கு மேற்பட்ட உறவுகளை இழந்த குடும்பங்கள் என தாங்கள் வாழ்ந்த நிலத்தையும் பல இலட்ச்சம் பெறுமதியான உடமைகளையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் எம் தமிழின உறவுகளுக்கு யார்? உதவி செய்வது.
எங்களுடைய தாயின், எங்களுடைய பிள்ளைகளின், எங்களுடைய உறவுகளின், எங்களுடைய தேசத்தின் துயர்துடைக்க அமெரிக்கா வருமென்று எதிர்பார்ப்பதும், இந்தியா வரும் என்று எதிர்பார்ப்பதும் எங்கள் இனத்தை நாங்களே அழிப்பதற்கு சமமானதாகும்.
எங்களின் தேசத்தை நாங்களே கட்டியெழுப்பவேண்டும் யுத்தம் முடிந்து மூன்றாண்டுகளாகியும் அழிவடைந்த எங்களின் தேசத்தில் எரிக்கை மரங்கள் மட்டுமே வளர்ந்திருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.
புலம்பெயர் தேசத்தில் உள்ள 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களில் 5இலட்சம் தமிழர்கள் எங்கள் தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருந்தால் கூட யுத்தம் முடிந்த இந்த மூன்றாண்டுகளில் எங்கள் தேசம் அபிவிருத்தியில் மீண்டும் எழுச்சியடைந்திருக்கும் ஆனால் நடந்தது என்ன யுத்தத்தின் பின் புலம்பெயர் தேசம் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாக எண்ணிக்கொண்டு தங்களின் கடமைகள் முள்ளிவாய்க்காளுடன் நிறைவடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டு எங்கள் தேசத்தை தங்களின் தாய்மண்ணை மறந்து நிற்கின்றனர்.
இந்த வரலாற்றுத்தவறை மாற்றியமைக்கும் நோக்குடன் எங்கள் தேசத்து மக்களின் சமூக,பொருளாதார,கல்வி, தொழில் அபிவிருத்தியில் எழுச்சியை உண்டாக்கும் நோக்குடன் தமிழ் மக்களின் உறவுப்பாலமாக அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் எங்கள் தேசம் இணையத்தளம் இன்று பிறப்பெடுக்கின்றது.
வரலாறு விட்டுச்சென்ற பாடமும், நிகழ்கால முகமுடி மனிதர்களின் பொய்வாக்குறுதிகளும் எங்கள் தேசத்து மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் சக்தியாக எங்களை மீண்டும் பிறப்பெடுக்கத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு, புலம்பெயர் தொண்டர்களை ஒருங்கிணைத்து செயற்படவிருக்கும் எங்கள் தேசம் இணையத்தளம் முழுக்க முழுக்க வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்கவுள்ளது.
வடகிழக்கில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் ஏனைய அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை சேகரித்து எங்கள் தேசம் இணையத்தளம் வெளியிடவுள்ளதுடன் அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்திட்டங்களையும், ஆலோசனைகளையும் வெளிக்கொண்டுவரவுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிசெய்பவர்களுக்கும் இடையிலான உறவுப்பாலமாக எங்கள் தேசம்  தொடர்ந்து செயற்படவுள்ளது.
அத்துடன் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் கிராமங்களையும் அங்குள்ள மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளையும் வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட கிராமஙகளை அபிவிருத்திசெய்வதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு, புலம்பெயர் தொண்டர்களையும், தொண்டு நிறுவனங்களையும் தூண்டும் சக்தியாக எங்கள் தேசம் தொடர்ந்து செயற்படவுள்ளது.
எந்தவித அரசியல் பின்னணியோ அல்லது வியாபார நோக்கமோ இல்லாமல் வெளிவரும் எங்கள் தேசம் இணையத்தள நிர்வாகத்தின் நோக்கம் முழுக்க முழுக்க வடகிழக்கு மக்களின் மனிதாபிமான தேவைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பது மட்டுமேயாகும்.
எனவே மேற்படி எமது இணையத்தளத்தின் உன்னதமான, உயரிய இலச்சிய நோக்கத்திற்கு உலகத்தில் உள்ள தமிழர்கள் உட்பட அனைத்து மனிதநேயப் பணியாளர்களையும் கைகொடுத்து உதவுமாறு வேண்டிநிற்கின்றோம்.
அத்துடன் எமது இணையத்தளத்தில் அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவோர் தங்களது பிரதேசசெயலாளரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் தங்களது வேண்டுகோளை அனுப்பிவைத்தால் அதனை உறுதிப்படுத்திய பின்னர் எங்களது இணையத்தளத்தில் வெளியிடுவோம்.
இதேபோன்று தற்போது எமது வடகிழக்கு பகுதிகளில் மனிதநேயப்பணிகளை மேற்கொண்டுவரும் உன்னத நோக்கம் கொண்ட மனிதநேய தொண்டர்களும், மனிதநேய அமைப்புக்களும் தங்களது தொண்டு பற்றிய செய்திகளையும்,படங்களையும் அனுப்பிவைத்தால் அதனையும் எங்களது இணையத்தளத்தில் வெளியிடுவோம் அத்துடன் இலை மறை காயாகவுள்ள தொண்டர்களையும் அவர்களது பணிகளையும் கொளரவப்படுத்துவதற்கும் எமது இணையத்தளம் தயாராகவுள்ளது எனவே அவ்வாறானவர்களையும் எமது இணையத்தளம் ஊடாக வெளிக்கொண்டு வாருங்கள்.
இதைவிட வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுப்பது சம்பந்தமான செயற்திட்டங்கள், ஆய்வுக்கட்டுரைகள், கல்வி அபிவிருத்தி சம்பந்தமான பரிந்துரைகள்,ஆலோசனைகள், விமர்சனங்கள், புறக்கணிப்புக்கள் போன்ற பல விடயங்களையும் வெளியிடவுள்ளதால் இது சம்பந்தமான விடயங்களையும் எமக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டிநிற்கின்றோம்.
எனவே அன்புள்ள தமிழ் மக்களே உங்கள் தேசத்தின் குரலாக வெளிவரவுள்ள எங்கள் தேசத்தின் சேவையினை ஊக்கப்படுத்தி தமிழர் தாயகத்தின் மீள்கட்டுமான எழுச்சிக்கு உந்துசக்தியாக பயணிப்பதற்கு எங்கள் தேசம் இணையத்தளத்துடன் கைகோர்க்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.
“இருட்டு இருட்டு என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட நாங்கள் ஒரு மெழுகுதிரியை ஏற்றுகின்றோம். நீங்களும் ஆழுக்கொரு மெழுகுதிரியை ஏற்றினால் தமிழர்களின் வாழ்வில் இருள் நீங்கும்”

- நன்றி -

எங்கள்தேசம்

நிர்வாகம்

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?page_id=41

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.